« July 2008 | Main | September 2008 »

August 25, 2008

ஊடக வட்டாரத்தில் பால்நிலை சமத்துவம்

இலங்கையில் மனித உரிமைகள் பற்றி செய்தி அறிக்கையிடல் : ஊடக வட்டாரத்தில் பால்நிலை சமத்துவம்

லங்கையில் மனித உரிமைகள் தொடர்பான செய்தி அறிக்கையிடல் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற செயலமர்வில் துஷியந்தினி கனகசபாதிபதிப்பிள்ளை வழங்கிய “ ஊடக வட்டாரத்தில் பால்நிலை சமத்துவம் ” என்ற கருத்து முன்னிலைப்படுத்தலின் முழு எழுத்து வடிவம்:

ஆபிரிக்க பெண் ஒருவரின் பாடல் ஒன்றை பாடுவதனூடாக எனது கருத்து முன்னிலைப் படுத்தலை ஆரம்பிக்க விழைகின்றேன். அந்தப் பாடல் வருமாறு:

நான் ஒரே வேண்டுகோளையே முன்வைக்கின்றேன்
எனக்கு அந்தத் தேவை இருந்த போதிலும்..
நான் பணம் தேவையென வேண்டவில்லை
நான் இறைச்சி அவசியமென வேண்டவில்லை
நான் வேண்டுதலெல்லாம்
எனது வழியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடைக் கற்களை
நீக்க வேண்டும் என்ற ஒன்று மட்டுமே! - ஆச்சோலி கவிதை தொகுப்பின் லாவினோ பாடல் - ழூ ஒகோட் பீபிட்டிக்

மேற்குறிப்பிட்ட பாடலைப் போன்றே மூன்றாம் மண்டல நாடுகளில் பெண்கள் புறக்கபணிக்கப்பட்டுள்ளனர். உலகில் அதிக சனத்தொகைப் பரம்பலைக் கொண்ட நாடுகளில் இலங்கை 53 ஆவது இடத்தை வகிக்கின்றது. மொத்த சனத்தொகையில் பெண்களாகிய நாம் 54 வீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம். இலங்கையில் மொத்தமாக 20 மில்லியன் பெண்கள் காணப்படுகின்றனர்.

ஆசிரிய தொழில், வங்கித்துறைசார் தொழில் மற்றும் ஏனைய தொழில் துறைகளுடன் ஒப்பீடு செய்யுமிடத்து ஊடகத்துறையில் பெண்களின் பங்களிப்பு மிகவும் சொற்பமான அளவாகக் காணப்படுகின்றது.

பால்நிலை சமத்துவம் தொடர்பான உலக வரிசைப் படுத்தலில் இலங்கை 88 ஆவது இடத்தை வகிப்பதாக இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், சுதந்திர ஊடக அமைப்பு, ஊடக சேவையாளர் கூட்டமைப்பு, இலங்கை முஸ்லிம் ஊடகபப் பேரவை, தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியன கூட்டாக வெளியிட்டுள்ள கையேட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால் நிலை சமத்துவம் தொடர்பான பட்டியலில் மொத்தமாக 177 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. சார்க் பிராந்திய நாடுகளில் இலங்கை பால்நிலைசார் அபிவிருத்தி குறிகாட்டி (Gender related Development Index-ஜீ.டி.ஐ.) களில் சாதகமான பெறுதியை பதிவு செய்துள்ளது.

ஏனைய அண்டை நாடுகளான இந்தியா 128ம் நிலையிலும், பாகிஸ்தான் 136ம் நிலையிலும், பங்களாதேஷ் 140ம் நிலையிலும் காணப்படுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியல் செயற்பாடுகளை பொருத்தமட்டில் இலங்கையில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைந்தளவில் காணப்படுவதாக குறித்த ஊடக கூட்டமைப்பினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1960ம் ஆண்டு உலகின் முதலாவது பெண் பிரதமராக அமரர் சிறிமாவோ பண்டாரநாயக்க தெரிவு செய்யப்பட்ட போதிலும், 4.9 வீதமான பெண்களே இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒரே சந்தர்பபத்தில் நாட்டின் முதன்மையான அதிஉயர் பதவிகள் இரண்டையும் பெண்கள் வகித்த முதலாவது ஜனநயாக நாடாக இலங்கை கருதப்படுகின்றது.

ஜனாதிபதியாக திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், பிரதமராக அமரர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவும் பதவி வகித்தனர். இவர்கள் இருவருமே ஜனநாயக ரீதியில் நடைபெற்ற தேர்தல்களின் மூலம் தெரிவு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் வரலாற்றில் முன்மாதிரியான உயர்பதவிகளை குறித்த இருவரும் வகித்த போதிலும் 10 வீதமான பெண்களே அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை வகிக்கின்றனர்.

21 வீதமமான பெண்களே இரஜாதந்திர மற்றும் சிரேஸ்ட உயர் பதவிகளை வகிக்கின்றனர் என்பது நோக்கத் தக்கது.

யாழ்ப்பாண குடாநாட்டில் மட்டும் சுமர் 25,000 விதவைப் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு உணவு வழங்குவதற்கும், வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கும் முடியாத நிலையில் அல்லலுறுவதாக அண்மைய ஆய்வுத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் இலங்கையில் 22 வீதமான குடும்பங்களில் பெண்களே வீட்டுத் தலைமைப் பொறுப்பை வகிக்கின்றனர்.

நாங்கள் இலங்கையின் பல்வேறு ஊடக அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களில் அங்கம் வகித்த போதிலும், பெண் ஊடகவியலாளர்கள் என்ற வகையில் எமக்னெ ஓர் தனியான அமைப்பை உருவாக்க வேண்டியதன் உடனடித் தேவையை நாம் உணர்ந்தோம்.

இந்த உந்துதலின் பலனாக சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய மூன்று இனங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பென்தொட்டையில் கூடி “இலங்கை பெண்கள் ஊடக வலையமைப்பு” என்ற ஓர் அமைப்பை உருவாக்கினோம்.

துடிப்பு மிக்க உழைக்கும் பெண் ஊடகவியலாளர்கள் எமது அமைப்பில் அங்கம் வகிக்கின்றனர்.

