« May 2008 | Main | July 2008 »

June 27, 2008

இடம்பெயர்ந்த மக்களின் இன்னல்களைப் புதிய அரசியல் கட்சி தீர்த்து வைக்குமா?

துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை

“வீதி வசதியில்லை; நீர் வசதியில்லை; வீட்டு வசதியில்லை. போக்குவரத்து வசதி சீராக இல்லாமையினால், பிள்ளைகள் ஒழுங்காகப் பாடசாலை செல்ல முடியாமல் உள்ளது. எங்களுக்கு எந்தவித வசதியுமில்லை. வந்த மாதிரியே இன்னமும் பல கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்”.என்று தனது அன்றாடக் கஷ்டங்களைப் பகிர்ந்து கொண்டார் ஏ.ஷாகுலா. கணவணையிழந்த இவர் தனது பாடசாலை செல்லும் இரண்டு பிள்ளைகளுடன் புத்தளத்தில் உள்ள சோல்ற்றன் 2 என்னும் அகதி முகாமில் கடந்த 18 வருடங்களாக வாழ்ந்து வருகின்றார்.

[புத்தளம் இடம் பெயர்ந்த மக்கள் படத் தொகுப்பு]

புத்தளம் வடமேல் மாகாணத்தில் அமைந்துள்ள ஓர் கரையோரப் பிரதேசமாகும். புத்தளம் பிரதேசச் செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, புத்தளம் மாவட்டத்தின் மொத்தச் சனத்தொகை 8,14, 000 மக்கள். இதில் 5,85,000 சிங்கள மக்களும், 1,49,000 முஸ்லிம் மக்களும், 80,000 தமிழ் மக்களும் அடங்குவர். தற்பொழுது 75,000 உள்ளுர் இடம்பெயர்ந்த மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

முஸ்லிம் மக்கள் 1990 ஈம் ஆண்டு அக்டோபர் மாதம், தமது சொந்த இடங்களிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் வெளியேற்றப்பட்டனர். யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் வசித்து வந்த இந்த மக்களை இரண்டு மணித்தியாலங்களுக்குள் தத்தமது இடங்களை விட்டு வெளியேறுமாறு கோரப்பட்டது. இவர்கள் தம்முடன் குறிப்பிட்டளவான பணத்தையும், உடைமைகளையும் எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது. இவ்வாறு தமது வீடு, வாசல்களை விட்டு வெளியேறிய மக்கள் படகு, பஸ், ட்ரக்டர் மூலமாகப் புத்தளம் மாவட்டத்தை வந்தடைந்தனர். பல்வேறு நிறுவனங்கள் அங்கு பல அகதி முகாம்களை நிறுவி, அவர்களை அங்கு குடியேற்றினர்.

இவர்களில் பலர் இன்னமும் அகதி முகாம்களிலேயே பல இன்னல்களைச் சந்தித்த வண்ணம் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த பலர் தில்லையடியில் வாழ்கின்றனர். இப் பகுதி “லிற்றில் ஜவ்னா” அல்லது “சிறிய யாழ்ப்பாணம்” என்றழைக்கப்படுகின்றது.

மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கும் மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கும் இடையே வழங்கப்படும் உதவிகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் கூறுகின்றனர். அத்துடன் தாங்கள் யாரும் கவனிப்பாரற்ற ஓர் சமூகமாக இருப்பதாகவும் இவர்கள் கருதுகின்றனர்.

