« September 2008 | Main | November 2008 »

October 31, 2008

விடுதலைப்புலிகளின் ஒழுங்கினதும் கட்டுப்பாடினதும் வெளிப்பாடு

லங்கை இராணுவத்தால் வன்னிப்பகுதியில் தற்போது மேற்கொள்ளப்படும் தாக்குதல் நடவடிக்கைகளால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களின் மத்தியிலும் அவர்களின் ஒழுங்கும் கட்டுப்பாடும் சிறப்பாகச் செயற்படுவதை, புலிகளின் அண்மைக்கால தக்குதல்கள் எடுத்துக்காட்டுவதாக ஓய்வு பெற்ற இந்திய மத்திய அமைச்சரவை செயாலாளரும், பிரபல இராணுவ புலானாய்வு கட்டுரையாளருமாகிய பாஹுகுதும்பி இராமன் தெரிவித்துள்ளார்.

மேற்குறிப்பிட்டவாறு ஆங்கிலத்தில் பா. இராமன் தெரிவித்த கருத்து அடங்கிய கட்டுரையின் தமிழாக்கம், இலங்கையின் முதன்மை தமிழ் நாளேடான வீரகேசரியியின் நவம்பர் 1ம் திகதிய இதழில் பிரசுரமாயுள்ளது:

விடுதலைப்புலிகளின் ஒழுங்கும் கட்டுப்பாடும் சிறப்பாக செயற்படுவதை விமானத்தாகுதல்கள் எடுத்துக்காட்டுகின்றன

பா. இராமன்
[ஓய்வு பெற்ற இந்திய மத்திய அமைச்சரவை செயலாளர்]

டந்த 28ஆம் திகதி இரவு விடுதலைப்புலிகளின் வான்படைப் பிரிவு, வடக்கில் இராணுவ இலக்கு ஒன்றின் மீதும் தெற்கில் கொழும்பில் பொருளாதார இலக்கு ஒன்றின் மீதும் 90 நிமிட இடைவெளியில் தாக்குதல் நடத்தியுள்ளது. விடுதலைப் புலிகளின் வான்படைப் பிரிவு 2007 மார்ச்சில் தாக்குதலை ஆரம்பித்தது முதல் கடந்த 28ஆம் திகதி வரை ஏழு வான்படைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

[பா. இராமன்]

போர்க்களச் செய்திகளைத் தரும் புலிகளுக்காதரவான ஆங்கில மொழி இணையத்தளமான தமிழ்நெற், கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்தது. இச்சம்பவத்திற்குப் பிறகு மீண்டும் போர்முனைச் செய்திகளை வழங்க ஆரம்பித்திருக்கிறது.

கடந்த 28ஆம் திகதி விடுதலைப்புலிகளின் வான்படை தாக்குதல் நடத்திய பிறகு அது இவ்வாறு குறிப்பிட்டிருந்தது:

மன்னாரிலுள்ள இலங்கை இராணுவத்தின் பிரதான ஆட்டிலறி மற்றும் பல்குழல் பீரங்கித் தளமான தள்ளாடி இராணுவத் தளத்தின் மீது இரவு 10.30 மணியளவில் புலிகளின் விமானப்படை மூன்று குண்டுகளை வீசியுள்ளது.

பின்னர் இலங்கையின் விமானப்படை விமானங்கள் இரவு 11.00 மணி முதல் 1.30 வரை கிளிநொச்சியின் மேலாகப் பறந்து புலிகளின் விமானத்தைத் தேடிக் கொண்டிருந்தபோது புலிகளின் விமானம் கொழும்பை நோக்கிச் சென்று களனி திஸ்ஸ மின்நிலையத்தின் மீது இரண்டு குண்டுகளை வீசியுள்ளது.

தள்ளாடியில் புலிகளின் விமானம் குண்டு வீசியதைத் தொடர்ந்து இரவு 11.00 மணி முதல் இலங்கை விமானப்படையினரின் விமானங்கள் வன்னியின் மேலாகப் பறந்து தொடர்ச்சியாகப் புலிகளின் விமானங்களைத் தேடிக்கொண்டிருந்தன.

குறிப்பாக கிளிநொச்சி, இரணைமடு, விஸ்வமடு, முரசுமோட்டை பிரதேசங்களில் பரா வெளிச்சத்தைப் பாய்ச்சி அது தனது தேடுதலை மேற்கொண்டது. ஆனால் பொதுமக்கள் தரப்பிலிருந்து கிடைத்த தகவலின்படி புலிகளின் விமானங்கள் மன்னாரூடாக வன்னியை நோக்கிச் சென்றுவிட்டன என்று தெரியவந்தது.

எவ்வாறோ புலிகள் ஆதரவு தமிழ் இணையத்தளமான புதினம்.கொம் புலிகளின் உத்தியோகபூர்வ செய்தியைப் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது: மன்னார் பிராந்தியத்திலுள்ள தள்ளாடி இராணுவத்தளம் மீது செவ்வாய் இரவு 10.20 மணியளவில் புலிகளின் விமானப்படை குண்டுகளை வீசியுள்ளது. இராணுவத்தளம் பாரியளவில் சேதத்திற்குள்ளானது. இராணுவத்தினர் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.

செவ்வாய் இரவு 11.45 மணியளவில் கொழும்பிலுள்ள களனிதிஸ்ஸ மின்நிலையத்தின் மீது வெற்றிகரமாகத் தாக்குதலை நடத்தியுள்ளது. இவ்விரு தாக்குதல்களையும் நடத்திவிட்டு புலிகளின் விமானங்கள் பாதுகாப்பாகத் தமது தளம் திரும்பியுள்ளன.

ஒன்றிற்கு மேற்பட்ட புலிகளின் விமானங்கள் இத்தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டதான எண்ணத்தை ஏற்படுத்துவதற்கு புலிகளின் ஆதரவுத் தளங்கள் முயற்சி செய்தன.

இத்தாக்குதலில் புலிகளின் ஒரு விமானமே பயன்படுத்தப்பட்டதாக ராய்ட்டர் செய்தியாளர் அறிக்கையிட்டுள்ளார்.

இலங்கையின் இராணுவ வட்டாரங்களும் கொழும்பு மின்நிலையத்தின் மீதான தாக்குதலில் ஒரு விமானமே பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளன.

புலிகளின் ஆதரவுத் தளங்கள் மன்னார் இராணுவத் தளத்தின் மீது குண்டு வீசிய விமானமோ விமானங்களோ கொழும்பை நோக்கிப் பறந்து வந்து மின்நிலையத்தின் மீது குண்டு வீசியதாகத் தெரிவித்தன.

கொழும்பிலிருந்து வடக்கே 250 கி.மீற்றர் தொலைவில் தள்ளாடி இராணுவத்தளம் உள்ளது. குறைந்தது இரு குண்டுகளைக் காவிச் செல்லும் விமானம் அல்லது விமானங்கள் வன்னியிலிருந்து புறப்பட்டு இராணுவத் தளம் மீது குண்டுகளை வீசிவிட்டு பின்னர் கொழும்புக்கு வந்து தாக்குதல் நடத்திவிட்டு அதன் பின்னர் பாதுகாப்பாகத் தமது தளத்திற்குத் திரும்பிச் செல்வதற்குப் போதுமான எரிபொருளை வைத்திருந்தனவா?

இராணுவத்திற்குக் கடுமையான இழப்புக்களும் சேதங்களும் ஏற்பட்டிருப்பதாகப் புலிகள் சார்பு வட்டாரங்கள் உரிமை கோருகின்றன. ஆனால், இராணுவ வட்டாரங்களின் தகவலின்படி உயிரி ழப்புக்கள் எதுவுமில்லையென்றும் தளபாடங்களுக்குச் சிறிதளவு சேதமே ஏற்பட்டிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரேயொரு பாதுகாப்பு அதிகாரியே காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. குண்டுகள் வீழ்ந்த போது அதிர்ச்சியால் ஊழியர் ஒருவர் மரணமானதாக மின்நிலையம் தெரிவித்துள்ளது.

நிர்வாகப் பகுதிக் கட்டிடங்கள் மற்றும் குளிரூட்டிகள் தீப்பற்றியதால் சிறிதளவு சேதம் ஏற்பட்டதாகவும் தீயணைக்கும் படையினர் அதனைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மின்பிறப்பாக்கி (ஜெனரேட்டர்) இயந்திரங்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகப் புலிகள் சார்பு வட்டாரங்கள் கூறியுள்ள போதும் இதுவரை கொழும்பில் மின்சாரத் துண்டிப்பு அதிகளவில் இடம்பெற்றதாகச் செய்திகள் வரவில்லை. தந்திரோபாயமாக வெற்றிகரமான முறையில் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இலங்கை விமானப்படையின் விமானங்களின் இடைமறிப்புகள் இல்லாமல் இலக்குகள் மீது குண்டுகளை வீசிவிட்டு தளத்திற்கு விமானங்கள் திரும்பிப் போயுள்ளன.

அத்துடன், விமான எதிர்ப்பு பாதுகாப்பு முறைமைத் தாக்குதல்களால் வீழ்த்தப்படாமல் தளத்திற்குத் திரும்பிச் சென்றுள்ளன. ஆயினும் பாரதூரமான சேதத்தை ஏற்படுத்தியதாகத் தென்படாததால் அவர்களின் தந்திரோபாய முக்கியத்துவம் மட்டுப்படுத்தப்பட்டதாகக் காணப்படுகிறது.

எவ்வாறாயினும், வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் வெளிநாடுகளிலுமுள்ள ஆதரவாளர்கள் மற்றும் புலிகளின் உறுப்பினர்கள் மத்தியில் இந்தத் தாக்குதல்கள் உளவியல் ரீதியான உணர்வுகளைத் தக்க வைப்பது தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்க முடியும்.

இந்தத் தாக்குதல்களும் ஒரு பெண்புலி உறுப்பினர் உட்பட இரு கடற்புலிகளால் காங்கேசன்துறை துறைமுகத்தில் இரு வர்த்தகக் கப்பல்கள் மீது ஒக். 22இல் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களும் புலிகளின் ஒழுங்கு கட்டுப்பாடு என்பன சிறப்பாகச் செயற்படுவதைக் காட்டுகின்றன. இலங்கை இராணுவத்தால் வன்னிப்பகுதியில் தற்போது மேற்கொள்ளப்படும் தாக்குதல் நடவடிக்கைகளால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களின் மத்தியிலும் அவர்களின் ஒழுங்கும் கட்டுப்பாடும் சிறப்பாகச் செயற்படுவதை இது காட்டுகின்றது.

1950களில் கொரிய யுத்தத்தின் போது வடகொரியா பயன்படுத்திய யுத்த உபாயங்களை விடுதலைப்புலிகள் பயன்படுத்துவதாக கடந்த மார்ச்சில் விடுதலைப்புலிகள் வான்படையைப் பயன்படுத்த ஆரம்பித்த தருணத்திலிருந்து ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்து வந்தனர். எந்தவொரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நோக்கத்தையும் வென்றெடுக்காமல் தென்கொரிய, அமெரிக்க விமானப்படை விமானங்களுக்கு ஆச்சரியத்தையும் சங்கடத்தையும் கொடுக்கும் நோக்கில் வட கொரியா சிறிய ரக விமானங்களைப் பயன்படுத்தி அச்சமயம் தாக்குதல்களை மேற்கொண்டது.

விடுதலைப்புலிகள் விமானங்களைப் பயன்படுத்தியது முதல் இரண்டு சந்தர்ப்பங்களிலேயே கணிசமான உயிரிழப்புக்களும் தளபாட சேதாரங்களும் ஏற்பட்டன.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அநுராதபுர விமானப்படைப் பயிற்சித் தளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலும், இவ்வருடம் செப்டம்பர் 9இல் வவுனியா இராணுவத்தளம் மீதான தாக்குதலின் போதும் கணிசமான உயிரிழப்புக்கள் உடைமையிழப்புக்கள் என்பன ஏற்பட்டன. இவ்விரு தாக்குதல்களும் ஆகாயமார்க்கமாக புலிகளின் விமானப்படையினரும் தரைமார்க்கமாக தற்கொலைப் போராளிகளும் இணைந்து மேற்கொண்ட தாக்குதல்களாகும். தரை மார்க்கமாக மோதலில் ஈடுபட்ட தற்கொலைப்படை உறுப்பினர்களே பெருமளவு உயிர், உடைமை அழிவுகளை ஏற்படுத்தினர்.

விமானத்தின் பங்களிப்பு இங்கு உளவியல் ரீதியாக அத்தியாவசியமானதாக இருந்தது.

தரையிலுள்ள இலங்கை பாதுகாப்புப் படையினரின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக இது அத்தியாவசியமானதாகக் கருதப்பட்டது. ஆனால், வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கைகள் வான்மார்க்க, தரைமார்க்க உறுப்பினர்களிடையே சிறப்பான ஒத்துழைப்பின் தரத்தைக் காட்டுவனவாக உள்ளன. புலிகளின் விமானங்கள் தனியாகச் செயற்படும் போதெல்லாம் அதாவது தரைமார்க்கமாக உறுப்பினர்களுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படாத வேளைகளில் வென்றெடுக்கப்பட்ட பெறுபேறுகள் குறிப்பிடத்தக்கனவாக இல்லை.

தரைமார்க்க சக்திகளின் ஆதரவு இல்லாமல் பொருளாதார இலக்குகள் மீது தனியாக விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டால் கணிசமான சேதத்தை ஏற்படுத்த முடியும்.

ஆனால், குண்டுகள் போதியளவு சக்தி வாய்ந்தவையாக இருத்தல் வேண்டும்.

[அக்டோபர் 31ம் திகதி வைபவம் ஒன்றில் விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரன் விடுதலப் புலி விமானப் படை பிரிவைச் சேர்ந்தவருக்க்கு "நீலப் புலி விருது" வழங்குகின்றார்]

இதுவரை பொருளாதார நிலைகள் மீது விடுதலைப்புலிகள் இரு தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

கடந்த வருடம் கொழும்பில் பெற்றோல் குதங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதிலொன்றாகும். மற்றையது ஒக்.28இல் மேற்கொள்ளப்பட்ட அனல் மின் நிலையம் மீதானதாகும்.

இரு சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் போதியளவு சக்தி வாய்ந்தவையல்ல. அத்துடன், உபகரணங்களுக்குப் பாரதூரமான சேதத்தை ஏற்படுத்தக் கூடியவையுமல்ல. அத்தோடு சரியான இலக்கைக் கொண்டதாகவும் அது இல்லை.

இதன் விளைவாக பொருளாதார ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலிருந்து இவ்விரு தாக்குதல்களும் தோல்வியடைந்துள்ளன. இதேவேளை, அண்மைய தாக்குதல் முன்னைய தாக்குதல்களைப் போலவே இலங்கை விமானப்படையினதும் விமான எதிர்ப்புப் பாதுகாப்பு நடவடிக்கையினதும் உரிய தருணப் பாதுகாப்பு நடவடிக்கையின் பலவீனத்தை மீண்டுமொரு முறை வெளிப்படுத்தியுள்ளன.

விமான எதிர்ப்புச் சுடுகலன்களால் விமானத்தைச் சுட்டுவீழ்த்தக் கூடியதாகவும் இருக்கவில்லை. தாக்குதல் நடத்திய விமானங்களைத் துரத்திச் சென்று கீழே இறங்குவதை தடுக்கவும் முடியவில்லை.

விடுதலைப்புலிகளின் விமானங்கள் கீழே இறங்கிய இடத்தைக் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. ஆனால் விடுதலைப்புலிகளின் விமானங்கள் திரும்பிச் சென்ற வேளை இலங்கை விமானப்படை விமானங்கள் வானில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், புலிகளின் விமானங்கள் தரையிறங்கும் போது அவை தரையிறங்கும் இடத்தை அடையாளம் கண்டு தாக்குதல் நடத்துவதில் அவை தோல்வி கண்டுள்ளன.

புலிகளின் விமானம் பாதுகாப்பாகத் தரையறங்கியதுடன் அவர்களின் வான்படையைச் சேர்ந்த தொழில்நுட்பவியலாளர்கள் துரிதமாக அவற்றின் பாகங்களைக் கழற்றிக் கொண்டு அதனை அவர்கள் இரகசியமாக வைக்கும் இடத்திற்குக் கொண்டு சென்று விட்டனர்.

[நன்றி: வீரகேசரி]

October 29, 2008

காணொளி: 'அரும்புகள் அசைந்திடும் கொடிகளில்'

ரி.எம். சௌந்தரராஜன் வழங்கும், முருக பக்தி பாடல் - இலங்கையிலிருந்து இயற்கை காட்சிகளை உள்ளடக்கிய படக் கோவையுடன்:


ரும்புகள் அசைந்திடும் கொடிகளில்
இனி அடுத்தது அழகிய மலர்களே

அரும்புகள் அசைந்திடும் கொடிகளில்
இனி அடுத்தது அழகிய மலர்களே
முருகனை பணிந்த பின் மனங்களில்
பற்றி படர்வது பலவகை நலங்களே

அரும்புகள் அசைந்திடும் கொடிகளில்
இனி அடுத்தது அழகிய மலர்களே

மலை முடி மருவிய முகில்களில்
பயிர் விளைந்திட விழுந்தது மழைத்துளி
அழகனின் திருமிகு அடியிணை
கண்டு அடைந்தவர் அடைவது உயிர்த்துணை

அரும்புகள் அசைந்திடும் கொடிகளில்
இனி அடுத்தது அழகிய மலர்களே

குழல்வழி நுழைந்ததும் ஒலிகளின்
பெயர் இசை என விளங்குதல் இயற்கையே
குறுநகை குமரனின் உறவினில்
நம் குலம் வளம் பெறுவதும் இயற்கையே

அரும்புகள் அசைந்திடும் கொடிகளில்
இனி அடுத்தது அழகிய மலர்களே

பழம் தரும் பயன்மிகு மரங்களை
சுற்றி பசி மிகும் பறவைகள் பறந்திடும்
அருள் தரும் குறிஞ்சியின் தலைவனை
தொழும் அடியவர் திகழ்வதும் தொடர்ந்திடும்...தொடர்ந்திடும்

அரும்புகள் அசைந்திடும் கொடிகளில்
இனி அடுத்தது அழகிய மலர்களே
முருகனை பணிந்த பின் மனங்களில்
பற்றி படர்வது பலவகை நலங்களே...நலங்களே

அக் 29-நவ 3: கலி தீர்க்கும் கந்தசஷ்டி கவசமும் விரதமும்

இன்று அக்டோபர் 29 கந்தசஷ்டி விரதாரம்பம்

நா. சிதம்பரநாதர்

ன்றோ ஒருநாள் அழியப் போகும் இவ்வுடம்பைக் காப்பாற்றும் உடம்பின் வெளி உறுப்புகளுக்கு கவசம் அணிகின்றோம்.