2008ம் ஆண்டு மே மாதம் “இலங்கை பெண் ஊடகவியலாளர் வலைமைப்பைச் சேர்ந்த நாம் ஓரே கூரையின் கீழ் கூடி “பால்நிலை” குறித்து ஆராய்ந்தோம்.

இந்த சந்திப்பின் போது அமைப்பின் உறுப்பினர்களால் 3 கூட்டு இணைப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

ஊடகங்களில் பால்நிலை சமத்துவம் என்ற தொனிப்பொருளில் இரண்டு நாட்கள் இந்த செயலமர்வு நடைபெற்றது. பெண் ஊடகவியலாளர்கள் அலுவலகங்களிலும், வெளிக்களங்களிலும் எதிர்நோக்கும் இடர்கள் குறித்து நுனுக்கமாக ஆராயப்பட்டது.

பெண் ஊடகவியலாளர்கள் பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து திட்டவரைவொன்று தயாரிக்கப்பட்டது.

நாங்கள் ஐந்து பிரதான பிரச்சினைகளை இனங்கண்டு பின்வருமாறு பட்டியல் படுத்தியுள்ளோம்.

1. ஊடக நிறுவனங்கள் மற்றும் ஒன்றியங்களில் பெண்களின் பங்களிப்பு குறைவாகக் காணப்படுகின்றது

எமது இலக்கு: ஊடக அமைப்புக்கள் மற்றும் ஒன்றியங்களில் பெண்களின் காத்திரமான பங்களிப்பை அளவுசார் ரீதியாகவும், தரம்சார் ரீதியாகவும் அதிகரித்தல்

2. பெண் ஊடகவியலாளர்களிடம் பால்நிலை அறிவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக போதிய விழிப்புணர்வும் பயிற்சியும் காணப்படாமை

எமது இலக்கு: தலைமைத்துவ பயிற்சிகளை வழங்குவதனூடாக பெண் ஊடகவியலாளர்களின் ஆளுமையை விருத்தி செய்தல்

3. பால்நிலை தொடர்பான செய்தி அறிக்கையிடலில் ஒரே மாதிரியான தன்மை காணப்படுதல்

எமது இலக்கு: பால்நிலை தொடர்பான செய்தி அறிக்கையிடலை மேம்படுத்தல்

4. பெண் ஊடகவியலாளர்களின் தொழில் பாதுகாப்பு

எமது இலக்கு: பெண் ஊடகவியலாளர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்தல்.

5. பாலியல் துன்புறுத்தல்கள்

எமது இலக்கு : பாலியல் துன்புறுத்தல்கள் அற்ற ஓர் தொழில் சூழ்நிலையை உருவாக்குதல்

உலக சனத்தொகையில் 52 வீதமானோர் பெண்களாகும். எனினும், 21 வீதமான பெண்கள் பற்றிய செய்திகளே ஊடகங்களில் வெளியிடப்படுவதாக உலக ஊடக கண்காணிப்பு திட்டம் (Global Media Monitoring Project-ஜீ.எம்.எம்.பீ) 2005ம் ஆண்டு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியல் மற்றும் அரசாங்கம் போன்ற கடினமான துறைசார் செய்திகளில் மிகக் குறைந்தளவே (14%) பற்றிய செய்திகள் வெளியாகின்றன. பொருளாதாரத் துறையை பொருத்தமட்டில் 20வீதமான செய்திகளே பெண்கள் பற்றிய செய்திகளாக காணப்படுகின்றன.

அநேக சந்தர்ப்பங்களில் பெண்கள் மென்மையான செய்திகளில் அதிகம் விபரிக்கப்படுகின்றனர். கலைத்துறை அல்லது விசேட அதிதிகள் என்ற ரீதியில் 23 வீதமான செய்திகள் வெளியிடப்படுகின்றன.

மரபுகளை மீறிச் சவால்விடக்கூடிய பெண்கள் பற்றிய செய்திகள் வெறும் 3 வீதமே வெளியிடப்படுவதாகவும், 96 வீதமான செய்திகளில் பால்நிலை சமத்துவம் அல்லது முரண்பாடுகள் பற்றி வெளிக்கொணரப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

தமிழ் வார இதழ் ஒன்றில் பத்தி எழுத்தளாராக கடமையாற்றும் பெண் ஊடகவியலாளர் தொடர்பான சம்பவமொன்றை மேற்கோள் காட்டுவது சாலச் சிறந்ததென நான் கருதுகின்றேன்.

குறித்த பெண் ஊடகவியலாளர் அரசியல் நடப்பு விவகாரங்கள் பற்றிய கட்டுரைகளை பத்திரிகையில் வெளியிட்டு வருகின்றார். இந்தப் பெண் பத்தி எழுத்தளரது ஆக்கங்கள் காத்திரமானவை என்பதனை ஏற்றுகொள்ள சக ஆண் ஊடகவியலாளர்கள் மறுதலித்துள்ளனர்.

இலங்கை அரசியல் நடப்பு விவகாரங்கள் தொடர்பில் ஆண் ஊடகவியலாளர்களுக்கு நிகராக செய்தி வெளியிடக்கூடிய வல்லமை குறித்த பெண் ஊடகவியலாளரிடம் காணப்படவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பேச்சாளர்கள் மற்றும் நிபுணர்கள் பட்டியலில் ஆண்களே அதிக ஆதிக்கம் செலுத்துவதாக 2005ம் ஆண்டில் உலக ஊடக கண்காணிப்புத் திட்டம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் [www.whomakesthenews.org] தெரிவிக்கப்பட்டுள்ளது.

86 வீதமான பேச்சாளர் பதவிகளை ஆண்கள் வகிக்கின்றனர் மேலும் சகல நிபுணத்துவ பணிகளிலும் 83 வீதமான ஆண்களே பதவி வகிப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

ஆண்களைவிட (8%) பெண்கள் இரட்டிப்பாக (19%) பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே பெண் ஊடகவியலாளர்கள் என்ற ரீதியில் இலங்கை பெண் ஊடகவியலாளர் வலைமைப்பைச் சேர்ந்த நாம் ஊடகங்களில் பெண்களின் பங்களிப்பு தொடர்பாக முக்கியமான பங்களிப்பை நல்க வேண்டிய இன்றியமையா அவசியப்பாட்டை உணர்ந்தோம்.

ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் ஒரே மாதிரியாக பெண்கள் சித்தரிக்கப்படுதனை வாசித்தாலோ, ஒளி,ஒலிபரப்புச் செய்தாலோ அதற்கு எதிராக சகல சந்தர்ப்பங்களிலும் அறிக்கைகளை வெளியிடுவதற்கு நாம் தீhமானித்த்துள்ளோம்.

ஊடகவியலாளர் ஒன்றியங்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பெண் ஊடகவியலாளர்களாக காணப்பட வேண்டுமென இலங்கை பால் நிலை சமத்துவம் தொடர்பான ஊடக நிறுவனம் 2006ம் ஆண்டு வெளியிட்ட திட்ட வரைவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் இந்த நிலைமை யதார்த்தத்திற்கு புறம்பானதாகவே காணப்படுகின்றது.

மிக மிக அரிதாகவே பெண் ஊடகப்பேச்சாளர்களை ஊடகங்களில் காணக்கூடிய நிலைமையை நாம் அவதானித்தோம். இதன் விளைவாக பெண் ஊடகப் பேச்சாளர்களைக் கொண்ட ஓர் கையேட்டை வெளியிடும் பணியை நாம் ஆரம்பித்துள்ளோம்.

சொனாலி சமரசிங்க தொடர்பாக குறிப்பிடுவதுற்கு நான் விரும்புகின்றேன். சொனாலி சமசிங்க தி மோர்னிங் லீடர் பத்திரிகையின் ஆசிரியர். பால் நிலை சமத்துவம் என்ற தொனிப் பொருளில் 2008 மே மாதம் நடைபெற்ற செயலமர்வில் “நல்ல ஊடகம் பால்நிலை வேறுபாடுகளை அறியாது” என்ற தலைப்பில் தமது கருத்துக்களை முன்னிலைப்படுத்தியிருந்தார்.

சிறுபான்மை விவகாரங்கள் தொடர்பான அவரது கரிசனைகளுக்காக மிக மோசமான வகையிலான மின் அஞ்சல்கள் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சொனாலி லெட்சுமி சமரசிங்க என்ற பெயரும் சூட்டப்பட்டது. மாற்றுக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாத சிலரின் காழ்ப்புணர்ச்சி இதன் மூலம் தெளிவாக புலனாகியது. இந்த தேசத்தில் சிங்களவர் ஒருவர் ஏனைய சமூகங்கள் பற்றி குரல் கொடுத்தால் அவர் மீது தேசத் துரோக முத்திரை குத்தப்படுகிறது. இவ்வாறான ஓர் ஊடக கலாச்சாரத்திலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எனக்கு நேர்ந்த ஓர் அனுபவத்தை நான் இரண்டாவது உதாரணமாக முன்வைக்க விரும்புகின்றேன். கருணா அம்மானிற்கு இராஜதந்திர கடவுச் சீட்டை அரசாங்கம் வழங்கியமை தொடர்பாக சில கட்டுரைகளை நான் வெளியிட்டேன். அரசாங்க இணைய தளமொன்றில் என்னை மிகக் கடுமையாக விமர்ச்சித்திருந்தனர். பெண் என்ற ரீதியில் எனது தொழில்சார் பயணம் இழிவுபடுத்தப்பட்டது.

எனது தகைமைகள், எனது இயலுமை, எனது சாதனைகள் மிகவும் கேவலமாக விமர்சிக்கப்பட்டன. எனது உள்ளாடைகளைக் கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை.

இந்த விடயங்கள் பற்றி உங்களது சிந்தனைச் சிறகுகளை விரித்து சிறகடிக்க அவகாசமளிக்கும் வகையில் நான் எனது கருத்துப் பரிமாறலை இத்துடன் முடிவுறுத்திக் கொள்கின்றேன்.

நன்றி

[துஷியந்தினி கனகசபாதிபதிப்பிள்ளை, இலங்கை பெண்கள் ஊடக வலையமைபப்பின் கூட்டு இணைப்பாளர் ]

மனித உரிமைகள் பற்றி செய்தி அறிக்கையிடல் என்ற தொனிப்பொருளில் 2008ம் ஆண்டு ஜூலை 5 மற்றும் 6ம் திகதிகளில் கொழும்பில் செயலமர்வொன்று நடைபெற்றது. மாற்று கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர் பேரவை ஆகியவற்றினால் இந்த செயலமர்வு ஓழுங்கு செய்யப்பட்டிருந்து. இந்த செயலமர்விற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒத்துழைப்பு வழங்கியிருந்தது.

கணேசவாதம்: கடவுள் கணேசனை புகழ்ந்தேத்தும் அற்புத ஓவியத்திருவிழா

துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை

ஓவியர் மஹேன் சண்முகம் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேல் சித்திரக் கலையில் ஆற்றல் மிக்க திறமைகளை வெளிப்படுத்தி போற்றத்தக்கதோர் கலைச் சேவையாற்றி வருகின்றார்.

கடந்த 12 ஆண்டு காலப்பகுதியாக கணேசக் கடவுகளின் உருவ ஓவியங்களை தீட்டி கலைப்பணியில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றார்.

பிள்ளையாரின் அற்புதமான குறியீட்டு தத்துவங்களையும், வரலாற்று அடையாளங்களையும் சமகால வர்ண ஓவியங்களுக்குள் வெளிக்கொணர ஓவியர் மஹேன் சண்முகம் மேற்கொள்ளும் உயிரூட்டமான முயற்சிகள் வியக்கத்தக்கதாகும்.

யானை முகமும், விரைவாகச் செல்லக்கூடிய எலி வாகனமும் மதிநுட்பம், அறிவாற்றல், மற்றும் சமயோசித புத்தி என்பனவற்றை பிரதிபலிக்கின்றன.

மரபுரீதியான சித்திரக் கலைக்கு குந்தகம் ஏற்படாத வகையில் நவீன ஓவியக் கலை நுட்பங்களை புகுத்தி கடந்த காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய இரண்டு பரிமாணங்களில் தனது சித்திரங்களை ஊடறுக்கச் செய்துள்ள மஹேன் அந்தச் சவாலில் வெற்றியும் கண்டுள்ளார்.

இந்து சமய தத்துவார்த்த கோட்பாடுகளையும், சமய ஐதீகங்களையும் அடிப்படையாகக் கொண்டு அவரது தூரிகை வர்ணஜாலங்களை பதிவு செய்துள்ளன. இந்து ஆலய வாயில்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மனதை வருடிச் செல்லக்கூடிய தெய்வீக நிறங்களை அவர் தனது ஓவியங்களில் மிக லாவகமாக பயன்படுத்தியுள்ளார்.

பிரகாசமான இளஞ்சிவப்பு, இளம் பச்சை மற்றும் பல வர்ணங்களைக் கொண்டமைந்த சக்கரங்களினால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

சின்ன சின்ன கண்ணாடிகளில் கணேசனின் அற்புத உருவம் வெள்ளி நிறத்தில் காண்போரின் மனதை ஈர்க்கும் வகையில் தெய்வாசமாக திகழ்கின்றது.

மஹேனின் அநேகமான படைப்புக்களில் ஒளிர் வர்ணப் பயன்பாடு தனித்துவமான அம்சமாக குறிப்பிடலாம். அவரது படைப்புக்களில் அநேகமானவை சகாவரம் பெற்றதும், அகிலத்துடன் பிணைப்புடையதுமானதாக காணப்படுகின்றது.

ஆத்மார்த்த உணவுர்வுகளை விழிப்படையச் செய்யக்கூடிய ஓர் உன்னதமான வல்லமை அவரது தூரிகையினால் படைக்கப்பட்ட சித்திரங்களுக்கு அமையப் பெற்றுள்ளது.

சித்திரக் கலைஞர்கள் பயன்படுத்தக் கூடிய அனைத்து ஊடகங்களையும் கையாள்வதில் மஹேன் விற்பன்னராக திகழ்கின்றார்.

பின்னர் எண்ணெய் சித்திரங்களை தீட்டுவதனை இடைநிறுத்திக் கொண்டார். தற்போது மரம், துணி, கொங்கிரீட் மற்றும் கற்களைப் பயன்படுத்தி தமது ஓவிய சிருஷ்டிகளை அற்புதமாக படைத்து வருகின்றார்.

மஹேன் சண்முகம் தற்போது தலைநகர் கொழும்பில் வசித்து வருகின்றார்.

2005ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி முதல் ஜூன் மாதம் 1ம் திகதி வரை கொழும்பு ஃபெயர்பூட் அரங்கில் ஓவியக் கலைஞர் மஹேன் சண்முகத்தின் கணேசிசம் (கணேசவாதம்) என்ற ஆன்மீக சித்திரக் கலை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த அரிய ஓவியக் கண்காட்சி பெரும் எண்ணிக்கையிலான சித்திரக் கலை ஆர்வலர்களையும், கணேச பக்தர்களையும் தன்பால் ஈர்த்திருந்தது.

ஓவியக் கலைஞர்களுக்கு பொதுவாகக் காணப்படும் அடிப்படை குணாதிசமாக மாற்றுக்கொள்கையை சந்தேகமின்றி குறிப்பிட முடியும். எனினும் இதனை இங்கு காணக்கூடியதாக இல்லை.

20ம் நூற்றாண்டின் மிகப் பிரபலமான ஓவிய வரலாற்று ஆசிரியர்களான ருடொல்ப் மற்றும் மார்கொட் விட்கொவர் ஆகியோரின் “போர்ன் அன்டர் சட்ரன்” என்ற நூலில் சித்திரக் கலைஞர்களின் குணாதிசயங்களும், பழக்க வழக்கங்களும் விபரிக்கப்பட்டுள்ளது.

ஓவியக் கலைஞர்கள் தொடர்பில் தன்னிச்சையான யூகங்களே நிலவிவருகின்றது. குறிப்பாக அவர்கள் சுயநலவாதிகள், எதிர்வுகூற முடியாதவர்கள், பயந்த சுபாவமுடையவர்கள், நேர்மையற்றவர்கள், அதீதநம்பிக்கை கொண்டவர்கள் என ஓவிக் கலைஞர்களின் குணாதிசயங்களின் பட்டியலை நீட்டிக் கொண்டே செல்கின்றனர். மொத்தத்தில் சித்திரக் கலைஞர்களுடன் சீவியம் நடத்துவது மிகவும் சவால் மிக்கதென முதன்மையான நூலாசிரியர்கள் 1963ம் ஆண்டில் வெளியான தங்களது நூலில் விபரித்துள்ளனர்.

எனது அறிவுக்கு எட்டிய வகையில் மஹேன் சண்முகம் என்ற சித்திரக் கலைஞருக்கு பிரச்சினைகள் ஏற்பட அவரது மிதமிஞ்சிய எளிமையயே காரணம் எனக் குறிப்பிடத் தோன்றுகின்றது.

மிகவும் அமைதியான முறையிலும் சுயமதிப்பீடற்ற ரீதியிலும் தனது படைப்பாற்றலை கடந்த காலங்களில் அற்புதமாக விருத்தி செய்துள்ளார்.

மக்களுக்கு அவரது குணாதிசயங்களை தெளிவுபடுத்துவதற்கு அவர் தன்னை ஓர் ஓவியக் கலைஞனாக அடையாளம் காணும் விதத்தை குறிப்பிட்டால் போதுமானதாக இருக்கும்.

மஹேன் சண்முகம், மத ரீதியான ஈடுபாட்டின் காரணமாக விநாயகர் உருவங்களை சித்திரமாக தீட்டத்தத் தொடங்கவில்லை. யானையின் சிரசைக் கொண்ட கணேச உருவங்களை ஓவியமாக தீட்டும் பணி ஒர் தனிப்பட்ட ஓவிய பயணமாகவே மஹேன் ஆரம்பித்திருந்தார். அவரது கலைப்படைப்புக்களை மத ரீதியான சிருஷ்டிகளுக்குள் வரையறையிட்டு வகைப்படுத்த முடியாது.

“கணேசக் கடவுள் அண்ட சராசரங்களுக்கும் பொதுவானார், கணேசக் கடவுள் தெடார்பான கோட்பாடுகள் இந்து சமயத்தைப் போன்றே பௌத்த மதத்திலும் பின்பற்றப்பட்டு வருகின்றமை மறுக்கப்பட முடியாத உண்மையாகும். நான் இந்தக் கோட்பாடுகளை உள்வாங்கிக் கொண்டுள்ளேன், எனினும், நான் ஏதாவது ஒன்றை பிரதிநிதித்துவப்படுத்துவதனைவிட ஏதாவது ஒன்றை படைப்பதற்கு உந்தப்பட்டுள்ளேன். சிறு வயதிலிருந்தே ஓவியராக வர வேண்டும் எனக் கனவு கண்டேன்” என மஹேன் சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

நூற்பத்து மூன்று வயது நிரம்பிய ;மஹேன் சண்முகம் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கிறிஸ்தவர். மூன்று தலைமுறைகளுக்கு முன்னர் இந்து மதத்திலிருந்து அவரது மூதாதையர் கிறிஸ்தவ மதத்தை தழுவியுள்ளனர்.

தனது தந்தையுடன் சிறு வயதில் இந்து ஆலயங்களுக்கு சென்ற சந்தர்ப்பங்களில் ஆலயங்களில் வீற்றிருந்த வர்ணமயமான கணேச உருவங்கள் அவரது மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

மஹேனது முதலாவது படைப்பு பகுத்தறிவு உந்துதல் மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலை என்பவற்றினால் உருவானதென்று குறிப்பிட்டால் அது பிழையாகாது.

1994ம் ஆண்டு காலப்பகுதியில் மஹேன் சிங்கப்பூரில் தொழில் புரிந்து வந்த காலத்தில் கடவுள் கணேசனது குறியீட்டியல் மற்றும் விக்கிரகங்களின் தத்துவங்கள் தெடார்பாக கல்வி கற்கக் கூடிய ஓர் சந்தர்ப்பம் கிட்டியது.

வரலாற்று காலங்களில் கணேச சிற்ப மற்றும் ஓவியங்களில் காணப்பட்ட 32 இலக்கண மரபுகள் குறித்து மஹேன் ஆய்வுகளின் மூலம் கண்டறிந்தார். இந்த ஆய்வு தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கணேசக் கடவுளை சமகால ஓவிய நுட்பங்களில் வெளிக் கொணர்ந்தார்.

மரபுரீதியான ஓவிய பாணியில் நவீனத்தை புகுத்துவதற்கான தேடுதல் வேட்கை மஹேனிடம்; விரவிக் காணப்படுகின்றது.

கடவுள் கணேசனின் மரபு ரீதியான வடிவங்கள் என்ற எல்லைக்குள் தனது படைப்பாற்றலுக்கு கடிவாளம் இட்டுக் கொள்ளாது பரந்து விரிந்த ஓர் விற்பன்ன நுட்பத்தை ஓவியங்களில் மிளிரச் செய்துள்ளார் எனக் குறிப்பிட்டார் அது பிழையாகாது.

உணர்வுகளும், கருப்பொருட்களுமே பொதுவாக ஓவியங்களின் பிரதிபலிப்புக்களாக காணப்படும். எனினும், மஹேன் தனது ஓவியப் படைப்புக்களில் சமூக பிரச்சினைகள், முரண்பாடுகளை வெளிப்படுத்துவதற்கு ஒருபோதும் பின்னிற்கவில்லை.

கடவுள் வழிபாடு மற்றம் மனித நேயம் பற்றிய மரபு ரீதியான கோட்பாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் அவரது ஓவிய சிருஷ்டிகள் காணப்படுகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக கணேசக்கடவுள் அகங்காரத்தை ஒழிக்கும் கடவுளாகும். சுயநலம் மற்றும் ஆணவம் என்ற இரண்டு பிரதான குணாதிசயங்களே இந்த அகிலம் முழுவதிலும் வௌ;வேறு வடிவங்களில் பரிணமித்து உள்ளதனை விளக்கும் தத்துவார்த்த கலை முயற்சி அவரது படைப்புக்களில் விரவிக் காணப்படுகின்றது.

2002ம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலித் தீவில் இடம்பெற்ற கோரமான குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக மஹேன் தனது கிறிஸ்தவ பாடசாலை சீருடையை, பிள்ளையார் அணிந்திருப்பதனைப் போன்றும், கடவுளின் கைகளில் சமாதானத்தை வலியுறுத்தி “வீ” என்ற சமாதானத்திற்கான அடையாளத்தையும்; ஓர் அற்புத ஓவியப் படைப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.

32 விநாயக உருவ இலக்கண வடிவங்களுக்கு அப்பால் புதிய பரிமாணங்களில் தனது எண்ண ஓட்டத்திற்கு ஏற்ற வகையில் சுதந்திரமாக சிருஷ்டிகளை உருவாக்கக்கூடிய சந்தர்ப்பம் கிட்டியதாக அவர் குறிப்பிட்டார்.

முறையாக பாடசாலைக் கல்வியைத் தொடராத மஹேன் சிறு வயது முதலே ஓவிய ஆற்றலை வெளிப்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது 16 வயதில் ஓவியராக பணியாற்றத் தொடங்கிய மஹேன் விரைவில் கணனி வரைகலைத்துறையைத் தெரிவு செய்தார். மஹேன் ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூரில் தொழில் செய்வதற்காக இலங்கையிலிருந்து வெளியேறினார்.

ஓர் ஓவியக் கலைஞனாக திகழ வேண்டும் என்ற ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு தொடர்ச்சியாக என்னுள் காணப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

தனது இளமைக் காலத்தில் பிரித்தானிய ஓவியர் கில்பர்ட் என்ட் ஜோர்ஜ் மற்றும் சுரெசலிசம், டாலி, எர்ன்ஸ்ட், மாக்ரைட் போன்றவை குறித்து அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.

ஏனைய இலங்கை ஓவியர்களைப் போன்றே மஹேனது கலாசார் வேர்களும் கீழைத்தேய மற்றும் மேலைத்தையே மரபுகளைப் பற்றிப் பிடித்துள்ளது.

அவரது தனிப்பட்ட ஓவிய சிருஷ்டிகளின் வெளிப்பாடு ஓர் ஆசியரது அடையாளங்களை பறைசாற்றி நிற்கின்றது எனக் கூறின் அது பிழையாகாது.

கந்தாரா கால சிற்பக் கலைஞர்கள் நீண்ட தியானத்தின் மூலம் கற்கலுக்குள் மறைந்திருக்கும் சிற்ப வடிவங்களை கண்டு கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கந்தாரா காலத்திற்கு முற்பட்ட காலப்பகுதியில் காணப்பட்ட கோயில்களின் சிற்ப மற்றும் ஓவிய வடிவங்களின் பாதிப்புக்களை மஹேனின் ஓவியங்களில் தெளிவாக அவதானிக்க முடியும்.

விநாயகீ

விநாயகீ கணேசனின் பெண்பால் படைப்பாகும். இவர் 2007ம் ஆண்டு விநாயகீ தொடர்பான புதிய படைப்புக்களை உலகிற்கு வெளிப்படுத்தினார்.

ஆறாம் நூற்றாண்டு காலத்தில் ஸ்ரீ குமார நூலில் விநாயகீ பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. கணேசக் கடவுளின் பெண் உருவம் குறித்தான படைப்புக்கள் ஆர்வத்தை தூண்டக்கூடியதாக அமைந்ததென அவர் குறிப்பிட்டுள்ளார்.

விநாயகீ என்ற பெண் தெய்வத்தின் கழுத்துக்கு மேல் பகுதி யானையின் உருவத்தை ஒத்ததாகவும், உடல் பகுதி இளம் பெண் ஒருவரின் உடலமைப்பையும் ஒத்திருப்பதாக விபரிக்கப்பட்டுள்ளது.

கணேசன் அல்லது விநாயகனின் சக்தி வடிவமாக விநாயகீ கருதப்படுகின்றார் அல்லது விநாயகக் கடவுளின் படைப்பாற்றலாக விநாயகீ கருதப்படுகின்றார்.கணேசனின் சக்தி வடிவத்தை இரண்டு நிலைகளாக ஜே.ஹெர்பர்ட(1930); விதந்துரைத்துள்ளார். முதலாவது புத்தி (பகுத்து அறிந்து கொள்ளக்கூடிய மனோ திடம்) மற்றையது சித்தி (அதீத சக்தி அல்லது மனித சக்திக்கு அப்பாற்பட்ட வல்லமை) அல்லது ரித்தி (நேர்த்தி). விசித்திரமான மனித உடலமைப்பையும், வரலாற்று சூழ்நிலைகளையும் பிரதிபலிப்பதாக விநாயகீ கடவுளின் உருவம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

உடலின் தலைப் பகுதி யானையின் சிரசுப் பகுதியை ஒத்ததாகவும், உடற் பகுதி பெண்ணைச் சுட்டுவதாகவும் விநாயகீ உருவங்கள் காணப்படுகின்றன.

ராஜஸ்தானின் ராய்ராவில் உள்ள டெரகொட்டாவில் முதன் முதலாக முதலாம் நூற்றாண்டு காலப்பகுதியில் பெண் கணேச கடவுள் அல்லது விநாயகீ காணப்பட்டமைக்கான சான்றுகள்; கிடைக்கப் பெற்றுள்ளன.

கணேச பெண் தெய்வ விக்கிரகங்கள் 64ம் யோகினி ஆலயங்களில் கண்டு பிடிக்கப்பட்டன. இவ்வாறான 18 யோகினி ஆலயங்கள் இந்தியா முழுவதும் பரவிக் காணப்படுவதாகவும், இலங்கையில் இவ்வகையினை உடைய ஓர் ஆலயம் காணப்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கணேசன் தனது ஒற்றைக் கொம்பை எவ்வாறு இழந்தார் என்பதற்கு பல்வேறு ஐதீகக் கதைகள் குறிப்பிடப்படுகின்றன. அனைத்து வகை இரட்டை விதிகளிலிருந்தும் வெல்லக் கூடிய வல்லமையை ஒற்றைத் தந்தம் குறிப்பதாக பக்த அடியார்கள் திடமாக நம்புகின்றனர்.

முன்னொரு காலத்தில் பரசுராம முனிவரும், மஹா விஷ்ணுவும் சிவபெருமானை பார்க்கச் சென்ற போது இடையில் விநாயகர் வழி மறித்ததாகவும் இதனால் ஆத்திரமுற்ற பரசுராம முனிவர் விநாயகரது ஓர் தந்தத்தை கோடரியினால் வெட்டி எறிந்ததாகவும் புராண இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வருடந்தோறும் பதர்பாத மாதத்தின் அமாவாசைக்கு அடுத்து வரும் நான்காம் நாள் கணேசக் கடவுளின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இது விநாயக சதுர்த்தி அல்லது விநாயக சாவித்தி என அழைக்கப்படும்.

பக்தர்கள் விநாயகப் பெருமானின் 21 நாமங்களை உச்சரித்து அரிசி மற்றும் வண்ண மலர்களை; படைக்கின்றனா.; விநாயக சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக் கூடாது என நம்மவர் நம்புகின்றனர்.

ஓம் என்ற மந்திரத்தின் மூலம் கணேசன் அடையாளப்படுத்தப்படுகின்றார். ஓம்காரசவரூப என்ற கண்டறியப்படாத ஞானத்தை விளக்கி நிற்பதாய் குறிப்பிடப்படுகிறது.

2002 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் பின்னர் மஹேன் சண்முகம்; பிள்ளையாரைத் தனது பாடசாலைக்குரிய நிறங்களில் வர்ணந் தீட்டி “வீ” என்ற சமாதானத்திற்கான அடையாளத்தையும் சித்திரத்தினுள் புகுத்தியுள்ளார்.

16ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட முத்காலா புராணத்தில் எட்டு நிலைகள் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது

1. வக்கரதுண்டா

தும்பிக்கை நாயகன்

மட்சராவை அழிக்கும் கடவுள்

பொறாமையை அழிக்கும் கடவுள்

2. ஏக தந்தா

ஒரு தந்தைக் கொண்ட கடவுள்

மதத்தை அழிக்கும் கடவுள்

குடிபோதைகளை இல்லாதொழிக்கும் கடவுள்

3. மஹோதரா

தொப்பை அப்பன்

மோகத்தை அழிப்பவர்

மாயை அழிப்பவர்

4. கஜ்னானனா

யானை முகக் கடவுள்

உலோபத்தை அழிப்பவர்

பேராசையை இல்லாதொழிக்கும் கடவுள்

5. லம்போதரா

தொப்பை அப்பன்

குரோதத்தை அழிப்பவர்

கோபத்தை அழிக்கும் கடவுள்

6. விகடா

அநித்திய செயல்

காமத்தை அழிப்பவர்

சிற்றின்பஆசை ஒழிக்கும் கடவுள்

7. விக்னராஜா

தடைகளின் கடவுள்

மமதையை அழிப்பவர்

ஆணவத்தை அழிக்கும் கடவுள்

8. தூம்ரவர்ணா

அகங்காரத்தை அழிப்பவர்

மோகத்தை அழிக்கும் கடவுள்

August 13, 2008

தமிழ் பொது மக்களின் பரிதாப அவலம்

எத்திராஜன் அன்பரசன்
[பி.பி.சி. செய்திச் சேவை]

டமுனையில் அவதியுறும் மக்களின் பரிதாப நிலை யுத்தம் பற்றிய இரு தரப்பினரதும் பரஸ்பர களமுனை நிலவரங்கள் பற்றிய உரிமை கோரல்களிற்கு நடுவே மறைந்து போயுள்ளது.

முன்னெறி வரும் இராணுவத்திற்கும் எதிர்த்து தீவிர தாக்குதல்களை நாடாத்தும் விடுதலைப் புலிகளுக்குமிடையே சிக்கியுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் ஆயிரக்ணக்கான தமிழ் பொதுமக்கள், வீடு வாசல்கள இழந்து பாதுகாப்பு நிமித்தம் அங்கும் இங்குமாக அலைந்து திரிகின்றனர்.

கடந்த வருடம் ஆரம்பித்த யுத்தத்தின் காரணமாக இடம் பெயர்ந்தோர் எண்ணிக்கை எவ்வளவு என்று திட்டவட்டமான கணிப்பு எதுவும் இல்லை. இருப்பினும் சுமார் 150,000 பேர் அரச மற்றும் தனியார் தொண்டர் நிறுவனங்களின் உணவு மற்றும் உறையுள் உதவிகளில் தங்கியுள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நிவாரணப் பணி அமைப்பாகிய யூ.என்.எச்.சி.ஆர், வடக்கில் அத்தியாவசிய தேவைப் பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டினால், இடம் பெயர்ந்தோர் நிலவரம் ஆபத்தான நிலையில் உள்ளதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

அகதிகள் நிவாரணப் பணியகம் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 60,000 பேர், இராணுவத்திற்கும் புலிகளுக்குமிடயிலான சண்டையினால் இடம் பெயர நிர்பந்திக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

சமர்களின் நடுவிலிருந்து தப்பியோடும் பொது மக்களுக்குத் தேவையான உணவு, தற்காலிக உறைவிட வசதிகளுக்கான தளபாடங்கள், குடி நீர், மருந்துகள் மற்றும் இடப் பெயர்வு பிராயணத்திற்கான எரிபொருள் எனபவற்றின் கையிருப்பு மிகவும் "ஆபத்தான அளவிற்கு" குறைவடைந்துள்ளதாகவும் யூ.என்.எச்.சி.ஆர். தெரிவித்துள்ளது.

கடும் பதிலடி

கடந்த சில மாதங்களாக இராணுவத்தினர் கணிசமானளவு புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் முன்னேறியுள்ளது தெளிவாகியுள்ளது.

மன்னார் மாவட்டம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டினுள் வந்துள்ளது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வேறு நகரங்களும் கடற் புலிகள் தளங்களும் கூட இழக்கப்படும் நிலயில் புலிகள் உள்ளனர்.

ஒரு பாரிய தகர்வின் மூலம் படு வீழ்ச்சியடைந்தாலன்றி, நாளடைவில் இராணுவத்தினர் புலிகள் வசம் உள்ள முக்கிய நகரமாகிய கிளிநொச்சிக்கு கூட அடி மேல் அடி வைத்து நகர்ந்து விடலாம்.

இராணுவத்தினர் வகுத்துள்ள வியூகம் தெளிவாகத் தெரிகிறது. படை நடவடிக்கை ஆரம்பிக்க முற்பாடு பாரிய எறிகணைத் தாக்குதல் மூலம் பொது மக்களை வெளியேற்றம் செய்த பின்னர் புலிகள் கட்டுப்பாடுப் பிரதேசங்களினுள் முன்னேறும் தந்திரோபாயத்தினை அவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

இராணுவத்தினர் பல கள முனைகளை திறந்ததன் மூலம் புலிகள் அணியினரை பல களங்களிற்கு பரப்பியும் வருகின்றனர். அதிக எண்ணிக்கை, வான் படை என்பனவும் இயல்பாகவே அவர்களிற்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது.

எவ்வாறாயினும் சமீபத்திய இழப்புக்களிற்கு பிற்பாடும் புலிகள் இன்னும் கணிசமானளவு திடீர் பதில் தாக்குதல்கள் மூலம் போரிடும் வல்லமையில் உள்ளனர்.

இராணுவத்தினரின் உரிமை கோரல்களிற்கு மாறாக புலிகள் இன்னும் கணிசமானளவு படையணியினரை தக்க வைத்துள்ளதாகவே கூறப்படுகிறது. நீண்ட கெரில்லா யுத்தமொன்றை நடாத்தும் அணியாக மாற்றம் கொள்ளவும் அவர்களினால் இயலும்.

இதனால் தான் பிரதேசங்களை கைப்பற்றுவதனை மட்டும் கருத்திற் கொள்ளாமல் புலிகளை தாக்குவதிலும் இராணுவத்தினர் கண்ணாயுள்ளனர்.

"காட்டுப் பகுதிகளுக்குள் அவர்களை ஓட வைக்கலாம். ஆனால் அவர்களை தேடி அழிப்பதினால் மட்டுமே சமாதானத்தினை கொண்டுவரலாம்", என பாதுகாப்பு செயலர் கோதபாய இராஜபக்ச பிரிட்டன் பத்திரிகையொன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.

அவரின் இந்த கூற்று வன்னியில் வாழும் பொது மக்களுக்கு மேலும் அச்சுறுத்தல்கள் அநேகம் உள்ளதனையே தெரிவிக்கின்றது.

Children playing

[கிளிநொச்சிக்கு இடம் பெயர்ந்தோர் படக்கோவை]

"புலிகளின் படை கட்டுமானங்கள் பல பொது மக்கள் வாழும் பிரதேசங்களில் கலந்துள்ளன. இராணுவம் மேலும் முன்னேற்றம் கண்டு புலிகள் சிறிய பிரதேங்களினுள் நிலை கொள்ள நிர்ப்பந்திக்கப் படுவார்களேயானால் பொது மக்களிற்கான அச்சுறுத்தல்கள் மேலும் அதிகரிக்கும்", என்கிறார் ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ்.