“நாங்கள் பல கஷ்டங்களுடன் இன்னமும் அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எங்களுக்கு உலர் உணவு ஒழுங்காக் கிடைப்பதில்லை; தொழில் வாய்ப்புக்களைப் பெறுவதில் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எமக்கு 1,630ஃஸ்ரீ ரூபாவிற்கு சமமான உலர் உணவு 18 வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டது. இன்றும் அதே தொகைக்குரிய உலர் உணவே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. நாங்கள் ஓர் ஒழுங்கான அரசியல் தலைமைத்துவமின்றி “அரசியல் அநாதைகளாக” வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்” என்று சிறிய பலசரக்கு கடையொன்றைத் தனது சிறிய குடிசைக்கு முன்னால் நடத்தி வரும் எஸ். எச். மன்சூர் கூறினார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள், தமக்கு இதுவரை சரியான தலைமைத்துவம் அமையவில்லை என்று ஆதங்கப்படுகின்றனர். இதன் அடிப்படையில் அண்மையில் உருவான புதிய அரசியல் கட்சியே மக்கள் மறுமலர்ச்சி முன்னணி. யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 21 உறுப்பினர்கள் கடந்த மாதம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இந்தக்கட்சியில் உறுப்பினர்களாக உள்ளனர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளின் அவசியத்தை அகதி முகாம்களில் வாழுகின்ற மக்கள் உணர்கின்றனர். ஏனைய பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் பல வாக்குறுதிகளை வழங்கித் தம்மைப் பல தடமைகள் ஏமாற்றி விட்டதாக இந்த மக்கள் கருதுகின்றனர்.

“எமது மக்கள் பல உரிமைகளை இழந்து விட்டனர். அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்கள் இழந்த உரிமைகளை மீண்டும் பெற்றுக் கொடுக்க விரும்புகின்றோம். அத்துடன் அவர்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தி, அவர்களின் கஷ்டங்களை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளையும் செய்யவுள்ளோம். புதிய அரசியல் கட்சியொன்றை நிறுவுவதற்கு மேற்கூறியவை காரணமாகும். இவ்வாறானதொரு கட்சியைப் 10 அல்லது 15 வருடங்களுக்கு முன்னரே ஆரம்பித்திருக்க வேண்டும்” என்று மக்கள் மறுமலர்ச்சி முன்னணியின் தலைவரான எம்.எம்.குத்தூஸ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற மாவட்டங்களிலிருந்து சுமார் 20,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர். இவர்களின் எண்ணிக்கையானது தற்பொழுது இரட்டிப்பாகியுள்ளது. இவர்களின் தேவைகளும் இரட்டிப்பாகியுள்ளன. தற்பொழுது சுமார் 15,000 யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தம்மை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவ்வாறானதொரு புதிய அரசியல் கட்சி அவசியம் எனப் புத்தளத்தைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்டுள்ள சிலர் கூறுகின்றனர். பெரும்பான்மைக் கட்சிகள் சேர்ந்து போட்டியிடுவதால் பல தீமைகள் ஏற்படுவதாகக் கருதப்படுகின்றது.

“பெரும்பான்மைக் கட்சிகளுடன் சேர்ந்து சிறுபான்மைக் கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் போது, அந்தச் சிறுபான்மைக் கட்சியினருக்கு பல அநீதிகள் இழைக்கப்படுகின்றன. இதனைக் கருத்திற் கொள்ளும் போது இவ்வாறு உள்@ரில் இடம்பெயர்ந்த மக்களுக்கென ஒரு கட்சியை ஆரம்பிப்பது சிறந்தது” என்றார் புத்தளம் பெரிய பள்ளிவாசலின் பிரதம தர்மகர்த்தாவான எஸ். ஆர். எம். முஸம்மில்.

“எனக்கு மீண்டும் யாழ்ப்பாணம் சென்று வாழ்வதற்கு விருப்பம். அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட புதிய கட்சியினர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவார்கள் என்றால், நான் மீண்டும் யாழ்ப்பாணம் செல்வதற்கு விரும்புகின்றேன்” என எம். நதீரா கூறினார்.

இவ்வாறு அகதி முகாம்களில் அல்லற்படும் மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளையாவது, புதிய அரசியல் கட்சி பூர்த்தி செய்யும் என்பது இன்றும் அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பலரதும் நம்பிக்கையாகும்.

நேர்காணல் ஒலிப்பதிவு: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை ~
புத்தளம், இடம்பெயர்ந்த மக்களுடன்: