அதிகரித்து வரும் உணவு கையிருப்பு குறித்த நிச்சயமற்ற நிலை
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அதிகரித்து வரும் உணவு கையிருப்பு குறித்த நிச்சயமற்ற நிலை
நெல் அறுவடையில் வீழ்ச்சி, சர்வதேச ரீதியில் உயர்ந்து வரும் உணவு பொருட்களின் விலைகள் மற்றும் நிலை கொண்டுவிட்ட போர்ச் சூழல் யாவும் இணைந்து பல்லாயிரக்கணக்கான இலங்கையர்கள் அன்றாடம் உணவு பெறுவதில் நிச்சயமற்ற நிலையை அதிகரித்துள்ளன.
அரசாங்கத்தின் சமீபத்திய மதிப்பீடுகளின்படி நாளாந்த குறைந்தபச்ச தேவையான 2030 கலோரிகளை நாட்டின் 20 மில்லியன் சனத்தொகயில் அரைவாசியினர் மட்டுமே பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 2008 இல் புள்ளி விபர திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட வறுமைக்கோட்டு குறியீடுகள் - குடும்ப வரவு, செலவு தகவல் அளவீடு-2006/7, என்ற அறிக்கை மேலும் தெரிவிக்கையில், "இலங்கையில் சராசரி வறியவராக கருதப்படுபவர் 1,696 கலோரிகளையும் வறுமைக்கோட்டிற்க்குள் இல்லாதோர் 2,194 கலோரி உணவுகளையும் பெறுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் உள்ளக இடப்பெயர்வுக்குள்ளான குடும்பத்தினர் உணவு பகிர்ந்து கொள்கின்றனர்: படம்: அமாந்த பெரேரா
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச உணவு ஸ்தாபன அதிகாரிகளின் தகவலின் படி கிராமப்புறங்களில், முக்கியமாக 25 வருடங்களுக்கு மேல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு-கிழக்கு பிரதேசங்களில் கணிசமானளவினர் போஷாக்கு குறைவான நிலையில் உள்ளனர்.
சர்வதேச உணவு ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதி தலைவர் ஜீன் யீவ்ஸ் லிக்கியும், "போஷாக்கு குறைவானவர்கள் வடக்கு-கிழக்கிலும் மற்றும் நாட்டின் மத்தியில் உள்ள குறிக்கப்பட்ட சில வரண்ட பகுதிகளிலுமே கூடுதலாக காணப்படுகின்றனர்," எனத் தெரிவித்துள்ளார்.
"எமக்கு கிடத்துள்ள தகவல்களின்படி இப் பகுதிகள் நாட்டின் மிக வறிய பகுதிகளை உள்ளடக்குவதுடன், அதிகளவு போஷாக்கின்மை, குறைவான கல்வித்தரம், சுகாதாரயீனம் என்பனவும் ஒருங்கிணைந்து போஷாகின்மைக்கு வழிகோலுகின்றன," என மேலும் தெரிவித்துள்ளார் லிக்கியும்.
பொதுவாக வறுமை, அதே நேரம் அதிகளவில் சக்தியின் தேவைப்பாடுகள் என்றே கிராமப்புற நிலவரங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார் கொழும்பில் உள்ள சர்வதேச சிறுவர் கல்வி நிதியத்தின் தொடர்புத்துறை தலைவர் கோர்டன் வெயிஸ். "முக்கியமாக விவசாயம் சார்ந்த கிராமப் பகுதிகளில், பாரியளவில் வேலைகள் உள்ளதனால் அவர்களுக்கு கூடுதலளவில் கலோரிகள் தேவையாகவுள்ளது. பெரும்பான்மையான கமம் சார்ந்த பகுதிகள் வறிய பகுதிகளாகவே உள்ளன."
"இலங்கையில் சிறார்களிடையேயான போஷாக்கு குறையீனம், மொத்த உள்நாட்டு உற்பத்தியுடனான (US $ 1,599) ஒப்பீட்டளவு எதிர்பார்ப்புகளைவிட கணிசமானளவு அதிகமாகவேயுள்ளது," எனத் தெரிவித்துளார் லிக்கியும். "உண்மையில் இலங்கையில் நிலவும் சிசு மரண புள்ளி விபரங்களுடன் ஒப்பிடும் போது, இங்குள்ள சிறார் நிறைக்குறைவு நிலையானது மூன்று மடங்கு அதிகமாயுள்ளது."
சர்வதேச சிறுவர் பராமரிப்பு நிதியம், இலங்கையில் 14 வீதமான ஐந்து வயதிற்குட்பட்ட சிறார்கள் கடுமையான நிறைக்குறைவிலும், 29 வீதமான ஐந்து வயதிற்குட்பட்ட சிறார்கள் தொடர்ச்சியான நிரந்தர நிறைக்குறைவிலும் இருப்பதாக தெரிவித்துள்ளது.
சர்வதேச சிறுவர் பராமரிப்பு நிதிய அதிகாரி வெயிஸ், எவ்வாறாயினும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கூடியளவு வீதத்தில் நிறை குறைவான சிறார்கள் பதிவாகியுள்ளதாயும் தெரிவித்தார்.
கூட்டு மொத்தத்தில், அரசாங்கதிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் தொடரும் யுத்தத்தினால், போர் சூழ்ந்த பிரதேசங்களில் வாழ்பவர்களது உணவுக் கையிருப்பிற்கான நிச்சயத்தன்மை, போஷாக்கு நிலை என்பவற்றின் மீது கேள்விக்குறிகள் வளர்ந்துள்ளன.
யுத்தத்தினால் பாதிகப்பட்ட இடங்களில் உணவு பெறுவதில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்தளவு காணப்படுகிறது; இவ்வாறு சர்வதேச உணவு ஸ்தாபனத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மனிதனேய கட்டப் பகுப்பொன்று ஏப்ரல் 2007 இல் மேற்கொள்ளப்பட்ட போது தெரியவந்துள்ளது, என லிக்கியும் கூறியுள்ளார்.
கிளிநொச்சி, முல்லத்தீவு, திருகோணமலை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகள் கடுமையான உணவு மற்றும் இடர்ப்பாடுகள் நிரம்பிய வாழ்க்கை நிலவும் பிரதேசங்களாயும் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மனிதபிமான அவசர கால நிலை உள்ள பிரதேங்களாயும் வகுக்கப்பட்டுள்ளது.
17.5 வீதம் உயர்ந்துள்ள விலைவாசி, மேலும் போஷாக்குக் குறைபாட்டை அதிகரிக்கும் அச்சம் நிலவுவதாயும் சர்வதேச உணவு ஸ்தாபன அதிகாரி தெரிவித்துள்ளார்.
லிக்கியும் மேலும், "பருவம் தவறி பெய்த மழையினால், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் உட்பட, இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் பெரும்போக அறுவடை பெரு வீழ்ச்சியடைந்துள்ளது. இது சர்வதேச ரீதியில் எற்றம் கண்டுள்ள உணவு விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடு என்பவற்றுடன் கூட்டிணையும் போது எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளை தோற்றுவிக்கலாம்," எனத் தெரிவித்துள்ளார்.
[இது ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் ஓர் அங்கமாகிய ஒருங்கிணைக்கப்பட்ட பிராந்திய தகவல் வலையத்தின் (irinnews.org) செய்தி அறிக்கை: Food insecurity a growing problem இனது தமிழாக்கம்] - தமிழாக்கம்: க.திருக்குமாரன்