பொதுமக்களின் இன்னல் நிலமை

போரிடுவோரிற்கு நடுவே அகப்பட்டுள்ள மக்களிற்கு அதிலிருந்து மீள்வதற்கான வழி ஒன்று இருக்குமானால் அது புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து வெளியேறுவதுதான்.

ஆனால் அவ்வாறு தப்பிச்செல்ல பொது மக்களுக்கு மாற்று வழிகள் இல்லை என்றே கூறவேண்டும்.

முக்கிய வீதிகள் யுத்தத்தின் காரணமாக பிரயாணத்திற்கு ஒவ்வாதவையாக உள்ளன. கண்ணி வெடி மற்றும் ஆள ஊடுருவும் அணியினரின் தாக்குதல்கள் உள்ளூர் மாற்றுப்பாதைகளயும் பொதுமக்கள் பிராயாணப் பாதுகாப்பிற்கு அபாயகரமாக்கியுள்ளன. அவர்கள் வெளியேறுவதற்கு புலிகள் அனுமதிப்பார்களா என்பதும் தெளிவாக தெரியவில்லை.

சிறு பிள்ளைகள், பெண்கள் மற்றும் கால்நடைகள் ஒரு சில உடமைகள் என்பவற்றுடன் பெருவாரியான பொது மக்கள் ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு யுத்தமற்ற வலையமோ ஒழுங்கமைக்கபட்ட அகதி முகாம்களோ இல்லாததனால் பாதுக்காப்புத் தேடி அங்குமிங்குமாக அலைந்து திரிகின்றனர்.

பொது மக்களிற்கு மல சல கூடங்கள், குளிக்கும் வசதிகள் என்பனவும் இல்லை. கொதிக்கும் வெக்கையிலும் நுளம்புக் கடிகளுக்குக்கு மத்தியிலும் தங்கியிருந்து வெட்ட வெளிகளில் நித்திரைக்கும் செல்கின்றனர்.

இடம்பெயர்ந்தோருக்கு உதவிகள அதிகரிக்க விளையும் மனிதாபிமான நிவாரண அமைப்புக்களின் முயற்சிகள், வன்னிப் பிரதேசத்தினுள் பொருட்கள் கொண்டு வரப்படுவதற்கான தடை விதிப்புக்களினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால் புலிகளின் வன்னிக் கட்டுப்பட்டுப் பிரதேசத்திற்கு தேவையானளவு பொருட்கள் அனுப்பப்படுவதாக அரசாங்கம் கூறுகின்றது.

"தடைகளும் இல்லை அங்கு பொருட்களுக்கு தட்டுப்பாடும் இல்லை. அங்குள்ள அரசாங்க அதிகாரிகளினது அறிவுறித்தல்களின் பிரகாரம் தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அங்கு அனுப்பட்டுக்கொண்டு தானிருக்கின்றன", என்கிறார் ஸ்ரீ லங்கா இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார.

சர்வதேச சமூகம்

யுத்தம் எப்போது, எப்படி முடிவுறும் என்று எவருக்கும் தெரியாது. ஆனால் சர்வதேச சமூகம் கூடுதல் பங்காற்றி உதவியிருக்கலாம் என தமிழர்கள் நினைக்கின்றனர்.

"சர்வதேச சமூகம், முக்கியமாக அயல் நாடாகிய இந்தியா, மக்கள் இடப் பெயர்வு குறித்தும் இன்னல்கள் குறித்தும் மௌனம் காப்பது விசனமாயுள்ளது", என்கிறார் ஊடகவியலாளர் டி. பி.எஸ். ஜெயராஜ்.

யுத்தம் ஓயும் அறிகுறிகளேதும் இல்லாத சூழ்நிலயில் வடக்கில் மனித அவலம் மேலும் அதிகரிக்கும் களம் அமைக்கப்பட்டுள்ளதாக நிவாரணப் பணியாளர்களும் தமிழ் மக்களும் அஞ்சுகின்றனர்.

August 09, 2008

அருள்மிகு மயூராபதி பத்திரகாளியம்மன் வருடாந்த பஞ்சரதோற்சவம்

~ கொழும்பு, வெள்ளவத்தை - அருள்மிகு மயூராபதி பத்திரகாளியம்மன் வருடாந்த பஞ்சரதோற்சவம் இன்று ஆகஸ்ட் 9ம் திகதி ~

யூராபதி காளியம்மா
மாட்சிமை மிக்க தாயவளே!
மயூராபதி உறைந்து
மானிடரைக் காப்பவளே!


அரசும் வேம்பும் இணந்துமே
அகிலத்தின் தாயவளை தாலாட்டும்
வெலேந்தி விளயாடும் தாயவளே
வேட்கை கொண்டே வணங்குகின்றோம்
பஞ்சரதம் பவனி வர
பாவவினை பறந்தோடும்
அஞ்ஞான இருளகற்றி
மெய்ஞானம் அருள்பவளே
வீரபத்திரன் நாயகியே
விருப்புடனே அருள்சுரப்பாய்!
சூலாயுதம் தானேந்தி
சூழ்வினைகள் அழிப்பவளே!

புதுமையுள்ள தாயவளே
புவனமதைக் காப்பவளே!
எம் இனத்துயர் களைந்து
ஏகாந்த நிலையகற்றி
ஏற்றம் தந்திடம்மா
ஆபத்து நேரந்தன்னில்
அருகிருந்து காப்பவளே
சிற்றிடையில் சிவந்தபட்டு
திருக்கரத்தில் திரிசூலம்
மயூராபதி காளியம்மா
உன் திருமுகத்தைக் காணபதற்கு
என் முகத்தில் அமைந்திருக்கும்
இரு விழியால் இயன்றிடுமோ!
ஆனந்த வாழ்வு தந்து தாயவளே
மானிடரைக் காத்திடம்மா - 'மாவையூர் வி. சண்முகசுந்தரம்

நன்றி: வீரகேசரி இணையம்

படம்: 2006 ம் ஆண்டு ~ அருள்மிகு மயூராபதி பத்திரகாளியம்மன் வருடாந்த பஞ்சரதோற்சவம்