மோட்டார் சைக்கிளில் செல்பவர் தலைக்கவசம் அணிகிறார். யுத்தம் செய்யப் புறப்படுபவர்கள் ஒவ்வோர் அவயவத்திற்கும் தனித்தனி கவசங்கள் அணிகிறார்கள். கைகளில் நோய்க் கிருமிகள் தாக்குவதை தவிர்க்க கையுறைகளும் கால்களைப் பாதுகாப்பதற்கு காலுறை போன்ற பாதணிகளும் அணிகிறார்கள்.

கொழும்பு, கொம்பனித் தெரு ஸ்ரீ சிவசுப்பிரமாணிய சுவாமி கோயிலிருந்து - [மேலும் படங்கள்]

என்றும் அழியாத ஆன்மாவாகிய உயிருக்கு ஆணவம், கன்மம், மாயையாகிய மும்மலங்களிலிருந்து பாதுகாப்பளிக்க என்ன கவசம் இருக்கிறது? ஆம், ஒரே ஒரு விலைமதிக்க முடியாத கவசம் இருக்கின்றது. அதுதான் பாலன் தேவராஜன் அருளிய கந்தசஷ்டி கவசம். இது ஒரு தெய்வீகமான ஒப்பற்ற கவசம்.

இக்கவசத்தை மனத் தூய்மையுடனும் பக்தியுடனும் தினமும் ஓதினால் உள்ளம் தூய்மையடைவதுடன் உயிரும் மும்மலங்களினின்றும் பிறவிப் பிணியினின்றும் பாதுகாக்கப்பட்டு ஆன்மா கந்தப்பெருமானின் திருவடிகளை அடைகின்றது.

அரிதாகிய மானிடப் பிறவி, ஆறாவது பகுத்தறிவுடன் எமக்குக் கிடைத்தமைக்கு நாம் எம்மைப் படைத்த இறைவனுக்கு என்ன கைமாறு செய்ய முடியும். அவன் பாதத்தை நினைந்து தினமும் மனதினால் அவன் திருவருளையும் புகழையும் நினைந்து மறவாது நன்றி தெரிவித்தல் வேண்டும்.

"அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி.'' ஏ மனமே! வானவர்களாகிய தேவர்கட்கு ஏற்பட்ட துன்பம் அழிந்து போகுமாறு பகைவர்களுடன் போர் புரிந்து அப்பகைவர்களை அடியோடு அழித்த முருகப் பெருமானுடைய பாதங்களைச் சிந்திப்பாயாக. மேலும், நிர்மலமான தூய வடிவினனான சிவபெருமான் திருவருளால் அவதாரம் செய்த கந்தப் பெருமானுடைய மந்திர நூலாகிய கவச நூலை பொருள் உணர்ந்து முறைப்படி தோத்திரம் செய்பவர்கட்கு அவர்களைப் பீடித்திருக்கும் கொடிய வினைகள் யாவும் நீங்கும்; கொடும் மனத்துயரம் யாவும் நில்லாது ஓடிப் போகும்.

சஷ்டி கவசத்தை நெஞ்சில் அழியாவண்ணம் நிலைநிறுத்தி ஓதுவார்க்கு அன்புச் செல்வமானது சிறப்புற்று வளர்ச்சியடையும். தியான நிஷ்ட நிலையும் கிடைக்கப் பெறும்.

அடுத்ததாகக் கந்தசஷ்டி விரத மகிமையை நோக்குவோம். விரதம் என்பது மனம், பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு உணவை விடுத்தேனும் சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் இறைவனை விதிப்படி மெய்யன்போடு விசேஷமாக வழிபடுதல் ஆகும்.

அறியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப் பேரருளை அடைவதற்காகச் சைவப் பெருமக்களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் தலையாயது கந்தசஷ்டி விரதம். மேலும் வல்வினை நீக்கி, வரும் வினை போக்கி, வரும் வழி பாதுகாத்து செல்லும் வழிகாட்டி செல்வமும் செல்வாக்கும் தந்து அழகும் அறிவும் தந்திடும் வள்ளி மணாளனை, வடிவேலனை வழிபடும் முறைகளில் மிகவும் சிறந்தது இந்தக் கந்தசஷ்டி விரதமாகும். உணர்வுகளை அடக்கி உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி கந்தப் பெருமானின் பெருமை பேசி இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழியமைப்பதே இந்த விரதத்தின் பெறுபேறாக அமைகிறது.

விநாயகப் பெருமானின் பேரருளைப் பெற விரும்புவோர் வளர்பிறைச் சதுர்த்தித் திதிகளிலே ஆவணி மாத வளர்பிறைச் சதுர்த்தித் திதியை விநாயக சஷ்டி எனச் சிறப்பாக விரதம் அனுஷ்டித்து வழிபாடு செய்வார்கள்.

அதேபோன்று கந்தப் பெருமானின் கடாட்சத்தையும் கருணையையும் பெற விரும்புபவர்கள் சஷ்டித் திதிகளிலே பிரதானமாக ஐப்பசி மாத வளர்பிறைச் சஷ்டியை கந்தசஷ்டி என்று நாமம் சூட்டி ஐப்பசி மாத அமாவாசையைத் தொடர்ந்து வரும் பிரதமைத் திதி தொடங்கி ஆறாம் நாள் சஷ்டித் திதியையே கந்தசஷ்டி என்று வெகு விசேஷமாக விரதமனுஷ்டித்து கந்தப் பெருமானை வழிபாடு செய்வார்கள்.

இவ்விரதம் பிரதமை திதி தொடக்கம் ஆறு நாட்கள் வரை அனுஷ்டிக்கப்படும். தேவாதி தேவர்களும் இவ்விரதத்தினால் முருகன் அருளைப் பெற்றார்கள் என்று கந்தபுராணமும் கூறுகிறது. முறைப்படி கந்தசஷ்டி விரதம் இருந்தவர்கட்கு கலியுக வரதனாம் கந்தப்பெருமான் சகல சௌபாக்கியங்களையும் கொடுத்தருளுவான் என்பது அனுபவ உண்மையாகும்.

இவ்விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் விரத நாட்களில் வைகறையில் துயில் எழுந்து சந்தியாவந்தனம் முதலிய காலைக்கடன்களை முடித்து, தூய நீராடி, தோய்த்துலர்ந்த ஆடையணிந்து அமைதியான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ அமர்ந்து அல்லல் தீர்க்கும் ஆறுமுகப் பெருமானை நினைந்து தியானம் செய்ய வேண்டும். தியானத்துடன் நில்லாது மனம் பொறிவழிச் செல்லாது இறையருளை நாடி வேறு சிந்தனையின்றி களிப்புற வேண்டும். விரத காலங்களில் மனம் வேறு எண்ணங்களில் ஈடுபடாதிருக்க கந்தசஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனு பூதி, கந்தர் கலிவெண்பா போன்ற நூல்களைப் படிக்க வேண்டும். முருகனாலயங்களில் இவ்விரத நாட்களில் கந்தபுராண படனம் நடைபெறும்.

இதை தவறாது கேட்டல் மிகவும் ஆன்மிக நன்மை பயக்கும்.

விநாயக புராணத்தில் ஆணவமே உருவான கஜமுகாசுரன் விநாயகப் பெருமானுடன் போர் புரிந்து விநாயகப் பெருமானால் ஆணவம் அழிக்கப்பட்டு மூஷிகமாக என்றும் எம்பெருமான் திருவடியில் இருக்கிறான். கந்தபுராணத்தில் ஜீவான்மாவைப் பீடித்திருக்கும் மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகியன உருவாய் வந்த அசுரர்கள் முருகப் பெருமானின் ஞானசக்தியாய் திருக்கை வேலினால் அழிக்கப்பட்டு ஆன்மா முக்தியடைதலை காட்டுகின்றது. சச்சிதானந்தப் பரப்பிரம்மமாகிய பரமசிவன் உலகம் உய்வதற் காக கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டுங்கொண்டு ஒரு திருமுருகனாக வந்தார் என்று கந்தபுராணம் எடுத்துக் கூறுகின்றது. அசுரர்கள் தாம் செய்த கடும் தவத்தினால் சிவபெருமானிடம் இருந்து பெறப்பட்ட வரத்தினை ஆணவ முனைப்பினால் மறந்து தேவர்கட்குப் பல இன்னல்களைச் செய்தார்கள். மாயைக்கு தாரகாசுரனையும், கன்மத்துக்கு சிங்கமுகாசூரனையும், ஆணவத்துக்கு சூரபத்மனையும் உருவகப்படுத்தி கந்தபுராணம் மனிதகுலத்துக்குச் செய்ந்நன்றி மறவாமையையும் கூறுகின்றது. சைவசித்தாந்த முடிவின்படி ஆன்மா மும்மலங்களினின்றும் விடுபட்டு இறைவனையொப்பு மலப?பாகம் ஆகிய முக்தியின்பத்தையும் காட்டுகின்றது.

எனவே, கந்தவேற் பெருமானின் சஷ்டி விரதத்தை முடிந்தளவு பக்தி சிரத்தையுடன் அனுஷ்டித்து அவனருள் பெறுவோமாக.

[நன்றி: வீரகேசரி]

October 28, 2008

இலங்கை பற்றிய இந்திய குழுவில் தமிழகத்தை சேர்ந்தவர் உள்ளடக்கப்பட வேண்டும்

லங்கை அரசின் வாக்குறுதிகளை தொடர்ந்தும் நம்புவதற்கு, இந்திய - தமிழக அரசுகள் ஏன் இன்னும் தயாராக இருக்கின்றன என்று கேள்வி எழுப்பி தமிழக நாளேடு தினமணி அக்ரோபர் 29ம் திகதிய இதழில் ஆசிரியத் தலையங்கம் தீட்டியுள்ளது.

ஏமாறாதே! ஏமாற்றாதே!!, என்று தலைப்பிட்டு, "இலங்கைப் பிரச்னையைப் பற்றி நன்றாகத் தெரிந்த தமிழக அரசியல்வாதி ஒருவரை உள்ளடக்கிய இந்தியக் குழுவால் மட்டும்தான் இலங்கையின் சமாதானத்துக்கு வழிகோல முடியுமே தவிர, அதிகாரிகளால் முடியாது", எனவும் தினமணி வலியுறுத்தியுள்ளது.

தினமணி ஆசிரியத் தலையங்கம் முழுவதுமாக:

ஜெயவர்த்தனே காலத்திலிருந்து கூறப்படும் மாகாணங்களுக்குக் கூடுதல் அதிகாரம் தருவோம், அப்பாவிப் பொதுமக்களை எக்காரணம் கொண்டும் தாக்க மாட்டோம், பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கு தடையின்றி நிவாரண உதவிகள் வழங்கப்படும், இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் போன்றவற்றைக் கேட்டுக் கேட்டு நமக்கெல்லாம் சலித்துவிட்டாலும், இந்திய அரசுக்கும், நமது முதல்வருக்கும் இலங்கை அரசின் வாக்குறுதிகளில் நம்பிக்கை தொடர்வது எதனால் என்பது புரியவில்லை.

மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்கிற தனது நம்பிக்கை வீண்போகவில்லை என்றும் மத்திய அரசின் நடவடிக்கைகள் தனக்குத் திருப்தி அளிப்பதாகவும் முதல்வர் கூறி இருப்பது விசித்திரமாக இருக்கிறது. மத்திய அரசு அப்படி என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று தெரியவில்லை. பாசில் ராஜபக்ஷவிடம் பேச்சு வார்த்தை நடத்தி, பலமுறை தந்த உதட்டளவு உத்தரவாதத்தை மறுபடியும் பெற்றிருப்பது முதல்வரைத் திருப்திப்படுத்தி இருப்பது ஆச்சரியம்தான்.

அல்லல்படும் இலங்கைத் தமிழர்களுக்குப் பாதுகாப்பும், பாதிக்கப்பட்டால் நிவாரணமும் தர வேண்டிய கடமை இலங்கை அரசுக்கு உண்டு. அதை அவர்கள் செய்யத் தவறி இருப்பதிலிருந்தே, எந்த அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது என்று நாம் புரிந்து கொள்ளலாம். அவதிப்படும் இலங்கைப் பிரஜைகளான தமிழர்களுக்குத் தங்களது செலவில் நிவாரணம்கூடத் தரத் தயாராக இல்லாமல் அதை இந்தியாவிலிருந்து கேட்டுப் பெறுகிறது அந்த அரசு என்றால், நாம் ஏமாளிகளாக இருக்கிறோம் என்றுதானே பொருள்?

தன்மான உணர்வு, சுயமரியாதை என்று ஊருக்கு உபந்நியாசம் செய்யும் முதல்வர், தன்மானமும், சுயமரியாதையும் இல்லாமல் தனது நாட்டுக் குடிமக்களுக்கு அன்னிய நாட்டின் நிவாரணம் கேட்கும் இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவிக்காமல் இங்கே நிவாரண நிதி திரட்ட முற்பட்டிருக்கிறார். முன்பு, பழ. நெடுமாறன் திரட்டி வைத்திருந்த மருந்துகள் மற்றும் நிவாரணப் பொருள்களை வீணடித்தபோது இல்லாத உத்வேகம், இப்போது திடீரென்று முதல்வருக்கு வந்திருக்கிறதே, அது ஏன்? புரியவில்லை!

விடுதலைப் புலிகள் அப்பாவிப் பொதுமக்களை மனிதக் கவசங்களாகப் பயன்படுத்துவதால் அவர்கள், சிலவேளைகளில் பாதிப்புக்கு உள்ளாக நேர்கிறது என்பது இலங்கை அரசின் வாதம். நடத்துவது என்னவோ விமானக் குண்டு வீச்சு. அதில் எங்கிருந்து வருகிறது மனிதக் கவசம் என்று கேள்வி கேட்கக்கூடவா முதல்வருக்கும், மத்திய அரசுக்கும் தெரியாமல் போய்விட்டது?

கிளிநொச்சியில் இருக்கும் ஒரே மருத்துவமனையும் குண்டு வீச்சுக்கு இரையாகி விட்ட நிலையில் மருத்துவ வசதி இல்லாமல் அங்கே அப்பாவிகள் செத்து மடிகிறார்கள். போர்நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு தான் பேச்சுவார்த்தை என்றல்லவா முதல்வர் இந்திய அரசை வற்புறுத்தி இருக்க வேண்டும்.

இலங்கைப் பிரச்னையில் அரசியல் தீர்வு என்று பேசுபவர்கள், முதலில் அதிகாரிகள் மூலம் இந்தப் பிரச்னையை அணுகுவதை நிறுத்த வேண்டும். இலங்கைப் பிரச்னையைப் பற்றி நன்றாகத் தெரிந்த தமிழக அரசியல்வாதி ஒருவரை உள்ளடக்கிய இந்தியக் குழுவால் மட்டும்தான் இலங்கையின் சமாதானத்துக்கு வழிகோல முடியுமே தவிர, அதிகாரிகளால் முடியாது என்று எடுத்துச் சொல்ல முதல்வர் ஏன் தயங்குகிறார்?

மத்திய அரசை வேதனைக்கு உள்ளாக்கும் வகையில் சிக்கலை உருவாக்க மாட்டோம் என்று முதல்வர் கருணாநிதியும், இலங்கை அரசின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று மத்திய அரசும் நிலைப்பாடு எடுத்திருக்கும்போது, அங்கே அன்றாடம் செத்து மடியும் அப்பாவித் தமிழர்களுக்கு எப்படி நிவாரணமும் நியாயமும் கிடைக்கும்? நாம் அனுப்பும் நிதியும், நிவாரணமும் இலங்கை அரசால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் போய்ச் சேரும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

நாற்பதாண்டுப் பிரச்னையை நான்கு நாள்களில் தீர்க்க முடியாது என்கிற முதல்வரின் கருத்து சிரிப்பை வரவழைக்கிறது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தின்போதும், எம்.பி.க்கள் ராஜிநாமாவின் போதும், மனிதச் சங்கிலி நடத்தியபோதும் தெரியாத இந்த உண்மை, மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் வந்தவுடன்தான் முதல்வருக்குத் தெரிந்ததா என்ன? அது போகட்டும். கடந்த ஒன்பது ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக இந்தப் பிரச்னைக்கு ஏன் தீர்வு காண முயற்சிக்கவில்லை?

பாகிஸ்தானின் முன்னாள் உளவுத்துறைத் தலைவர் கொழும்பில் பாகிஸ்தான் தூதராக அமர்ந்து ராஜபக்ஷ அரசுக்கு ஆலோசனை வழங்கி வரும் நிலையில், சீனாவுடன் மிக நெருக்கமான உறவை இலங்கை அரசு வளர்த்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்திய அரசு உதட்டளவு உத்தரவாதத்தை நம்புவது சரியான ராஜதந்திரம் ஆகாது!

October 27, 2008

95வது வயதை பூர்த்தி செய்யும் பிரம்மஸ்ரீ பா. சண்முகரத்தின சர்மா

பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா

கொழும்பு 10 கப்பித்தாவத்தை ஸ்ரீபாலசெல்வ விநாயகர் ஆலய பிரதம குருவும் இலங்கையின் அந்தண குழாமின் மூத்த சிவாச்சாரியாருமான பிரம்மஸ்ரீ பா. சண்முகரத்தின சர்மா இன்று செவ்வாய்க்கிழமை - அக்ரோபர் 28ம் திகதி, சித்திரை நட்சத்திரத்தில் விநாயக பெருமானின் அநுக்கிரகத்துடன் 95 வயதை பூர்த்தி செய்கின்றார்.

இவர் 1942 இல் இராஜலக்ஷ்மி அம்மாளை மணம் புரிந்தார். மணவாழ்வில் புகுந்த அவர் பெரியோர்களின் ஆசியின் படியே பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்பதற்கிணங்க 8 ஆண் குழந்தைகளையும் 3 பெண்பிள்ளைகளையும் தவப்புதல்வர்களாக கொண்டவர். மனைவி ராஜலக்ஷ்மியும் சுமங்கலியாகவே சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் இறைவனடி சேர்ந்தார்.

1938இல் மருதானையில் அமைந்துள்ள யாருக்கும் கண்ணுக்கு புலப்படாமல் இருந்த ஸ்ரீ பால செல்வ விநாயகர் ஆலயத்தின் அர்ச்சகராக சேர்ந்து கொண்டார். இன்று வரை ஓம்கார மூர்த்தியான வில்லங்கங்களைப் போக்கும் விநாயக பெருமானுக்கே 60 வருடங்களாக அன்பாலும் பணிவாலும் தளராத முயற்சியாலும் தனது பிள்ளைகளையும் நல்வாழ்வுக்கு கொண்டு வந்தது அல்லாமல் ஆலயத்தையும் இலங்கையின் பெருமை மிக்க புனித ஆலயமாக உருவாக்கினார்.

இவர் யாழ். பரமேஸ்வரா கல்லூ?யின் பழைய மாணவர் ஆவார். செல்வ விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகங்கள் 1950 ஆம் ஆண்டு சங்கானை சிவஸ்ரீ விஸ்வநாத குருக்களினாலும் 1962, 1974, 1986, நயினாதீவு சிவஸ்ரீ ஐ. கைலாசநாத குருக்களினாலும் 1998 ஆம் ஆண்டு நவாலியூர் சிவஸ்ரீ சுவாமி விஸ்வநாத குருக்களினாலும் பக்திபூர்வமாக இக் கும்பாபிஷேகங்கள் நிறைவேற்றப்பட்டன. தற்பொழுது பாலஸ்தாபனத்தில் உள்ள இவ் ஆலயம் மிக விரைவில் மிகவும் இந்திய சிற்ப வேலைப்பாடுடைய மகா மண்டபமும் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் மிக விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக கோயில் குருக்கள் நாளும் பொழுதும் அயாராது உழைத்து வருகின்றார்கள்.

காஞ்சி ராஜப்பா குருக்கள், காளியம்பாள் சாம்பசிவமூர்த்தி குருக்கள். தாம்பரம் முத்து குருக்கள் போன்ற தென்னிந்திய குருமார்கள் இவரது ஏற்பாட்டில் நடைபெற்ற கும்பாபிஷேகங்களில் கலந்து சிறப்பித்தவர்கள். முன்னாள் இந்து கலாசார அமைச்சர் செல்லையா இராசதுரைக்கு முதலாம் உலக இந்து மாநாட்டிற்கு பெரும் ஒத்துழைப்பு கொடுத்தவர் மேலும் அஸ்வமேத யாகம் நடைபெறுவதற்கு அளப்பெரிய பங்கினை வகித்தவர். இரண்டாம் உலக இந்து மாநாட்டின் போது முன்னாள் இந்து கலாசார அமைச்சர் அமரர்.தி மகேஸ்வரன் அவர்கள் மூலம் தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட மகா குரு.

இவர் முன்னர் இந்து கலõசார அமைச்சராக இருந்த கே. என். டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து கொழும்பு முகத்துவாரம் ஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயக ஆலய வளாகத்தில் வேத சிவாகம பாடசாலையான ஸ்ரீ வித்தியா குருகுலம் 2002 இல் ஸ்தாபிக்கப்பட்டது.

கதிர்காம தொண்டர் சபை, மாளிகாவத்தை சித்தி விநாயகர் ஆலயம் போன்றவற்றில் ஆலோசகராகவும் கொழும்பு ராமகான சபையில் 39 வருடமாக தலைவராகவும் மற்றும் சிவ பிராம்மண சங்கத்தின் தலைவராகவும் ஸ்ரீ வித்தியா சர்வதேச இந்து மத பீடத்தின், சர்வதேச இந்து மத பீடத்தின் போஷகராகவும் கடமையாற்றி வருகின்றார்.

2007 கம்பன் விழாவில் இவரது அயராத ஆன்மிக சேவையைப் பாராட்டி மிகப் பெரும் கௌரவம் இவருக்கு அளித்தது.

அமரர் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸாவின் மிகப்பெரும் மதிப்புக்குள்ளானவர்.

எல்லோரையும் எளிமையாக தன்பால் கவர்ந்து ஆன்மிக சேவையை சிறப்புறச் செய்து வரும் குருக்கள் மேலும் நன்கு வாழ நாம் அனைவரும் பிராத்திப்போமாக.

நன்றி: வீரகேசரி

October 26, 2008

அகநானூற்றில் தீபாவளி

தமிழாகரர் தெ. முருகசாமி

தீப+ஆவளி = தீபாவளி. தீபம்-விளக்கு; ஆவளி-வரிசை:

தீபங்களை வரிசையாக வைத்து வழிபடும் விழாதான் தீபாவளி. ஐப்பசி அமாவாசையையொட்டிக் கொண்டாடப்படும் இவ்விழா, வடவரின் நாகரிகக் கலப்பால் தமிழர்கள் மேற்கொண்டுவிட்ட விழாவாகும். இதன் அமைப்பைக் கார்த்திகை மாத முழுநிலாவில் கொண் டாடும் கார்த்திகை விளக்கு விழாவாக அகநானூற்றில் நக்கீரர் 141-ம் பாடலில் கூறுகிறார். இதனால் கார்த்திகை தீபத் திருநாள்தான் தமிழர் தீபாவளியானாலும் அதை தீபாவளி எனக் கூறுவதில்லை. நாகரிகக் கலப்பான ஒரு காரணமன்றி வேறு சரியான காரணம் தமிழர் மேற்கொண்டுவிட்ட ஐப்பசி தீபாவளிக்குக் கூறமுடியவில்லை.

இலங்கை தமிழ் இல்லத்தில் கார்த்திகை விளக்கு: [மேலும் படங்கள்]

பொதுவாகத் தீபாவளி என்றாலே இனிப்புப் பலகாரங்களும், புத்தாடையும், புதுமணத் தம்பதியரைத் தலைதீபாவளி என அழைத்து வந்து மகிழ்வதும்தான் இன்றியமையாததாகக் கருதப்படும். இத்தகு நிலைக்கு மேலாக விளக் குகளை வரிசையாக ஏற்றி வைத்துக் கொண்டாடும் வழக்கம் தமிழ் மக்க ளிடம் இல்லை. ஆனால், தமிழ் நாட்டை வாழும் இடமாகக் கொண் டுள்ள வடநாட்டு மக்கள் தங்கள் வீடுகள் தோறும் வரிசையாக விளக்கு களை ஏற்றிவைத்துக் கொண்டாடுகிறார்கள். இதுபோன்ற வழக்கம் கார்த்திகைத் திங்களில்தான் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது என்ற உண்மையை அகநானூறு பதிவு செய்துள்ளது.

" உலகு தொழில்உலந்து நாஞ்சில் துஞ்சி
மழை கால்நீங்கிய மாக விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர மதி நிறைந்து
அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகதில்! அம்ம,
.... ...... ...... ..... ...... ...... .......
புதுமண மகடூஉ அயினிய கடிநகர்ப்
பல்கோட்டு அடுப்பில் பால்உலை இறீஇ
கூழைக் கூந்தல் குறுந்தொடி மகளிர்
பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து
பாசவல் இடிக்கும்..... ...... ....... .......
வேங்கட வைப்பின் சுரன்இறந் தோரே!''

கொழும்பு, பம்பலப்பிட்டியில் நாட்டுக்கோட்டை நகரத்தார், கதிரேசன் கோயிலில் தீபாவளி தினத்தன்று: [மேலும் படங்கள்]

பொருள்தேட வெளியூர் சென்ற கணவன் ஊர் மக்கள் விளக்கேற்றிக் கொண்டாடும் கார்த்திகை விளக்கு விழாவின்போது வந்துவிடுவான் என மனைவி மகிழ்ந்து தோழியிடத்துக் கூறுவதாக 141-ம் பாடலில் விளக்கேற்றி வழிபடுதற்கான காலச்சூழல் முதலில் நக்கீரரால் கூறப்படுகிறது.

உழவுத் தொழில் முடிந்துவிட்டதால் உழும் கருவியான கலப்பை வேலையின்றிக் கிடக்கிறது. உழவுக்கு உதவியாக மேகமும் தக்கவாறு மழைபொழிந்து ஓய்ந்து விட்டதால் ஆகாயம், கருமேகம் சூழாத நிலை யில் தெளிவாகக் காணப்படுகிறது. ஆறு விண்மீன்கள் அருகிருக்கக் காயும் முழு நிலாவானது இருளை நீக்கி வானில் காணப்படுகிறது. இந்நா ளில் வீடுகள்தோறும் மக்கள் பூமாலைகளைத் தொங்கவிட்டு விளக்கு களை ஏற்றி வைத்துக் கூட்டமாகக் கூடி விழா கொண்டாடுவார்கள்.

இக்கார்த்திகை விளக்கு நாளில் புது மணமகன் உண்பதற்காக பசிய அவலாலான இனிப்புப் பொருள் செய்வதற்காக வீட்டிலுள்ள பெண் கள் நெல்லின் கதிர்களைப் பறித்து அவற்றை உரலில் இட்டு உலக்கை யால் குத்திப் பக்குவப்படுத்துகிறார்கள். அங்ஙனம் குத்தும் உலக்கையின் ஒலியைக் கேட்டுப் பயந்தப் பறவை தானிருந்த வாழை மரத்தை விட்டு வேறொரு பெரிய மரத்தில் தங்கி தன் குஞ்சுப் பறவைகளைக் கூவுகின்றன. இத்தகு மரங்கள் அடர்ந்த இடையாறு என்னும் வளம்மிக்க நகரத்தைப் போன்று பெரிய செல்வ வளத்தைத் தேடி வருவதற்காகத் திருவேங்கட மலையைக் கடந்து சென்ற கணவன், கார்த்திகை விழாவின் போதுவந்துவிடுவான் என மனைவி எண்ணிக் கூறுவதாக நக்கீரர் இப்பாடலை அமைத்துள்ளார்.

அப்பாடலில் "மதிநிறைந்து அறுமீன் சோரும் அகல் இருள் நடுநாள்' என்றது, கார்த்திகை மாத முழுநிலா நாளைக் (பெüர்ணமி) குறிப்பதாகும். முருகனைக் கார்த்திகைப் பெண்கள் அறுவர் வளர்த்ததால் அவர் கள் வரம் வேண்டியபடி வானில் ஆறு விண்மீன்களாயினர் என்பது புரா ணச் செய்தி. முருகனோடு தொடர்புடைய கார்த்திகை நாள் ஒவ்வொரு மாதத்தில் வந்தாலும் அது கார்த்திகை மாத முழு நிலவோடு கூடி நிற்கும் போது சிறப்புக்குரியது என்பதால் மேற்படித் தொடர் கார்த்திகை மாதத் தைக் குறிக்கும். மேலும் இப்பாடலில் "புதுமணமகடூஉ' என்றது, புது மணமகனை மட்டும் குறித்தாலும் தலைதீபாவளியை மணமகள் வீட்டில்தான் கொண்டாடும் வழக்கம் இன்றும் உள்ளதால் புது மணமக்களைத் தலை தீபாவளிக்கு அழைத்துவரும் செய்தியைக் குறிப்பதாகக் கருதலாம். இதனால் புது மணமக்களுக்குப் புத்தாடை வழங்கப்பட்டதாகவும் கருதலாம்.

இன்னும் இப்பாடலில் புதுமண மகடூஉ "அயினிய' என்றதால் மணமக்கள் உண்ண வேண்டி பால் உலையில் பசுமையான அவலையிட்டு இனிப்புப் பொருள் செய்ய முயற்சித்தக் குறிப்பு கூறப்பட்டுள்ளதால் பொதுவாகத் தீபாவளிக்கு இனிப்பு செய்யும் வழக்கம் அன்றுமுதல் இருந்ததாக அகநானூற்றால் அறிய முடிகிறது.

எனவே, பழந்தமிழ்க் கார்த்திகை விளக்கு வழக்கம் இக்காலத்தில் ஐப்பசி மாதத்தில் விளக்கை வரிசையாக ஏற்றி வைப்பதைத் தவிர்த்ததாகஅமைந்துவிட்டதற்கு வேற்றுப்புல நாகரிகக் கலப்பே காரணமன்றி வேறு காரணம் இல்லை எனலாம். [நன்றி: தினமணி]


ஊற்று வாசகர்களுக்கு தீபாவளி நல் வாழ்த்துக்கள்: வீணை விற்பனர் ராஜேஷ் வைத்தியா வழங்கும் ~ கிரிஷ்ணா முகுந்தா மூராரே ~

October 25, 2008

இலங்கை தமிழர் ஆதரவு மனிதச் சங்கிலி காணொளியில், கலைஞர் ரி.வி இல் இருந்து

" மனிதச் சங்கிலிக்கு மேலும் பெருமை சேர்த்தது மழை தான்; அதனால் "மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்'' என்போம். 21-ந் தேதி மனித சங்கிலி நடத்துவதாக இருந்து பெரு மழை காரணமாக அதனை ஒத்திவைக்க நேர்ந்தபோது, 24-ந் தேதியும் மழை பெய்தால் என்ன செய்வது, தீபாவளி நெருங்கிவிடுமே என்றெல்லாம் கருத்துக்கள் கூறப்பட்டன. அதைப் போலவே 24-ந் தேதி சரியாக 3 மணிக்கு பெருமழை நகரெங்கும் கொட்டியது.

எனினும், அந்தக் கொட்டும் மழையிலும் தமிழர்கள் கட்சிப் பாகுபாடுகளைக் கடந்து -அனைத்துத் தரப்பினர், அனைத்துக் கட்சியினர், வழக்கறிஞர்கள், மாணவ-மாணவிகள், கலை உலகத்தினர் என தமிழர்களின் உணர்வு பட்டுப்போய் விடவில்லை என்பதை மெய்ப்பிக்கின்ற வகையிலே மனிதச் சங்கிலி வெற்றி கண்டுள்ளது. அதன் வெற்றிக்கு காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கும், அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் " - முதல்வர் கருணாநிதி

October 24, 2008

இலங்கைத் தமிழருக்க்காக அறவழிச் செயல் முறைகளில் நாம் ஈடுபட வேண்டும்

லங்கைத் தமிழருக்கு நிரந்தர இன்பம் வாய்த்திடவும், அமைதியின் சுகந்தம் நிறைந்திடவும் அறவழிச் செயல் முறைகளில் நாம் ஈடுபட வேண்டும்என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தாய்த் தமிழக மக்களின் நீண்ட காலக் கனவு படிப்படியாக நிறைவேறி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

[அண்ணா சாலையில் மனிதச் சங்கிலி அணிவகுப்பில் கொட்டும் மழையில் நிற்கும் கல்லூரி மாணவிகள்-படம்: தினமணி]

இதுதொடர்பாக அவர் அக் 24ம் திகதி, வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அனைத்துக் கட்சிக் கூட்டம் நடப்ப தற்கு ஒரு வாரம் முன்னதாகவே மயிலை மாங்கொல்லையில் திமுக சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது.

அந்த சமயத்தில் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மன்மோகன் சிங்கிடம், இலங் கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலி யுறுத்தினேன். அக்டோபர் 6-ம் தேதி மாலையில் இந்திய பாதுகாப்பு ஆலோ சகரை அழைத்து, தில்லியில் உள்ள இலங்கைத் தூதரை வரச் சொல்லி எச் சரிக்கச் செய்தார்.

அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்த 14-ம் தேதி மாலை தில்லியில் செய்தியா ளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோ கன், இலங்கை நிலவரம் பற்றி கவலை தெரிவித்தார்.

16-ம் தேதி வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளி யிட்ட அறிக்கையிலும், இலங்கை அர சின் செயல்பாடு பற்றி கவலை தெரிவித் துள்ளார்.

இதையெல்லாம் பார்க்கும்போது, நாம் அனுப்பிய தீர்மானங்களை நன்றா கப் பரிசீலித்து அதனை ஏற்கும் வகை யிலே மத்திய அரசு செயல்படும் என்ற நம்பிக்கை மேலும் கூடுகிறது.

கடந்த 18-ம் தேதி இலங்கை அதிபர் ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர், அப்பாவித் தமிழர் தாக்கப்படுவது பற்றி கவலை தெரிவித் ததாக செய்திகள் வந்துள்ளன. இடம் பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருள் கள் தடையின்றி வழங்க வேண்டும் என்றும், விடுதலைப் புலிகளுக்கு எதி ரான போரில் தமிழரின் உரிமையும் நலன்களும் பாதிக்கப்படக் கூடாதென் றும் பிரதமர் தெரிவித்ததாகவும் செய்தி கள் கூறுகின்றன
மேலும், இலங்கையில் உள்ள நிலையை அறிய பிரணாப் முகர்ஜியை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் செய்தி வந்துள்ளது.

கடந்த 16-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபை மூலம் அனுப்பிய 750 டன் உண வுப் பொருள்கள் இலங்கையின் வடக் குப் பகுதியில் விநியோகிக்க மறுக்கப் பட்ட நிலையில், பிரதமர் பேசியதன் விளைவாக, அதே நாளில் 2.30 லட்சம் பேருக்கு அவை விநியோகம் செய்யப் பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.

வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவசங்கர மேனன், தில்லியில் உள்ள இலங்கைத் தூதரை அழைத்து இந்திய அரசின் கண்டனத்தை உடனடியாக இலங்கைக்குத் தெரிவிக்குமாறும் கேட் டுக் கொண்டார்.

பிரணாப் முகர்ஜி 22-ம் தேதி நாடா ளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை யில், தமிழ் மக்களின் உரிமைகளும், அவர்களின் நல்வாழ்க்கையும் பாதிக் கப்படக்கூடாது எனக் கூறியுள்ளார்
இவ்வாறு மத்திய அரசின் செயல்கள், நமது வேண்டுகோளை நிறைவேற் றும் வகையிலும், இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறை காட்டுகிற வகையிலும் அமைந்துள்ளதை அறிய முடிகிறது.

ஆனாலும் இதுவே நமக்கு முழு மன நிறைவைத் தரக் கூடிய விளைவாகும் என எண்ண முடியவில்லை. தரப்படும் உறுதிமொழிகள் தவறாமல் நிறைவேற்றப்படவும், இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தரகுடிமக்களாகவும், சிங்களவர்களுக்கு நிரந்தர அடிமைகளாகவும் இருக்க வேண்டுமென்ற ஆதிக்க வெறியும், சிங்கள இன வெறியும் அறவே அகற்றப்படும் என்ற நம்பிக்கை நமக்கு ஏற்பட்டாக வேண்டும்.

இப்போது படிப்படியாக நிறைவேறி வரும் தாய்த் தமிழக மக்களின் நீண்ட காலக் கனவு, முழுமையாக நிறைவேறிட வும் இலங்கைத் தமிழருக்கு நிரந்தர இன்பம் வாய்த்திடவும், அமைதியின் சுகந்தம் நிறைந்திடவும் அறவழிச் செயல் முறைகளில் நாம் ஈடுபட வேண்டும்.

அதற்கான உந்து சக்திகளில் ஒன்று தான் மனிதச் சங்கிலி முயற்சி. அதிலே இணைந்திட்ட நாம், இலங்கைத் தமிழரின் இன்னல் அறவே தீர்த்திடுவோம் என கருணாநிதி கூறியுள்ளார்.

October 23, 2008

'தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசுபவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவர்கள்'

மிழகத்தில் பிரிவினைவாதம் பேசுபவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று (BJP) பாஜக மாநிலத் தலைவர் இல. கணேசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அக். 23, வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

பிரிவினைவாதம் பேசுபவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவர்கள். தமிழகத்தில் பெரும்பாலான மக் கள் இலங்கையில் பாதிக்கப் பட்டுள்ள தமிழர்களுக்காக இரக்கப்படுகிறார்கள் என்பது உண்மை.

[(BJP) பாஜக மாநிலத் தலைவர் இல. கணேசன்]

இதை பயன்படுத்தி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுபவர்களும், தனித் தமிழ் நாடு கோரிக்கை வைப்பவர்க ளும் லாபம் அடைய முயற் சிப்பதை அறிந்து தமிழக மக்கள் இப் பிரச்னையிலிருந்து விலகுவார்கள். இதனால் இலங்கைத் தமிழர்கள்தான் பாதிக்கப்படுவார்கள்.

தமிழகம் எப்போதும் தேசியத்தின் பக்கம் என்பதில் நான் மிகவும் நம்பிக்கை கொண் டுள்ளேன். தமிழகத்தில் நீதிக் கட்சி தோன்றி அதிலிருந்து வேறு சில கட்சிகளும் தோன் றிய பிறகு தமிழகத்தில் பிரிவினை கோஷம் எழுந்தது நாத்திகம், பிரிவினைவாதம் என்ற இரண்டு தூண்களின் ஆதாரத்தில் திமுக வளர்ந் தது. ஆனால் 1967 தேர்தலில் இந்த இரண்டு விஷயங்களை யும் திமுக எழுப்பவேயில்லை.

ஆட்சிக்கு வந்த பிறகு திமுக பிரிவினைவாதத்தை பகிரங்கமாக கைவிட்டது.
தோற்றுப்போன பிரிவினைவாதத்தை இன்று தமிழக மக்கள் மத்தியில் மீண்டும் கிளப்ப சிலர் முயற்சி செய்கிறார்கள்.

அவர்களின் முயற்சி வெற்றி பெற போவதில்லை.

தமிழக அரசு இத்தகையப் பேச்சுகளை அலட்சியம் செய் யாமல் உறுதியான நடவ டிக்கை எடுக்கவேண்டும்.

ராஜீவ் காந்தி கொலையில் தண்டனை வழங்கப்பட்ட நளினியை, பிரியங்கா சந்தித்த பிறகு விடுதலைப் புலிகளை ஆதரித்தவர்களுக்கு தைரியம் வந்துவிட்டது.

இலங்கை தமிழர்கள் இன்னலின்றி வாழவும், சம உரிமை பெறவும் தேவையான வற்றை செய்யுமாறு இலங்கை அரசை இந்திய அரசு வற்பு றுத்த வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு என்று இல. கணேசன் குறிப் பிட்டுள்ளார்.

October 22, 2008

தீபாவளியை அண்மிக்கும் இத்தருணத்திலாவது மலையக மக்கள் நலன் முன்னுரிமை பெறவேண்டும்

ல கோடி பணம் யுத்ததிற்காகவும் வேறும் அதிகார துஷ்பிரயோகங்களினாலும் விரயமாகப்பட்டுக் கொண்டிருக்கையில், நாட்டிற்கு கணிசமானளவு அந்நிய செல்லாவணியை தலமுறைகள் வழியாக ஈட்டித்தரும் தமிழ் - மலையக தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார வளர்ச்சி புறக்கணிக்கப்படும் நிலயே தொடர்கிறது.

நாட்டில் அன்றாடம் அதிகரித்துச் செல்லும் விலையேற்றங்கள் மற்றும் பண வீக்கங்களுக்கு மத்தியில் பெருந்தோட்டப்பகுதி மக்கள் தமது வாழ்க்கையை கொண்டு நடத்துவது பெரும் சவாலாகவே இருந்து வருவதனை சுட்டிக்காட்டியும், அவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை மனிதாபிமான ரீதியில் உணர்ந்து நிவர்த்தி செய்ய வலியுறுத்தியும், கொழும்பில் இருந்து வெளிவரும் முதன்மை தமிழ் நாளிதழான வீரகேசரி, ஒக்ரோபர் 23ம் திகதி ஆசிரியத்தலையங்கம் தீட்டியுள்ளது.

[மலையகத்தில் - படப்பிடிப்பு: Kaz]

ஒக்ரோபர் 28ம் திகதி, தீபாவளிப்பண்டிகையை மிகவும் விசேடமாக கொண்டாடும் பெருந்தோட்டத்துறை மலையக மக்களுக்கு உரிய முற்பணங்களையும் காலதாமதமின்றி வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியத்தலையங்கம் முழுவதுமாக:

மலையக மக்கள் எதிர் நோக்கும் பொருளாதாரப்பிரச்சனைகள்

லையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பொதுவாகவே பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த நிலையிலேயே தங்கள் வாழ்க்கையை கடத்தி வருகின்றனர். அவர்களுக்கு தொழிலுக்கேற்ற வேதனம் கிடைப்பதில்லையெனவும் அதன் காரணமாகவே தங்கள் வாழ்க்கைத்தரத்தை எந்தவகையிலும் உயர்த்திக்கொள்ள முடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும் மிகுந்த கவலை தெரிவிக்கின்றனர்.

எனினும் பெருந்தோட்டப்பகுதி மக்கள் தங்கள் தலைவிதியை நொந்து கொண்டு சலிக்காமல் தமது பணிகளை தொடரவே செய்கின்றனர். இந்நிலையில் தமது பொருளாதார நெருக்கடிகள் குறித்து சம்பந்தப்பட்டோரின் கவனத்திற்கு பல தடவைகள் கொண்டு வந்தும் கூட அது தொடர்பில் எவரும் கனக்கில் எடுப்பதாக தெரியவில்லை.

நாட்டில் அன்றாடம் அதிகரித்துச் செல்லும் விலையேற்றங்கள் மற்றும் பண வீக்கங்களுக்கு மத்தியில் பெருந்தோட்டப்பகுதி மக்கள் தமது வாழ்க்கையை கொண்டு நடத்துவது பெரும் சவாலாகவே இருந்து வருகின்றது. சாதாரணமாக மூன்று வேளை உணவை திருப்தியாக உண்ண முடியாத நிலையில் பல்வேறு நெருக்கடிகளுக்கு அவர்கள் முகம் கொடுத்து வருகின்றனர்.

அவர்களின் சம்பளத்தில் ஒரு சில ரூபாய்களை உயர்த்துவதற்குக்கூட போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், வேலைநிறுத்தங்கள் என பல்வேறு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டியிருப்பதாக விசனம் தெரிவிக்கும் பெருந்தோட்டப்பகுதி மக்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு எந்தவகையான திட்டங்களோ அன்றேல் நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை என்றும் கூறுகின்றனர்.

இதனிடையே ஒரு சில தோட்டங்களில் வழங்கப்படும் வேலை நாட்கள் குறைக்கப்படுவதால் அவர்கள் தங்கள் வரவுசெலவை கையாளமுடியாது மிகுந்த நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கின்றனர். அதுமாத்திரமன்றி இரண்டு வேளை உணவைக்கூட திருப்தியாக உண்ண முடியாது தொடர்ச்சியான கஷ்டங்களை எதிர்நோக்குவதாக மலையக மக்கள் தெரிவிக்கின்றனர்.

[அவிசாவளையில் இறப்பர் தோட்டமொன்று-படப்பிடிப்பு: HA]

குறிப்பாக இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்த வேலைநாட்களே வழங்கப்படுவதாகவும் சில தனியார் தோட்டங்கள் தமது உற்பத்தியை முற்றுமுழுதாக கைவிட்டுள்ளதாகவும் இதனால் அங்கு பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பெரும் கஷ்டங்களுக்கு ஆளாவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இவ்வாறே இறப்பர் தோட்டங்களில் பணிபுரிவோரும் பல்வேறு வகையான பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளாவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. முன்னர் ஒரு கிலோ 300 தொடக்கம் 400 ரூபாவிற்கு கொள்முதல் செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட இறப்பர் சீட்டுக்கள் தற்போது 100 ரூபாவிற்கு குறைவாகவே கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் மிகுந்த நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.

தோட்டத் தொழிலாளர்கள் முறையான வேலைநாட்கள் இல்லாத காரணத்தினால் ஒருபுறம் அவர்கள் வருமானத்தை இழப்பதுடன் மறுபுறம் அவர்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் சக்தியையும் இழந்து விடுகின்றனர். மேலும் பெருந்தோட்டப்பகு தியில் ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடி நிலை காரணமாக உணவு பொருட்களை விநியோகிப்போரும் கடன் அடிப்படையில் அவற்றை கொடுக்க தயக்கம் காட்டிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில் ஊழியர்களின் வேலைநாள் குறைப்பு விவகாரம் பாரிய பொருளாதார பிரச்சினைகளை உருவாக்கியுள்ளதை காணமுடிகின்றது.

[மலையகத்தில் - படப்பிடிப்பு: Kaz]

இவற்றுக்கு மத்தியில் பெருந்தோட்டத்துறை மக்கள் பொதுவாக தீபாவளிப்பண்டிகையை மிகவும் விசேடமாக கொண்டாடுவது வழக்கம். தீபாவளிப் பண்டிகை நெருங்கிவரும் நிலையில் கையில் போதிய பணம் இன்றி மிகுந்த கஷ்டங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் தமக்கு உரிய முறையில் தீபாவளி முற்பணம் வழங்கப்படவில்லையெனவும் புகார் தெரிவிக்கின்றனர்.

தமக்கு நியாயமான தொகையை தீபாவளி முற்பணமாக வழங்க வேண்டும் என அவர்கள் ஏலவே கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

எனினும் ஒருசில தோட்டங்களில் 3000 ரூபா தொடக்கம் 4000 வரை தீபாவளி முற்பணம் வழங்கப்பட்டதாகவும் மேலும் ஒரு சில தோட்டங்களில் தீபாவளி முற்பணம் முற்றாகவே வழங்கப்படவில்லையெனவும் இவர்கள் மிகுந்த கவலை தெரிவிக்கின்றனர்.

குறைந்த பட்சம் தோட்டத்தொழிலாளர்கள் மூன்று வேளை உணவையேனும் நிம்மதியாக தேடிப்பெறும் வகையில் அவர்களுக்கு உரிய வேதனத்தை வழங்க சாத்தியமான நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். மலையக மக்களின் பொருளாதாரத்தை வளப்படுத்துவதன் மூலமே அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடியதாக இருக்கும்.

இன்றேல் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து தொடர்ந்தும் நலிவுற்ற சமுதாயமாகவே அவர்கள் இந்த பூமியில் வாழவேண்டிய துரதிருஷ்டவசமான நிலைமை நீடிப்பதாக இருக்கும்.

இன்று நாட்டில் சகல தரப்பினரும் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இந்நிலையில் ஓர் குறித்த வருமானத்தை மாத்திரமே நம்பியிருக்கும் பெருந்தோட்டத்துறை ஊழியர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை மனிதாபிமான ரீதியில் உணர்ந்து பார்க்க முன்வருவது சகல தரப்பினரதும் கடப்பாடாகும்.

24 ஆம் நாள் பேரணிக்கு திரண்டிடுக: முதல்வர் கருணாநிதி

சென்னையில் வெள்ளிக்கிழமை (24.10.08) ஈழத் தமிழர்களுக்காக நடத்தப்படும் மனித சங்கிலி அணிவகுப்பில் "பார் சிறுத்தலால் படை பெருத்ததோ - படை பெருத்தலால் பார் சிறுத்ததோ" என்ற அளவில் தமிழர்கள் அணிதிரள வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் சென்னையில் இன்று புதன்கிழமை, 22 ஒக்ரோபர் முதல்வர், கலைஞர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

லங்கைத் தமிழனுக்காக ஒரு துளி கண்ணீர் வடிக்கவும், மெல்ல உதடசைத்து ஆறுதல் கூறவும் வழியற்றுப்போய் விழியற்ற குருடர்களாய் இங்குள்ள தமிழினம் தவித்து கொண்டிருக்கிறது.

எழுபது ஆண்டு காலமாக இலங்கை வாழ் ஈழத்தமிழர்கள், உரிமையற்றவர்களாக, உடைமைகளைப் பறி கொடுப்பவர்களாக, ஏன் உயிரையும் கூட அர்ப்பணிப்பவர்களாக் இன்னும் சொல்லப்போனால் கற்பெனும்மான உணர்வையும் கொள்ளை கொடுப்பவர்களாக் கணவன் முன்னிலையில் அவன் கட்டிய மனைவி - கற்பிழந்தாள் - அண்ணனோ தம்பியோ கண்ணெதிரே பார்த்துக் கொண்டு அலற அலற அவர்களின் அருமைச் சகோதரி; அக்காளோ, தங்கையோ அம்மாவேர் அதனினும் கொடுமையாக முதிர்ந்த வயதுத் தாய்க்குலமும் சிங்கள முள்ளம்பன்றிகளின் முரட்டுப் பற்களுக்கிடையே சிக்கி இரத்தம் சிந்தும் கோரம்! கோரம்!

தன்னைச்சுற்றி என்ன நடக்கிறதென்றே தெரியாமல் தவழும் தளிர்கள் தாங்கள் நகர்ந்திடும் தாழ் வாரத்திலேயே மரணம் வெடிகுண்டு வடிவத்திலே வெடித்துச் சிதறி அந்தச் சிசுக்களின் உயிரைச் சூறையாடப் போகிறது என்பதை நினைத்து அதிர்ந்திடுவதற்கும் நேரமின்றித் தமது ஆவி பறி கொடுக்கும் அன்னையர்கள்!

இது தான் இன்றைய இலங்கை -இலங்கையின் நகரங்கள் - கிராமங்கள் - ஏழையர் காலனிகள் - ஏன் செல்வச் சீமான்களின் தோட்டம் துரவுகளில் கூட - அய்யோ என்ற ஓலம் - குய்யோ முறையோ எனும் கூச்சல் - இதனை இருபது கல் தொலைவுக்கு அப்பால் இங்குள்ள தமிழன் அலைமோதும் கடலோரம் நின்று காதால் கேட்கவும் - கண்ணால் பார்க்கவும் - ஒரு பயங்கரமான நிலைமை.

மேட்டில் விளையாடிய குழந்தை நூறு அடி ஆழக்குழியில் - இரு நூறு அடி ஆழமுள்ள பள்ளத்தில் - தவறி விழுந்து விட்டதென்றால் - அதைப்பார்ப்பவர்களுக்கு பரிதாப உணர்ச்சி மட்டும் பறந்தோடி வந்தால் போதுமா? -அவர்கள் எத்துணை அதிர்ச்சி கொண்டு இயந்திரங்களை பயன்படுத்தி அந்தக் குழந்தையை வெளியே கொண்டு வரத்துடியாய்த் துடிக்கிறார்கள் -உரக்கிணற்றில் ஒரு குழந்தை விழுந்த செய்தி உலகத்தார் அனுதாபத்தையே பெற்று விடும்போது பழந்தமிழன் வாழ்ந்த பகுதி -ஆண்ட பகுதி - நமது கரிகாலனும், இராஜராஜனும், இராஜேந்திரச் சோழனும் கடல் கடந்தும் களம் கண்டு போரிட்டு கடாரத்தில் ஏற்றினார்களே புலிக்கொடி அது தமிழர் புவியாண்ட கொடி அல்லவா!

அந்தக் கொடி நிழலில் வாழ்ந்தோர் - ஆண்டோர் - இன்று இலங்கையிலே தாழ்ந்தோர் - மாண்டோர் என்ற கணக்கில் அல்லவா வருகின்றனர்! அந்தோ தமிழர்களே; உங்களுக்காக குரல் கொடுக்கவும் முடியாமல்; இங்குள்ள தமிழன் குறுக்கே நிற்கின்றானே!

அங்கே போர் நின்று விடுமோ? அமைதி திரும்பி விடுமோ? கள்ளிக்காடு சூழ அவதியுறும் இலங்கைத் தமிழன் ஆறுதல் பெற அங்கே முல்லைப் பூ பூத்து விடுமேர் என்று முட்டிக்கொண்டு அழவும் முடியாமல் - மோதிக்கொண்டு கதறவும் முடியாமல் - அய்யோ! இலங்கைத் தமிழ் இனம் காப்பாற்றப்பட்டு விடும் போலிருக்கிறதே என்று "தமிழன் என்று சொல்லடர் தலை நிமிர்ந்து நில்லடா'' என்ற பாடலை மறந்து விட்டு; அல்லது மாற்றிப்பாட முனைந்து "தமிழன் என்று சொல்லடர் தழை இலைகளை மெல்லடா'' என்றல்லவா பாடிட விரும்புகிறான் துரோகத் தமிழன்!

அவனுக்கு மாறாக் அந்தச்சிறு அடங்காப் பிடாரி கூட்டத்தைத் தோலுரித்துக் காட்டுகின்ற முறையிலே; அலைமோதும் கடலென ஆர்ப்பரிக்கும் தமிழர் கூட்டம் கடந்த 21 ஆம் நாள் மழை பொழிந்தாலும் கவலையில்லை எங்கள் தமிழரை இலங்கையில் காத்திட இங்குள்ளோர் அணி திரள்வோம் என்று ஆடவர், பெண்டிர், மாணவர், தொழிலாளர் அனைவரும் ஒன்று திரண்டனர் இருந்தாலும் மழை காரணமாக இரண்டு நாள் ஒத்திவைத்து "மனிதச் சங்கிலி" - 24 ஆம் நாள் பிற்பகல் என்று அறிவித்ததால் - மேலும் நாலு மடங்கு மக்களன்றோ தமிழ் முரசொலித்து வர இருக்கின்றார்கள் - வரிசை வகுத்திட இருக்கின்றார்கள்!

"பார் சிறுத்தலால் படை பெருத்ததோ - படை பெருத்தலால் பார் சிறுத்ததோ"

என்ற கலிங்கத்துப் பரணி பாடலை நினைவூட்ட நிரம்பி வழியப்போகும் கூட்டம்!

என் அழைப்புக்கே எள் போட்டால் அந்த எள் விழ இடமின்றி வந்து நிறைகின்ற உடன்பிறப்புக்காள்!

எல்லாக் கட்சித் தலைவர்களும் தமிழ் உணர்வு ததும்பிட அழைக்கும்போது- மழை

ஏழு கடல் ஒன்றானது போன்ற தோற்றத்தை யல்லவர் தமிழர்தம் ஏற்றத் தையல்லவர் உணர்வுள்ள உலகத் தமிழர் அனைவரும் காண இருக்கிறார்கள்.

ஒக்ரோபர் 24 - பிற்பகல் 3 மணி!

அலைகடலாய் சங்கமிப்போம் - தன்மானத் தமிழரின்

மலைமுகடு இதுவென நிலைநாட்டுவோம்!

இந்த அறப்போர் சங்கிலி பற்றி அவதூறு கிளப்புவோர் -

அறிக்கை விடுவோர் -

சிங்கள வெறியர்களிடமிருந்து தமிழ் இன மக்களைக் காத்திடும் இந்த முயற்சியைக் காயப்படுத்த முனைவோர் - களங்கப்படுத்த நினைப்போர் -

திசை திருப்புவோர் -

அக்காள் தங்கைகளுடன் பிறந்தவர்களாக இருக்க முடியாது -

அன்னையர் குலத்துக்கொரு அவமானமெனிலேர்

ஆனந்தக் கூத்தாடுபவர்களாயிருக்க வேண்டும்!

அவ்வளவு ஏன்?

அவர்கள் தமிழரல்லா தவர்களாயிருக்க வேண்டும் - என்கிற இந்த முடிவோடு ஒரு வேளை மழை தொடர்ந்து - அதில் நனைய நேரிட்டாலும் நினைவு எல்லாம் என் தமிழ் இனத்தைக் காப்பதில் தான் நிலைத்திருக்கும் என்ற சூளுரையுடன் சென்னைத் தலைநகரில் -

வங்கக் கடலெனப் பெருக்கிடுக!

சங்கம் முழங்கிடுக!!

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் என்று!!!

October 21, 2008

முதல்வர் கருணாநிதி: மனிதச் சங்கிலி எதற்கு?

எழுக தமிழா - கலைஞர் கருணாநிதியின் அறிக்கை

1956ஆம் ஆண்டிலேயே ஈழத் தமிழர்கள் உரிமை, மொழி, கலாசாரம் இவற்றைப் பாதுகாத்திடவும் சிங்கள மொழியினர் ஆதிக்கம் அகன்றிடவும் அங்குள்ள தமிழர் கிளர்ந்தெழுந்தனர் என்பதைக் குறிப்பிடவும் இன்று நேற்றல்ல ஈழத் தமிழர் பிரச்சினை 1956 முதற்கொண்டு உருவானதாகும் என்று நான் சுட்டிக்காட்டியதற்கு ஆதாரமாக 1956இல் சிதம்பரம் தி.மு.க. பொது குழுவிலேயே நான் முன்மொழிந்து பொன்னம்பலனார் வழி மொழிந்த தீர்மானத்தை சான்றாக கூறியிருந்தேன்.

[தமிழக முதல்வர், நடிகர் கமல் ஹாசனுடன் - ஒக்ரோபர் 2007 இல்]

அதைப் படித்து விட்டு சிலர் 1956ஆம் ஆண்டிலிருந்து வருகிற ஈழப் பிரச்சினையைத் தீர்க்க முடியாத கருணாநிதி இப்போது தீர்க்கப் போவதாகச் சொல்வது தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்வெட்டை மறைப்பதற்காகத் தான் என்று அரிய கண்டுபிடிப்பைச் செய்துள்ளார்கள். இந்தியாவில் தமிழ் மாநிலத்தில் மட்டும் மின்சாரப் பற்றாக்குறை இருப்பதாகவும் மற்ற மாநிலங்களில் மின்சாரத் தடையே கிடையாதென்றும் பொய்கூறி அரசியலுக்காகப் பேசுவோரின் அறியாமை கண்டு, அப்படிப் பேசுவோரை அலட்சியப்படுத்தி விட்டு, நாம் நமது ரத்தத்துடன் ஊறிய தமிழ் உணர்வு கொண்ட ஈழத் தமிழர்களின் இன்னல் துடைக்கும் பணியினைத் தொடருவோம்.

இலங்கை பிரச்சினையில் அங்கே தமிழ் மொழியையும் தமிழரையும் தாழ்த்தும் பிரச்சினை அதனை எதிர்த்து முழங்கிய பிரச்சினை இவையனைத்தும் 1956இல் என்று தான் நாம் நினைத்திருக்கிறோம்? ஆனால் இன்னும் நீண்ட கால வரலாற்றைக் கொண்டது அந்த பிரச்சினை என்பதற்கு இரண்டு நாளைக்கு முன்பு திராவிடர் கழகத் தலைவரும், தமிழர் தலைவருமான வீரமணி என்னிடம் அளித்த பழைய "விடுதலை'' ஏடு சான்றாகத் திகழ்கிறது.

1939இல் இந்தியாவுக்கு வெளியே உள்ள நாடுகளில் வாழும் தமிழர் பற்றி பண்டித் நேரு குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டியிருந்தேன் அல்லவா? அதே ஆண்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்க நிர்வாகக் குழுவில் (10.8.1939) ஈரோடு நகரில் தந்தை பெரியாரும் அவர் தலைமையில் குமாரராஜா முத்தையா, ஏ.டி.பன்னீர்செல்வம், டபிள்யூ.பி.ஏ.சவுந்திரபாண்டியன், சி.என். அண்ணாதுரை (அண்ணா), என்.ஆர்.சாமியப்ப முதலியார், கி.ஆ.பெ.விஸ்வநாதம், டி.ஏ. வி.நாதன், சென்னை, பி.பாலசுப்பிரமணியம், சென்னை, எஸ்.நடேச முதலியார், ஏ.கே.தங்கவேலு முதலியார், காஞ்சி, பட்டுக்கோட்டை அழகிரி, என்.வி. நடராசன், சென்னை, என்.ஜீவரத்தினம் சென்னை, டி.சண்முகம்பிள்ளை திருவொற்றியூர், சி.டி.நாயகம், சென்னை, எம்.ஆர்.திருமலைசாமி, திருச்சி, டி.பி. வேதாசலம், டாக்டர் தர்மாம்பாள் சென்னை, வி.வி.ராமசாமி, விருதுநகர் ஆகியோர் கலந்து கொண்டு நிறைவேற்றிய முதல் தீர்மானம் ஈழத்தில் உள்ள தமிழ் மக்களை சிங்கள அரசு கொடுமையாய் நடத்துவதையும், அவர்களை நாட்டை விட்டு அப்புறப்படுத்த ஏற்பாடு செய்து வருவதையும் இந்தகுழு வன்மையாய்க் கண்டிக்கிறது.

நீதி கட்சியினர் 1939ஆம் ஆண்டு பெரியார், அண்ணா, அழகிரிசாமி, கி.ஆ.பெ., பன்னீர்செல்வம் போன்ற பெரிய தலைவர்களால் நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர்மானமே 17 ஆண்டு காலத்திற்குப் பிறகும் செயல் முறைக்கு வர முடியாமல் ஈழத் தமிழர்களின் இன்னல்களைக்களைய முடியாமல் போனதென்றால் அது பற்றி 1956இலும் ஒரு தீர்மானம் தி.மு.க. பொது குழுவில் நிறைவேற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டதென்றால் மொத்தத்தில் தமிழர் தலைவர்கள் அனைவரும் நடத்திய போராட்டத்திற்கு சிந்திய இரத்தம் கொடுத்த உயிர் பறிபோன உடைமை இவையெதுவும் போதவில்லை என்பது தானே பொருள்? அதனால் தானே இப்போது மிச்சமிருக்கிற தமிழ் இனத்தின் பிஞ்சுகள், அரும்புகள் உள்ளிட்ட மாந்தரையாவது மீட்பதற்கு வழிகாண நம்மிடையே ஏற்பட்ட துன்பதுயரங்களையும் அதிர்ச்சிகளையும் தாங்கிக்கொண்டு ஓரணியில் திரண்டு இந்திய அரசிடம் கேட்கும் உதவியையாவது ஒற்றுமையுடன் கேட்போம் என்று அனைத்து கட்சி தலைவர்கள் சார்பில் அன்பான வேண்டுகோள் வைத்தோம்.

தாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தை 17 ஆண்டுகளாக நிறைவேற்ற முடியவில்லையே என்று ஏங்கி தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதி கட்சியினர்) அந்த தீர்மானத்தை திரிசங்கு சொர்க்கத்தில் ஊசலாட விட்டு விடவில்லை. எனவே அந்த தீர்மானத்தின் தொடர்ச்சியாக 1956இல் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை செயல்படுத்த முனைவதே, நாம், தமிழ்ப்பால் அருந்தியவர்கள் என்பதை தரணிக்கு உணர்த்தும் செயலாக இருக்க முடியும். ஈழத்தின் வரலாறு நமது தஞ்சை ராசராசன் எனும் பெருவேந்தன் காலத்துக்கு முன்பிருந்தே நமக்குப் பாலபாடம்.

இன்னும் அந்த வரலாற்றின் சில எழுச்சி மிகு பக்கங்களைப் போல அமைந்த கண்டி மன்னன் விக்கிரமராஜசிங்கன் அங்கே கி.பி. 1815 வரையில் ஆட்சி புரிந்த வரலாறும் அதே ஆண்டில் கண்ணுசாமி என்ற அந்த தமிழ் மன்னனின் வீழ்ச்சியும் தோற்றுப்போய் சிறைப்பட்ட கண்ணுசாமி; (கண்டி, விக்கிரமராஜசிங்கன்) தமிழ்நாட்டில் வேலூரில் சிறைவைக்கப்பட்டதும் நானறிந்த வரலாறு என்பதால் பதினாறு ஆண்டுகள் குடும்பத்துடன் சிறையிலிருந்து, சிறையிலேயே வேலூரில் மாண்டுவிட்ட அந்த மன்னன் பெயரையும், வரலாற்றையும் மறந்து விடாமல் நினைவூட்ட நான் முதலமைச்சராக இருந்த 1.7.1990 அன்று வேலூரில் கண்டி தமிழ் மன்னன் பெயரால் முத்து மண்டபம் அமைத்து திறப்பு விழாவும் நடத்தினேன்.

இதெல்லாம் வரலாற்றுத்துளிகள் வாய் புளித்ததேர் மாங்காய் புளித்ததோ என்று பேசுபவர்களுக்கு வக்கணையாகத்தான் தோன்றும் ஈழத்தீவில் அரசோச்சிய தமிழ் அரசர்களில் பண்டாரவன்னியனின் வரலாற்றை நூலாக எழுதியவன் நான் என்ற முறையில் ஈழ வரலாற்றில் தந்தை செல்வநாயகம் வரையில் என் நெஞ்சில் நிற்பவர்கள் அந்த தமிழ் உணர்வு தரிசாகப் போய் விடாத காரணத்தினால் தான் இன்றும் அந்த தமிழர்கள் ஈழத்தில் படும் துன்பங்களை எண்ணித் துடித்துப் போகிறேன். ஈழத் தமிழர் பிரச்சினைக்காக தி.மு.க. என்ன செய்தது என்று தொடர்ந்து கேள்வி கேட்டு வருபவர்களுக்கு சுருக்கமாக அந்த பட்டியலைத் தருகின்றேன்.

1981ஆம் ஆண்டு ஈழத்திலே தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி கிடைத்த அன்றைய தினமே, ஆகஸ்ட் 13ஆம் திகதியன்று நான் அன்றைய இந்திய பிரதமருக்கு அனுப்பிய தந்தியில் கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் இலங்கையின் கிழக்கிலும், தெற்கிலும் கலவரங்கள் பரவி வருகின்றன என்று கூறுகின்றன. அங்குள்ள அரசாங்கமே கலவரத்தை ஊக்குவிப்பதாகத் தோன்றுகின்றது. வட கொழும்பில் தமிழர்களின் இல்லங்கள் தாக்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் ரயில்கள் தாக்கப்பட்டுள்ளன. அதில் இருந்த தமிழ் பயணிகள் கொள்ளை அடிக்கப்பட்டு வண்டியை விட்டு வழியில் தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள்.

அம்பாறை கோவில் தேர் நொறுக்கப்பட்டிருக்கிறது. இந்திய வம்சாவளித் தமிழர்களும் இலங்கை முழுதும் பல இடங்களில் தாக்கப்பட்டிருக்கிறார்கள். நிலைமை கட்டுப்பாட்டை மீறிப் போய் விட்டது. கொழும்பில் வயதான தமிழ் மூதாட்டி ஒருவர் பட்டப்பகலிலேயே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழர்களுக்கு நிவாரணமளிக்க முன்வரும் அமைப்புகள் இயங்க அரசாங்கம் அனுமதி தரமறுக்கிறது. கலவரங்களை அடக்க சிங்கள அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. செய்திகள் உங்களுக்கு நேரடியாகக் கிடைக்கும் ஆதலால் இந்த பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் தாங்கள் தங்கள் கவனத்தை செலுத்தி உதவிட வேண்டுகிறேன் என்று கேட்டுக் கொண்டேன்.

அந்த தந்தியைத் தொடர்ந்து 18.8.1981 அன்று மீண்டும் ஒரு தந்தியை ஈழத்தமிழர்களின் துயரம் குறித்து பிரதமருக்கு அனுப்பினேன். ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டித்து, சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்திருந்த பேரணியில் கலந்து கொள்ள தமிழக அரசின் தடை உத்தரவை மீறி பல்லாயிரக்கணக்கானவர்கள் 29.8.1981 அன்று குழுமினர். ஆனால் மாவட்ட செயலாளர் சீத்தாபதி, சட்ட மன்ற உறுப்பினர்கள் து.புருஷோத்தமன், என்.வி.என்.சோமு உட்பட 250 பேரை மட்டுமே காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களை விடுதலை செய்யாவிட்டால் நானே போராட்டத்திற்கு தலைமை தாங்குவேன் என்று அறிவித்தேன்.

அ.தி.மு.க.அரசு என்னையும் கைது செய்தது. ஆம், ஈழத் தமிழர்களுக்கான பிரச்சினையில் நான் கைது செய்யப்பட்டேன். நான் ஈழத் தமிழர்களுக்காக கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் எங்கும் கிளர்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள், கடை அடைப்புகள் போராட்டங்கள் நடைபெற்றன. எனது வேண்டுகோளையும் மீறி பலர் நான் விடுதலை செய்யப்பட வேண்டுமென்று கோரி குறிப்பாக கோவிலடி பிருந்தாவன், திருச்சி மனோகரன், திருவாரூர் கிட்டு, பெருந்துறை முத்துப்பாண்டியன், கல்லாவி ராஜேந்திரன், மேல்மாயில் ஜெகன்னாதன், சென்னை மேரி போன்றவர்கள் தீக்குளித்தனர்.

அதன் பின்னர் 1983ஆம் ஆண்டு தான் ஈழத்தில் தமிழர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "கிறிஸ்டியன் சயின்ஸ் மானிட்டர்' என்கிற ஏடு 1983இல் எழுதியது வருமாறு: சிங்கள இராணுவத்தினர் 30 பேர் மன்னார் பகுதியில் உள்ள மக்களைக் கொன்று குவிக்கத் தொடங்கினார்கள். இவர்களது கொடூரத் தாக்குதல் ஆறு மணி நேரம் தொடர்ந்தது. மன்னார் நகரின் மத்திய மருத்துவமனையை இராணுவத்தினர் வெறி பிடித்துத் தாக்கினர். சாலைகளில் சென்ற வாகனங்களை நிறுத்தி அதில் உள்ளே இருந்தோரை வெளியே இழுத்துப்போட்டு அந்த இடத்திலேயே ஈவுஇரக்கமின்றி சுட்டுக் கொன்றார்கள். அருகில் இருந்த அஞ்சலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 15 பேரை வரிசையாக நிற்கவைத்து அவர்களை நிர்த்தாட்சண்யமாக சுட்டுப் படுகொலை புரிந்தார்கள். வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த உழவர்களையும் சிங்கள இராணுவம் விடவில்லை. அவர்களையும் சுட்டுத் தீர்த்தது.

இந்த திடீர் தாக்குதலின் முடிவில் 150 பேர் செத்துக்கிடந்தார்கள். 20 தமிழ் இளைஞர்கள் காணாமல் போனார்கள். இவர்கள் அருகில் இருந்த இராணுவ முகாம்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டதாக நேரில் கண்டவர்கள் கூறினார்கள். சிறைக்காவலர் முன்னிலையில் 25.7.1983 அன்று வெலிக்கடை சிறைச்சாலைக்குள் சிங்களவர் நுழைந்து தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் போன்றவர்களை கத்திகள், கோடரிகள், இரும்புக் கம்பிகள், விறகுக் கட்டைகளால் தாக்கினர். அனைத்துக் கொடுமைகளும் சிறைக்காவலர் முன்னிலையிலேயே நடைபெற்றன. அந்த ஒரு நாளில் மட்டும் 35 தமிழர்கள் படுகொலைக்கு ஆளானார்கள்.

செய்தி கிடைத்தவுடன் தி.மு.க. கேளாக்காதுடையதாகவா இருந்தது? கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மறுநாளே சென்னையில் தமிழர் பாதுகாப்புப் பேரணி நடைபெறும் என்று அறிவித்தேன். 7 மணி நேர அவகாசத்தில் 8 லட்சம் பேர் அந்த பேரணியில் கலந்து கொண்டனர். 27.7.1983 அன்று மீண்டும் 18 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தொடர்ந்து நான்கு நாட்கள் இலங்கையிலே நடைபெற்ற வன்முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலைக்கு ஆளானார்கள் என்று செய்தி கிடைத்தது. சென்னையிலே குடியிருந்த குட்டிமணி, ஜெகன் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினேன்.

31.7.1983 அன்று முகவை மாவட்ட கழக மாநாடு என அறிவிக்கப்பட்டதை இலங்கை தமிழர் பாதுகாப்பு மாநாடாக மாற்றப்பட்டு இராமநாதபுரம் நகரிலே நடத்தப்பட்டது. தமிழக அரசு 2.8.1983 அன்று முழு அடைப்பு என்று அறிவித்து தமிழகம் முழுவதிலும் வெற்றிகரமாக நடத்தியது. 4.8.1983 அன்று மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டமும், 5.8.1983 அன்று ரயில் நிறுத்தப் போராட்டமும் நடத்துவதென்று முகவை மாவட்ட மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. மத்திய அரசு தானாகவே முன் வந்து 5.8.1983 அன்று தமிழகத்திலே ரெயில்கள் ஓடாது என அறிவித்தது. 7.8.1983 அன்று தி.மு.க. செயற்குழு கூடி, ஐ.நா. மன்றத்திற்கு ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டுமென்று கோரி ஒரு கோடி கையெழுத்துக்களைப் பெற்று ஐ.நா. சபைக்கு அனுப்ப முடிவு செய்து, அவ்வாறே வழக்கறிஞர் டி.பி.ராதாகிருஷ்ணன் மூலமாக அனுப்பியும் வைக்கப்பட்டது.

மத்திய, மாநில அரசுகள் ஈழத் தமிழர் பிரச்சினையில் போதிய கவனம் செலுத்திட வலியுறுத்தி, 10.8.1983 அன்று நானும், கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியரும் எங்களுடைய சட்ட மன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தோம். 1983ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் நான்கு நாட்கள் தமிழகம் முழுதும் ஈழத்; தமிழர் பிரச்சினைக்காக கூட்டங்களை நடத்தினோம். எதிர்க்கட்சியிலே தான் அப்போது இருந்தோமென்றாலும், 25.8.1983 அன்று பிரதமரின் தூதுவராக ஜி.பார்த்தசாரதி என்னை சென்னையிலே சந்தித்து பேசிவிட்டுத் தான் பிறகு கொழும்பு சென்றார். அவர் என்னைச் சந்தித்த போது ஈழத் தமிழர் பிரச்சினையில் பிரதமர் இந்திரா காந்தி விடுதலைப் போராளிகளிடம் கொண்டுள்ள பரிவையும், அந்த அடிப்படையில் அவர் வழங்கிடும் உதவிகளையும் என்னிடம் விளக்கினார். மூன்றாண்டு கால அமைதிக்குப் பின் 1986ஆம் ஆண்டு பெப்ரவரி, மார்ச் திங்களில் இலங்கையில் சிங்கள இராணுவத்தின் கொடுமைகள் அதிகரித்தன.

அம்பாறை மாவட்டத்தில் தங்கவேலாயுதபுரம் என்ற கிராமத்தில் ஒரு நாள் சிங்கள இராணுவத்தினர் நுழைந்து கண்ணில் பட்ட பெண்களையும், வயதானவர்களையும், குழந்தைகளையும் குருவிகளைச் சுடுவது போலச் சுட்டுக் கொன்றார்கள். ஒரே நாளில் அறுபதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் மாண்டனர். தொடர்ந்து இப்படிப்பட்ட செய்திகள் தமிழகத்திற்கு வந்து கொண்டேயிருந்ததால், 26.3.1986 அன்று சென்னையில் அமைப்புக் கூட்டம் என் தலைமையிலே கூடி, மே திங்கள் 4ம் நாள் மதுரை மாநகரில் நான் ஏற்கனவே குறிப்பிட்ட ஹடெசோ சார்பில் அனைத்திந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களை எல்லாம் அழைத்து ஈழத்; தமிழர் பாதுகாப்பு மாநாட்டினை நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது. கறுப்புச் சின்னம் அணிந்து ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழ்நாடு மாத்திரமல்லாமல் இந்தியாவிலே உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் அக்கறை கொண்டிருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டி மத்திய அரசு தனது மெத்தனத்திலிருந்து விடுபட்டுத்தக்க தீர்வு காண முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகத்தான் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.

1986ஆம் ஆண்டு மே திங்கள் இறுதியில் பசும்பொன், இராமநாதபுரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்த எனக்கு, இலங்கையிலே சிங்கள இராணுவத்தின் அடக்குமுறை அதிகமாகி அன்றாடம் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுகின்றார்கள் என்ற செய்தி வந்தது, சுற்றுப் பயணத்தை ரத்து செய்துவிட்டுச் சென்னை திரும்பினேன். சென்னை வந்ததும், தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசனும், சிவசிதம்பரம், யோகேஸ்வரன், சம்பந்தன், தங்கத்துரை ஆகியோரும் என்னைச் சந்தித்து அங்குள்ள நிலைமைகளை விளக்கினார்கள். ஈழத்தில் நடைபெறும் கொடுமைகளைத் தடுக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்த 31.5.1986 அன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடத்த வேண்டுமென்றும், அனைவரும் கறுப்புச் சின்னம் அணிந்து ஆங்காங்கு கண்டன ஊர்வலங்களும், பொது கூட்டங்களும் நடத்த வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தேன். அந்த ஆண்டும் என்னுடைய பிறந்த நாள் விழாவை நடத்த வேண்டாமென்றும், பிறந்த நாளுக்காக எனக்கு மாலை அணிவிப்பதற்குப் பதிலாக ஈழத் தமிழ்ப் போராளிகளுக்கு உதவிட நிதி அளித்திட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டேன்.

31.5.1986 அன்று தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிகரமாக அமைந்தது. அனைத்துப் போக்குவரத்துக்களும், விமானம், ரயில் போக்குவரத்து உட்பட அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. ஒரு கடை கூடத்திறக்கப்படவில்லை. சென்னையில் நாஞ்சிலார் தலைமையில் பிரமாண்டமான கண்டன ஊர்வலம் நடைபெற்றது. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், எழுதிக் கொண்டே போகலாம். 1997ஆம் ஆண்டு தி.மு.க.கழகம் ஆட்சியிலே இருந்த போது, ஈழத் தமிழர் பிரச்சினை எழுந்த போது இதே ஜெயலலிதா என்ன சொன்னார்? சட்டம்ஒழுங்கை சீர் குலைக்க கருணாநிதி முயல்கிறார் என்றும், விடுதலைப்புலிகள் தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கி விட்டார்கள் என்றும் உள்நோக்கத்தோடு ஜெயலலிதா கடுமையாக ஓர் அறிக்கை விடுத்தார்.

அனைத்து கட்சிகளின் சார்பில் நடத்தவுள்ள "மனிதச் சங்கிலி அணிவகுப்பைப்'' பற்றி அதனால் என்ன பயன் என்று ராசிபுரத்திலே போய் ஜெயலலிதா கேள்வி கேட்கிறார். இதே கேள்வியைக் கேட்டு, என்ன பேசுவது என்று தெரியாமலே வேறு சிலர் பேசித் திரிகிறார்கள்! ஈழத்தில் தமிழினம் படும் துயர் கண்டு தாய்த் தமிழகம் கண்ணீர் வடிக்கிறது என்பதை எடுத்துக் காட்டத்தான் மனிதச்சங்கிலி. எந்த இனமானத் தமிழ் மகன், எந்த மண்ணைத் திருத்தி வளமிகு சோலையாக்கினானோ, அந்த மண்ணிலே அவன் தலை பந்தாடப்படுகின்ற செய்தி கேட்டு, ஆயிரம் செந்தேள் செவியிலே கொட்டியது போல் துள்ளுகிறோம், துவண்டு போகிறோம் அதனை வெளிப்படுத்தத்தான் மனிதச் சங்கிலி.

இலங்கை கொடுமைக்கு ஒரு முடிவு காண இந்திய பேரரசு ஒருக்கணமும் தயங்காமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தத் தான் மனிதச் சங்கிலி. ஐந்து கோடி தமிழர்கள் மட்டுமல்ல் அயல் நாடுகளில் பரவியுள்ள தமிழ் இனம் முழுவதும் "இதற்கோர் முடிவே கிடையாதா? என்று கொதித்துக் கேட்கின்ற நிலையை உலகத்திற்கு வெளிப்படுத்தத் தான் மனிதச் சங்கிலி.தென் திசையைப் பார்க்கின்றேன் என் சொல்வேன் என்றன் சிந்தையெலாம் தோள்கள் எல்லாம் பூரிக்குதடடா! எனப் பாடினாரே பாவேந்தர் அன்றந்த இலங்கையினை ஆண்ட மறத்தமிழன் இராவணனின் புகழ்பாடும் கவிதையினைப் படிக்கும் போதெல்லாம் சிந்தையும், தோள்களும் பூரிக்கும் என்பது உண்மை! ஆனால் இன்று, சிந்தையெலாம் தோள்கள் எல்லாம் துடிக்குதடடா! என்ன சொல்வது? என்பதை எடுத்துக் காட்டத் தான் மனிதச் சங்கிலி! தமிழனாக பிறந்தவன் தமிழ் உள்ளங்கள் அத்தனையிலும் இன்று தணல் அன்றோ அள்ளி அள்ளிக் கொட்டப்பட்டுள்ளது! வெளிநாடுகளில் வாழுகின்ற தமிழர்கள் தொலைபேசி வாயிலாக என்னிடம் தொடர்பு கொண்டு நன்றி தெரிவிக்கிறார்கள். கண்ணீரோடு நன்றி தெரிவிக்கிறார்கள். அந்த கண்ணீருடன் இணைந்து அவர் தம் கண்களிலே கனல் பறப்பதை அவர்தம் வாய்ச்சொற்கள் நம்மிடம் தெரிவிக்கின்றன. தமிழன் கொல்லப்படுகிறான், அது கேட்டு தமிழனாகப் பிறந்தவனும் இருப்பவனும் கொதிக்கிறான். இந்த செய்தி உலகத்திற்கு எட்ட வேண்டுமே என்பதற்காக தான் மனிதச் சங்கிலி. உதவாதினி ஒரு தாமதம், சென்னைக்கு விரைந்திட உடனே எழுக தமிழா! இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகள் தலைவர் நக்கீரன் ஏட்டிற்கு வழங்கிய செவ்வி

'உறுதி தளராத நம்பிக்கையுடனும் மனோவல்லமையுடனும் இருக்கிறோம்': ழத்தில் நிகழ்ந்து வரும் நெருக்கடியான நிலை குறித்து, பல்வேறு கேள்விகளை நக்கீரன் தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசனுக்கு மின்னஞ்சல்மூலம் அனுப்பியிருந்ததாகவும், அரசியல்துறை பொறுப்பாளர் நடேசனும் கேள்விகளுக்கான பதில்களை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனோடு ஆலோசித்து பதில்களாக்கி நக்கீரனுக்கு அனுப்பி வைத்துள்ளார் எனவும், 'விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மனம் திறந்த பதில்கள் அடங்கிய செவ்வி' என்று தெரிவித்து நக்கீரன் ஏடு பிரசுரம் செய்துள்ளது:

கேள்வி: 1980 களுக்குப் பின்னர் தமிழகத்தில் எற்பட்டுள்ள ஈழத் தமிழருக்கு அதரவான தற்போதைய எழுச்சியான சூழல் குறித்து?

பதில்: இலங்கைத் தீவில் 1983 காலப்பகுதியில் சிங்கள அரசபடைகளாலும் பேரினவாத அரசியல் தலைமைகளினாலும் வரலாற்றில் ஒரு போதும் இல்லாதவாறு பெரியதொரு இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும், தமிழர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டும், இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் வாழ்விடங்களை விட்டு புலம் பெயர்ந்து அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சம் கேட்கும் அளவிற்கு... இனப்படுகொலையின் தாக்கம் இருந்தது. அந்த கொடூரங்கள் இன்னும் மறக்க முடியாதவை. இதனைக் கண்டு தமிழகமக்களும் அரசியல் தலைமைகளும் அரசியல் வேறுபாடுகளுக்கும் அப்பால் கொதித்தெழுந்தனர். அதுபோலவே, இன்றும் சிங்கள அரச படைகள் தனது தரைப்படை, கடற்படை, விமானப் படை அகிய முப்படைகளையும் பயன்படுத்தி பாரிய அளவில் இனப்படுகொலைகளை நடத்தி வருகிறது. தினமும் மக்கள் கொல்லப்பட்டும், வாழ் விடங்களை விட்டு அகதிகளாக்கப்பட்டும் தவியாய் தவிக்கின்றனர். ஈழத் தமிழர்களுக்கு சொல்லொணா இன்னல்கள், ஆற்றுப்படுத்த முடியாத கொடூரங்கள் ஏற்படுகிற போதெல்லாம் தமிழக மக்கள் கொதித்தெழுவார்கள். அவ்வாறான ஒரு சூழலே தற்போது தாய்த் தமிழகத்தில் எற்பட்டுள்ளதாகவே நாங்கள் பார்க்கிறோம். அந்த எழுச்சியான சூழல் உங்களுக்கு பலம் சேர்க்கும்.



[செப் 15ம் திகதி, திலீபனுக்கு அஞ்சலி செலுத்துகிறார் விடுதலைப் புலிகள் தலைவர்] 

கேள்வி: சமீபத்தில் தி.மு.க. நடத்திய சென்னை பொதுக்கூட்டத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உணர்ச்சிமிக்க உரையை நிகழ்த்தினார் தமிழக முதல்வர் கலைஞர். அதனை அடுத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, ஈழத்தில் ஈழத் தமிழர்களை படுகொலை செய்து வரும் சிங்கள அரசின் யுத்தத்தை நிறுத்த இந்திய அரசு இருவார காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்கிற நிலையை எடுத்துள்ளார் கலைஞர். தமிழகத்தில் ஆளும் தி.மு.க., இத்தகைய ஆதரவான நிலையில் இருப்பது பற்றி?

பதி்ல்: தமிழக முதல்வர் கலைஞர் தமிழ் உணர்வுமிக்கவர். ஈழத் தமிழர்கள் மீது ஆழமான அன்பும், பாசமும் எப்போதும் கொண்டிருப்பவர். அதனை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்திருக்கிறார். தமிழீழத்தில் சிங்கள அரச பயங்கரவாதம் தலைவிரித்து ஆடிய போதெல்லாம் ஈழத் தமிழ் மக்களுக்காக ஒங்கிக் குரல் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அதனை செயலிலும் காட்டி வருபவர். தற்போது, ஈழத்தில் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சொல்லொணா துயரம் கண்டு அத்தகைய ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பது எம்மையெல்லாம் பூரிப்படைய வைத்துள்ளது. அந்த ஆதரவை நாங்கள் என்றென்றும் எதிர்பார்க்கிறோம்.

கேள்வி: உங்கள் இயக்கத்தை கடுமையாக எதிர்ப்பவரும் இயக்கத்துக்கு தடைவிதிக்க காரணமாக இருந்தவருமான ஜெயலலிதா, இருவாரங்களுக்கு முன்பு ஈழப் பிரச்சினையில் ஆதரவான நிலையை எடுத்தார். தற்போது அதை மாற்றிக்கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவின் மனநிலையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: தற்போது ஈழத்தில் சிங்கள அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலையின் தாக்கம், முழுத்தமிழகத்தையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அரசியல் வேறுபாடுகளை மறந்து தமிழக அரசியல்தலைவர்கள் அனைவரும் எமக்கான ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். ஜெயலலிதாவும் ஆதரவு குரல் கொடுத்திருக்கிறார். ஆனால், தற்போது அதனை மாற்றிக் கொண்டிருக்கிறாரெனில்... அதுபற்றி நாங்கள் என்ன சொல்ல?

கேள்வி: உங்களின் தற்போதைய தலைநகரான கிளிநொச்சியைப் பிடித்து விடுவோம் என்கிறார் மகிந்த ராஜபக்ஸ. இலங்கையின் உண்மையான போர்க்கள நிலைமை என்ன?

பதில்: சிங்கள அரசு, பல்வேறு வெளிநாடுகளிடமிருந்து ஏராளமான இராணுவ உதவிகளைப் பெற்று வருகிறது. இராணுவ தளபாடங்களை வாங்கிக் குவிக்கிறது. அதனைக் கொண்டு, தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு போர் ஒன்றை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் எமது தாயகத்தில் எமது கட்டுப்பாட்டு பிரதேசங்களில் குறிப்பிட்ட சில பிரதேசங்களுக்குள் நுழைந்து கிளிநொச்சி நகருக்கு அண்மையில் சிங்கள அரச படைகள் நிலை கொண்டுள்ளன. எமது விடுதலைப் போராளிகளும் சிங்கள அரச படைகளை கிளிநொச்சிக்குள் நுழைய விடாமல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த தாக்குதலில், இராணுவத்தினர் பாரிய அளவில் இழப்புகளை சந்தித்து வருகின்றனர். அதனால், சிறிலங்கா இராணுவத்தினர் விமானங்கள் மூலம் தமிழர்களின் குடியிருப்புகள் மீது கண் மூடித்தனமான குண்டு வீச்சுக்களை நடத்துகின்றனர். அதில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் உள்ளூரிலேயே தமது வாழ்விடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களைத் தேடி அகதிகளாக நகர்ந்த வண்ணம் உள்ளனர். ஆனால், கிளிநொச்சியைப் பிடித்து விடுவோம் என்பது ராஜபக்ஸ்வின் பகற்கனவு.

கேள்வி: சிறி லங்கா இராணுவத்திற்கு பல்வேறு நாடுகள் உதவி செய்துவரும் நிலையில், எந்த ஒரு நாட்டின் ஆதரவும் இல்லாத உங்களால் வெற்றி பெற்றுவிட முடியுமா?

பதில்: உலகத் தமிழ் மக்களின் ஆதரவு எம்பக்கம் உள்ளது. எமது மக்கள் முற்று முழுதாக எம்மோடு இணைந்து நிற்கிறார்கள். ஒரு இனத்தினுடைய விடுதலைப் போராட்டத்தில் மக்களின் ஆதரவும் பலமுமே முதன்மையானது. அதுதான் விடுதலை போராட்டத்தின் வெற்றிக்கு வழி வகுப்பதாகும். அந்த வகையில், உலக தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு தொடர்ந்து எங்களுக்கு கிடைத்து வருவதால்... இறுதி வெற்றி எங்களுக்குத்தான். அந்த வெற்றி... தமிழர்களின் வெற்றியாக இருக்கும்.

கேள்வி: போராளிகளின் எண்ணிக்கையை 3 ஆயிரமாக குறைத்து விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்தி விட்டோம் என்கிறதே சிங்கள இராணுவம்?

பதில்: எங்கள் மீது இராணுவம் நடத்தும் தாக்குதலில், சிங்கள இராணுவத்தினர் தான் இழப்புகளை அதிகம் சந்திக்கின்றனர். இந்த உண்மைகளை சிங்கள அரசு திட்டமிட்டே மறைத்து வருகிறது. சிங்கள அரசின் சார்பு ஊடகங்களும் அதனைத்தான் செய்து வருகின்றன. அத்தகைய அரசு சார்பு ஊடகங்கள் வழியாக ஒரு பொய்ப்பிரச்சாரத்தை திட்டமிட்டே செய்து வருகிறார் ராஜபகஸ. எங்களுக்கு எதிரான ஒரு கருத்தோட்டத்தை உருவாக்கும் முயற்சிதான் ராஜபக்ஸவின் பொய்ப் பிரச்சாரம். எங்களின் இராணுவ வலிமை முன்னெப்போதும்போல் பலமாகவே இருக்கிறது.

கேள்வி: விமான குண்டுகள் மூலம் உங்களின் மறைவிடங்கள், விடுதலைப்புலிகளின் விமான ஓடுபாதை, சந்திக்கும் இரகசிய இடங்கள் ஆகியவற்றை அழித்துவிட்டதாகவும் சிங்கள இராணுவம் கூறி வருகிறதே?

பதில்: எங்களின் மறைவிடங்கள், விமான ஒடுபாதை எதையும் சிங்கள இராணுவத்தினரால் சேதப்படுத்தப்பட முடியாது. இராணுவத்தினரின் கண்மூடித்தனமான விமான குண்டுவீச்சில் தமிழ் மக்களின் வாழ்விடங்கள், மருத்துவ மனைகள், கல்விச்சாலைகள், ஆலயங்கள் அழிக்கப்படுகின்றன. வளமான செழிப்பான காடுகள் மீது குண்டுகளை வீசி இயற்கை வளங்களையும் அழித்து வருகிறது இராணுவம். தமிழீழத்தையும் தமிழ் இனத்தையும் அழிப்பதற்காகவே, மக்களின் வாழ்விடங்களையும் இயற்கை வளங்களையும் அழித்துவிட்டு... எங்களின் மறைவிடங்களை அழித்துவிட்டதாக பிரச்சாரம் செய்கிறது இராணுவம்.

கேள்வி: சமீபத்தில்கூட உங்கள் அரசியல்துறை தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிய வந்துள்ளதே? அப்போது நீங்கள் அங்கு இருந்தீர்களா?

பதில்: தாக்குதல் நடந்தது. ஆனால், எந்த சேதமும் எற்படவில்லை. தாக்குதல் நடந்தபோது அங்கு இருக்கவில்லை.

கேள்வி: வடக்குப் பிரதேசத்தில் நீங்கள் பதில் தாக்குதல் எதையும் நடத்த முடியாததற்கும் உங்களின் பலவீனத்திற்கும் கருணா இல்லாததுதான் காரணம் என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறதே?

பதில்: இயக்கத்திற்கு துரோகம் இழைத்தவர் கருணா. அவரது துரோகத்தால் இயக்கத்திலிருந்து நிராகரிக்கப்பட்டவர். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் எப்போது அவரை நிராகரித்ததோ... அப்போதிலிருந்தே தமிழ் மக்களிடமிருந்தும் அவர் நிராகரிக்கப்பட்டவர். இயக்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இழைத்த துரோகத்தால், சிங்கள அரச படைகளின் ஒட்டுக்குழுவாக இயங்கி வருபவர். எமது மக்கள் முற்றுமுழுதாக அவரை நிராகரித்துவிட்ட நிலையிலும், எமது மக்களின் முழுபலமும் எம்மோடு இருக்கின்ற நிலையிலும்... இந்தக் கேள்வியை முழுதாக மறுக்கின்றேன்.

கேள்வி: கருணாவை சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினராக மகிந்த ராஜபக்ஸ நியமித்திருப்பது பற்றி?

பதில்: தமிழ் மக்கள் மீதான இன அழிப்புப்போரை நடத்திவரும் சிங்கள அரசு, உலக நாடுகளை ஏமாற்றி இராணுவ உதவிகளைப் பெறுவதற்காகவே கருணாவை ஒரு கருவியாக பயன்படுத்தி வருகிறது. அதற்காக, துரோகி கருணாவிற்கு பதவி தந்துள்ளார் ராஜபக்ஸ. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு துரோகம் இழைத்ததற்காக, அடக்குமுறை அரசின் தலைவர் ராஜபக்ஸவால் வழங்கப் பட்ட ஒரு "கைக்கூலியாகவே அதனைப் பார்க்கின்றோம்.

கேள்வி: சிறிலங்காவுக்கு இந்தியா தொடர்ந்து ஆயுத உதவி அளித்து வருவதாக நீங்கள் குற்றம்சாட்டி வருகிறீர்கள்? அந்த அடிப்படையில் அதனை முன்வைக்கிறீர்கள்?

பதில்: சிறிலங்கா இராணுவத்தினருக்கு ஆயுதத் தளபாடங்களை இந்தியா வழங்கி வருவதாகவும் பயிற்சி அளிப்பதாகவும் பல்வேறு செய்தி ஊடகங்கள் பதிவு செய்துள்ளன. வவுனியா தளத்தில் ராடார் கருவியை இயக்குவதற்கான பயிற்சியை சிங்கள இராணுவத்தினருக்குக் கொடுக்க இந்திய தொழில்நுட்பவியல் வல்லுநர்கள் செயல்பட்டு வந்தனர் என்பதும் ஊடகங்கள் மூலம் உலகிற்கு அண்மையில் தெரியப்படுத்தப்பட்டது. அது எங்களுக்கு கவலையளிக்கிறது.

கேள்வி: சிங்கள அரசு மேற்கொண்டு வரும் யுத்தம் நீடிக்குமா? அல்லது மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் சூழல் உள்ளது என கருதுகிறீர்களா?

பதில்: சிறீலங்கா அரசின் அரசியல், இராணுவ நிலைப்பாடுகளைப் பொறுத்தே அவ்வாறான சூழலை எதிர்பார்க்கலாம். ஆனால், கடந்த காலத்தில் நிலைநிறுத்தப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அவர்களே தாமாக விலகியது மட்டுமல்லாமல் இராணுவத் தீர்வே இனப்பிரச்சினைக்குத் தீர்வு என தொடர்ச்சியாக சொல்லி வருகின்றனர்.

கேள்வி: இலங்கை இனப்பிரச்சினையில் எந்த மாதிரியான பங்களிப்பை இந்தியா செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்: தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு எமது இயக்கத்தின் மீதான தடையை நீக்கி, எமக்கு ஆதரவு நல்கவேண்டுமென எதிர்பார்க்கிறோம்.

கேள்வி: சமீபத்தில் சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் துணை தளபதி ஜானக பெரேராவை உங்கள் இயக்கத்தின் தற்கொலைப்படை கொன்றுள்ளதே?

பதில்: அவ்வாறான சம்பவங்களின்போதெல்லாம் எமது இயக்கத்தின் மீது குற்றம்சாட்டுவதையே வழமையான நடவடிக்கையாக வைத்திருக்கிறது சிங்கள இராணுவம். சிங்கள இராணுவத்தினருக்குள்ளேயே ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளும் அளவிற்கு முரண்பாடுகள் உள்ளன.

கேள்வி: தற்கொலைப்படைத் தாக்குதலையும் அப்பாவி சிங்களவர்களையும் அழிக்கும் புலிகளை ஒடுக்க வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கிறது என்று இந்தியாவிடம் சிறிலங்கா அரசு கூறிவருகிறது. அந்தநிலையில், தமிழர்களுக்குச் சாதகமான ஒரு பங்களிப்பை இந்தியாவிடம் புலிகள் எப்படி எதிர்பார்க்கலாம்? என்று இந்திய அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்களே?

பதில்: நாங்கள் ஒருபோதும் அப்பாவி சிங்களவர் மீது தாக்குதல் மேற்கொள்வதில்லை. தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுகிற ஒர் விடுதலை இயக்கம் எங்களுடையது. எந்தவொரு சாதாரண மக்களையும் கொல்வதால் பிரச்சினைக்கு தீர்வு எற்பட்டுவிடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருப்பவர்கள். இந்திய அரசியல் நோக்கர்களும் கொள்கை வகுப்பாளர்களும் அதனை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

கேள்வி: தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் நீண்டகாலம் பதுங்கு குழியில் வாழ்ந்துவிட முடியாது என்றும் அவர் சரணடைந்துவிட வேண்டுமென்றும் சிறி லங்கா இராணுவம் எச்சரித்து வருகிறதே?

பதில்: பதுங்கு குழிகளில் வாழவில்லை. மக்களுடனேயே வாழ்ந்து, மக்களுக்காகப் போராடி எமது விடுதலைப் போராட்டத்தை வழிநடத்தி வருகிறோம். கடந்த 30 வருடங்களாக சிங்கள இராணுவம் அவ்வாறான வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்து வருவது வழமையான ஒன்று.

கேள்வி: தற்போதைய நெருக்கடியான களச்சூழலில் என்ன மனநிலையில் உள்ளீர்கள்?

பதில்: உறுதி தளராத நம்பிக்கையுடன் எமது விடுதலை போராட்டத்தை வழிநடத்திச் செல்லும் மனோவல்லமையுடன் இருக்கிறோம். கடந்த 30 வருட விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து அவ்வாறான சந்தர்ப்பங்களையெல்லாம் எமக்கு சாதகமாக மாற்றியுள்ளோம். எங்களது உறுதி தளராத மனநிலையைப் பற்றியும் தலைமைத்துவம் பற்றியும் இந்திய அமைதிப்படையின் இராணுவத் தளபதிகளாக இருந்தவர்களே பாராட்டி எழுதியுள்ளனர். எந்த நெருக்கடிகளிலும் உறுதி தளராத மனோதிடம் பெற்றுள்ளோம்.

கேள்வி: பிரபாகரன் வெளிநாட்டிற்கு அகதியாக தப்பிச் செல்ல முயற்சிப்பதாக சிறி லங்கா இராணுவம் கூறி வருவது பற்றி?

பதில்: வழமையான பொய்ப் பிரச்சாரத்தைத் தவிர வேறில்லை.

கேள்வி: பிரபாகரன் சரணடைந்தால் உயிரோடு இந்தியாவிடம் ஒப்படைப்போம் என்கிறாரே ராஜபக்ஸ?

பதில்: ராஜபக்ஸவின் பல கனவுகளில் இதுவும் ஒன்று.

கேள்வி: முப்பது வருடமாக நீடித்துவரும் இனப் பிரச்சினையில் தமிழகத்தின் பங்களிப்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?

பதில்: எமது மக்களுக்கான விடுதலை கிடைக்கும்வரை தொடர்ச்சியான வளமையான ஆதரவை நல்கி, எமது விடுதலைப் போராட்டத்திற்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைப்பதற்கு செயல்பட வேண்டுமென்பது எங்களின் எதிர்பார்ப்பு.

கேள்வி: சர்வதேச நாடுகளுடனான புலிகளின் தொடர்புகள் நீடிக்கின்றனவா?

பதில்: சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக எங்களின் வழமையான தொடர்புகள் இருந்து வருகின்றன.

கேள்வி: இப்போதும் நீங்கள் தமிழீழக் கோரிக்கையைத் தான் ஒரு தீர்வாக முன்வைக்கிறீர்களா? அல்லது ஒரு குறைந்தபட்ச சுயாட்சிகொண்ட நிர்வாக அமைப்பாவது தீர்வாக இருக்கட்டும் என நினைக்கிறீர்களா?

பதில்: 1977 ம் ஆண்டு காலத்திலிருந்தே எமது மக்கள் தமது அரசியல் அபிலாசைகள் என்னவென்பதை ஒவ்வொரு தேர்தல்போதும் வெளிப்படுத்தியே வந்துள்ளனர். அதுதான் இனச்சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும்.

நீங்காத திரைக்காவியங்களை தந்த இயக்குனர் ஸ்ரீதர் காலமானார்

ழம்பெரும் திரைப்படை இயக்குனர் ஸ்ரீதர் ஒக்ரோபர் 20ம் திகதி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75.

கல்யாணப் பரிசு, தேனிலவு, வெண்ணிற ஆடை, ஊட்டி வரை உறவு, நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை, உரிமைக் குரல், மீனவ நண்பன் உட்பட, காலத்தால் அழியாத பல்வேறு திரைப்படங்களை இயக்கியவர் ஸ்ரீதர். தமிழ் திரையுலகில் திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்த பெருமை அவருக்கு உண்டு.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், சிவக்குமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த், மோகன் உள்பட உச்ச நட்சத்திரங்கள் பலர் ஸ்ரீதரின் இயக்கத்தில் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களாக ரஜினியும் கமலும் உருவெடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், அவ்விருவரையும் வைத்து ஸ்ரீதர் உருவாக்கிய இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படம் தமிழ் சினிமாவின் மைல்கல்லாக அமைந்தது.

திரை உலகதிற்கு முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, மற்றும் 'வெண்ணிறாடை' நிர்மலா, 'வெண்ணிறாடை' மூர்த்தி போன்ற பல முன்னணி நட்சத்திரங்களை அறிமுகம் செய்தவர் இயக்குனர் ஸ்ரீதர்.


[ஊட்டி வரை உறவு திரைப்பட பாடல் காட்சி - பூமாலயில் ஓர் மல்லிகை]

1961-ம் ஆண்டில் சித்திரலாயா என்னும் பட கம்பெனியை தொடங்கி தயாரிப்பாளராகவும் உயர்ந்த ஸ்ரீதர், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார்.

காலஞ்சென்ற இயக்குனர் ஸ்ரீதரின் மனைவி பெயர் தேவசேனா. இவருக்கு ஸ்ரீபிரியா என்ற மகளும், சஞ்சய் என்ற மகனும் உள்ளனர்.

October 19, 2008

தமிழக மக்களின் போராட்டங்கள் அல்லல்படும் தமிழ் மக்களுக்காகவே - கனிமொழி

ற்போது தமிழகத்தில் இலங்கைத் தமிழ் மக்களுக்காக எழுந்துள்ள எழுச்சியானது வெறும் தேர்தலை நோக்கியதல்ல. நாம் இலங்கையில் அல்லல்படும் தமிழ் மக்களுக்காகவே குரல் எழுப்புகின்றோம்'' என்று தமிழக முதல்வரின் புதல்வியும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இலங்கையின் முதன்மை தமிழ் பத்திரிகையான வீரகேசரியின், வார இதழுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரத்துக்குத் தீர்வு கிடைக்க வேண்டுமெனக்கோரி அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமாச் செய்து கடிதம் கையளித்துள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.

" இலங்கையிலுள்ள தமிழர்களின் விவகாரம் உள்நாட்டு விவகாரம் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அதற்காக நாம் ஒதுங்கியிருக்க முடியாது. நாஸி முகாம்களில் யூதர்களை ஹிட்லர் படுகொலை செய்தபோது அதனை உள்நாட்டு விவகாரம் என உலகம் பார்த்துகொண்டிருக்கவில்லை அந்த வகையில் இலங்கையில் தமிழர்கள் பாதிக்கப்படுவது உள்நாட்டு விவகாரமாக இருந்தாலும்கூட அதுகுறித்து நாம் கவலைகொள்ள வேண்டியுள்ளது'' என்றும் அவர் தனது செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

"தமிழீழ மக்களையும், விடுதலைப் புலிக ளையும் இணைத்து இந்த பிரச்சினைகளை திசை திருப்புவதற்கு இலங்கை அரச தரப்பு, ஜெயலலிதா போன்ற பலரும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். தமிழகத்தில் குரல் எழுப்பப்படுவதற்கு முக்கியமாக அமைவது, இலங்கையில் அவதிப் படும் அப்பாவி குழந்தைகளுக்காக, பெண்ளுக்காக முதியோர்களுக்காகவுமேயாகும்.

இதற்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. விடுதலைப் புலிகள் அவர்களுடைய போராட்டத்தை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அது எமது நோக்கமுமல்ல'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வீரகேசரி வார இதழுக்கு வழங்கிய செவ்வியின் முழு விவரம் பின்வருமாறு:

கே: தமிழீழ விடுதலைப்புலிகளைக் காப்பாற்றுவதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் முயற்சிப்பதாக இலங்கைத் தரப்பில் குற்றம் சுமத்தப்படுகின்றதே?

ப: தமிழீழ மக்களையும் விடுதலைப் புலிகளையும் இணைத்து இந்த பிரச்சினைகளை திசை திருப்புவதற்கு இலங்கை அரசு தரப்பும் ஜெயலலிதா போன்ற பலரும் இந்த முயற்சியை தீவிரமாக செய்துகொண்டு வருகின் றார்கள். இங்கே குரல் எழுப்பப்படும் முக்கிய விடயம் அங்கே அவதிப்படும் அப்பாவிக் குழந்தைகளுக்காக, பெண்களிற்காக, முதியோர்களுக்காக எதுவுமே தெரியாமல் அகதி முகாம்களில் இருந்து அழைத்துச்செல்லப்பட்டு கொடுமைப்படுத்தப்படும் இளைஞர்களுக்காக, இதுதான் இங்கே பிரச்சினை.

இதைவிட்டுவிட்டு விடுதலைப்புலிகளுக்கான குரல், ஆதரவாகச்செயற்படுகிறார்கள் என்று சொல்லப்படுவதெல்லாம் பொய். இந்த திசை திருப்பும் செயல்களை இலங்கை அரசும் அதன் கைக்கூலிகளாக இருக்கும் சிலபேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கும் விடுதலைப்புலிகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. விடுதலைப் புலிகள் அவர்களுடைய போராட்டத்தை அவர்களே செய்வார்கள். அவர்களுக்காக குரல்கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. அதுவே நோக்கமும் இல்லை. முதலில் இது இரண்டையும் பிரித்து பார்த்து நியாயமாக பே கற்றுக்கொள்ள வேண்டும்.

ஆகஸ்ட் 10, 2007 இல், ராஜ்ய சபை உறிப்பினர் கனிமொழி இந்திய பாராளுமன்றத்திற்கு உப ஜனாதிபதி தேர்தலுக்காக வாக்களிக்க வந்தபொழுது...படப் பிடிப்பு: கமல் சிங் (பி.ரி.ஐ)

கே: இலங்கையில் நடைபெற்று வரும் இன் றைய போர் நிலைமை குறித்து?

ப: இலங்கையில் போர் நிலைமைகளைவிட மக்களுடைய கஷ்டங்களைத்தான் இங்கே முக்கியத்துவப்படுத்த வேண்டியிருக்கின்றது.

போரில் ஈடுபட்டிருக்காத அந்த மக்கள் பெரிய அவதிக்குள்ளாகி இருக்கின்றார்கள்.

அந்த போரால் மூன்று லட்சத்திற்கு மேற்பட்டோர் உள்நாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று கணித்து சொல்லப்படுகின்றது. இப்போது மழைகாலம் வேறு வரப்போகிறது தங்குவதற்குரிய இடங்களில்லாமல் துன்பப்படும் அம்மக்களுக்கு இன்று அது கொடுமையாக இருக்கும். அதை தடுப்பதற்கே நாம் குரல்கொடுக்கிறோம்.

கே: இப்பொழுது நடைபெறுவது இலங்கையின் உள்நாட்டு பிரச்சினை எனவும் இதில் தலையிட இந்தியாவுக்கு உரிமை இல்லை எனவும் கூறப்படுகின்றதே?

ப: உள்நாட்டு பிரச்சினை என்பதில் யாருக்கும் இருவேறு பட்ட கருத்துக்கள் இல்லை.

ஆனால் ஹிட்லர் நாஸி முகாமில் யூதமக்களை கொண்டுபோய் லட்சக்கணக்கில் கொலை பண்ணியதை எப்படி ஜேர்மனிய உள்நாட்டு பிரச்சினை என்று சொல்லி நாம் இன்றுவரை அதை நியாயப்படுத்த முடியாதோ அது போலத்தான் ஒரு இனத்தின் மக்களை அரசாங்கமே அம்மக்கள் மீது ஒரு இனப்படுகொலையை கட்டவிழ்த்து விடுகின்றது எனும்போது அதை நாம் உள்நாட்டு விவகாரமாக பார்க்க முடியாது. ஒரு தனிநாட்டுக்கான போராட்டத்தை வேண்டுமென்றால் உள்நாட்டு விவகாரமாக கருதி நாம் தலையிடுவது தப்பு என்று சொல்வது நியாயம் . ஆனால் ஒரு இனத்தை, நாட்டில் உள்ள ஒரு பகுதிமக்களை அரசாங்கமே அழிக்கவேண்டும் என்ற நோக்கில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றபோது அதை எப்படி நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியும்? இது தமிழர்களுடைய பிரச்சினையாக நாம் பார்க்கவில்லை. இதை ஒரு இந்தியப்பிரச்சினையாக நாம் பார்க்கவில்லை. இதை ஒரு மனிதாபிமானமான, மனிதர்களைக்காப்பாற்ற வேண் டிய ஒரு பிரச்சினை யாக நாம் பார்க்கின்றோம். இது குறித்து இந்தியா மட்டும்தான் கேள்வி கேட்க வேண்டும் என்பதல்ல, அமெ?க்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் கேட்க வேண்டும்.

மனித இனத்தின் மேல் நம்பிக்கை வைத்திருக்கும் யாராக இருந்தாலும் கேட்கவேண்டிய நியாயமான கேள்வி கள் இவை.

கே: இந்தியாவில் பல்வேறு பிரச்சி னைகள் இருக்கும் போது இலங்கைப் பிரச்சினையில் இந் தியா ஏன் தலையிட வேண்டும் எனக்கேட்கப்படுகின்றதே?

ப: ஒவ்வொரு நாட்டிற்கும் ஆயிரத் தெட்டு பிரச்சி னைகள் இருக்கின் றன. பிரச்சினை கள் இல்லாமல் யாரும் இருக்க முடியாது. உன் கோயிலை இடித் தால் எனக் கென்ன பிரச்சினை என்று ஒதுங்கிக்கொள்ள முடியுமா? நமது அன்றாடப் பிரச்சினைகளையும் நம் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் வேறுபடுத்தி, இதையெல்லாம் தீர்த்துவிட்டுத்தான் இந்தியா ஜனநாயக நாடாக இருக்க வேண்டும் என்று நாம் சொல்ல முடியாதில்லையா?

இப்போது இந்தியாவில் பல பிரச்சினைகள் இருக்கும் போது தேர்தல் எதற்கு என்று கேட்க முடியுமா? அல்லது பலபிரச்சினைகள் இருக் கும் போது அவசரகால சட்டங்களை மீண் டும் கொண்டு வந்தால் ஏற்றுக்கொள்ள முடியுமா? பங்களாதேஷ் பிரச்சினை வந்தபோது இந்தியாவில் பிரச்சினைகள் இல்லாமலா இருந்தது? அப்போதும் இதை விட கூடுதலான பிரச்சினை கள் இருக்கத்தான் செய்தது.

ஆகவே, எமக்கிருக்கிற பிரச்சி னைகளைக் காரணம் காட்டி பக்கத்துவீடு பற்றி எரிவதை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

கே: தமிழகத்தின் புதிய நிலைவரத்தால் இலங்கையில் யுத்தத்தை முன்னெடுப்பதற்கு தடங்கல் எதுவுமில்லையே என இலங்கை அரசு தரப்பால் கூறப்படுகின்றதே?

ப: இதை ஒரு உலகளாவிய பிரச்சினையாகப் பார்த்து எல்லாநாடுகளும் மனிதாபிமான அடிப்படையில் இதில் தலையிட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும்.

இலங்கை மீது அழுத்தம் கொடுக்க வேண்டும். மக்கள் பாதுக்காக்கப்படவேண்டும்.

இதைத்தான் நாங்கள் திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருக்கின்றோம். மாற்றம் வருமா வராதா என்று ஆருடங்கள் சொல்வதை விட மாற்றம் வேண்டும் என்பதுதான் நமது விருப்பம்.

கே: தேர்தல் காலமென்பதால் தான் இலங்கை தமிழர்களிற்காக குரல் எழுப்பப்படுவதாக சொல்லப்படுகின்றதே?

ப: இலங்கையில் அரசாங்கம் சிங்கள மக்களிடம் தாம் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலே நம்முடைய மக்கள் அங்கு அழிகின்றார்கள். பிரச்சினை உச்சக்கட்டத்தை நோக்கி செல்கின்றது.

அதனால் வேறு வழியில்லாமல் இந்த பிரச்சினையை. எல்லோரும் கையில் எடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இப்பொழுது இங்கே தேர்தல் காலமென்பதை நான் ஒத்துக்கொள்கின்றேன்.

அந்த பிரச்சினையை ஒரு கட்சி முன் னெடுத்து அதன் மூலமாக அரசியல் ஆதாயம் தேடுகின்றது என்றால் அக்கட்சிக்கு பலம் ஏற்படக் கூடும். ஆனால் எல்லாக்கட்சிகளும் இணைந்து இதை ஒருமித்த குரலாக மாற்றும் போது இது எப்படித் தேர்தல் லாபத்திற்கானதாக அமையும்? இதற்கு தனித்து எதிர்ப்புக்குரல் ஜெயலலிதா அம்மையாரிடம் இருந்து மட்டும்தான் வருகிறது. இதைத்தவிர எல்லா கட்சிகளும் பல கருத்து வேறு பாடுகளையும் தாண்டி ஒன்றாக குரல் கொடுக்க முன்வந்த பிரச்சினையாகத்தான் பார்க்கவேண்டும் இதை எப்படி தேர்தலுக் கான ஒரு விசயமாகப் பார்க்கமுடியும்? அந்த அம்மையார் இதையே காரணமாக வைத்து எம்.எல்.ஏக்களையும் ராஜினாமா செய்யச்சொல்லி இங்கே நாடாளுமன்றத் தேர்தலில் மாத்திரம் குறிவைக்காமல் சட்ட மன்றத்தேர்தலையும் கொண்டு வந்துவிட முடியுமா என்றும் ஆசைப்படுகின்றார். அவர் ஒருவரைத் தவிர இங்கே யாரும் இதன் மூலமாக அரசியல் ஆதாயம் தேடமுனைவதாகத் தெரியவில்லை.

கே: இந்திய அரசு தங்களுடன் முழுமையாக ஒத்துழைப்பதாகவும் தமிழ் நாட்டின் நிலைப்பாடு குறித்து கருத்தில் எடுக்க தேவையில்லை எனவும் இலங்கை அரசு தரப்பால் கூறப்படுவது குறித்து?

ப: அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் சொல்லுவார்கள். ஆனால் இந்திய மத்திய அரசாங்கத்தின் மீது தமிழக அரசுக்கு முழுமையான நம்பிக்கை இருக்கின்றது எங்களை அவர்கள் ஏமாற்றி விடமாட்டார்கள்.

தமிழ் மக்களை அவர்கள் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை நிச்சயமாக இருக்கின்றது.

அதனால்தான் அவர்களை நோக்கி கோரிக்கையை வைத்துக்கொண்டிருக்கின்றோம். இலங்கை அரசாங்கம் தன்னுடைய வசதிக்கேற்ப என்னவென்றாலும் சொல்லட்டும்.

கே: இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட முடியாது, அது ஒரு இறைமையுள்ள அரசாங்கம் எனவே ஒரு வரையறைக்குள்தான் இந்தியா செயற்பட முடியும் என காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் அபிக்ஷக் சிங்வி கூறியிருக்கின்றாரே?

ப: அந்த வரையறைக்குள்தான் நாம் செயற்படச் சொல்கின்றோம். இன்னொரு நாட்டின் மீது போர் தொடுப்பதோ அல்லது வேறு எதையம் செய்வதென்பதோ எந்த அளவுக்கு சாத்தியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒரு விடயம் தான். ஆனால் நிச்சயமாக அப்பாவி மக்கள் கொல்லப்படும் போது நம்முடைய இனத்தை சேர்ந்த மக்கள் கொல்லப்படும் போது நிச்சயமாக நம்மால் கண்டிக்கப்பட வேண்டிய ஒரு விடயமில்லையா. அவர்கள் தமிழ் இனம் மாத்திரமில்லை, அவர்களும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் தான். இன்னொன்றை பார்த்தால் பிரிட்டனின் பல்வேறு இனமக்கள் வாழ்க்கின்றார்கள். சீக்கிய இனமக்களும் வாழ்க்கின்றார்கள் அவர்கள் தலைப்பாகை கட்டக்கூடாது என்ற விடயம் வந்தபோது நிச்சயமாக நாம் எல்லோருமே நம்முடைய கண்டனத்தை தெரிவித்தோம்.

இது சீக்கியர்களுடைய அடிப்படை நம்பிக்கையென்று இது அவர்களுடைய விவகாரமென்று நாம் ஒதுக்கிவிடவில்லையே அது போலத்தான் இதுவும். அதைவிட வாழும் உரிமையைப் பற்றிய ஒரு பிரச்சினையாக இருக்கின்றது.

கே: தமிழக முதல்வர் ஏற்பாடு செய்த அனைத்துக்கட்சி மாநாட்டில் பங்குபற்றாத கட்சிகளை இவ்விடயத்தில் எவ்வாறு அரவணைத்து செயற்படப்போகின்றீர்கள்?

ப: எல்லோரும் ஒன்றாக சேர்ந்து இவ்விடயத்திலே ஈடுபடவேண்டும் என்பதைத்தான் தமிழக முதல்வர் அந்த அனைத்துக்கட்சி கூட்டத்திலேயே சொல்லியிருக்கின்றார். "சில கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இந்த கூட்டத்திற்கு வராதது என்னை எதிர்ப்பதற்காகவே ஒழிய தமிழர்களை எதிர்ப்பதற்காக அல்ல. பிரச்சினையை அவர்கள் மறுதலிக்கின்றவர்கள் அல்லர்' என்பதை மிகவும் பெருந்தன்மையோடு சொல்லியிருக்கின்றார்கள். அதைப் புரிந்துகொண்டு இதை ஒருமித்த குரலாக ஒலிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இவர்கள் புரிந்துகொண்டு நிச்சயமாக வருவார்கள் என்பதைநாம் நம்பகின்றோம்.

கே: அனைத்துக்கட்சி கூட்டதில் எடுத்த முடிவின்படி பதினைந்து நாட்களிற்குள் இலங் கையில் யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்படா விட்டால் தமிழகத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என்றதீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது நீங்கள் உடனடியாக உங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கின் றேன் என்று தலைவர் கலைஞர் அவர்களிடம் கடிதத்தை சமர்ப்பித்தீர்கள். அது போல் தமிழகத்தின் மற்றைய எம்.பிக்களும் ராஜினாமா செய்வார்களா?

ப:இதற்கு திராவிட முன்னேற்ற கழக தலைவர் சொன்னதை வைத்து உங்களிற்கு பதில் சொல்லுகின்றேன். கண்டிப்பாக எங்கள் கட்சியின் தலைமை என்ன முடிவெடுத்ததோ உணர்வு பூர்வமாக ஒத்து நாம் செயற்படுவோம். மற்றவர்களும் நிச்சயமாக தங்களினுடைய வாக்குறுதியை காப்பாற்று வார்கள் என்று நம்புகின்றோம்.

கே: தமிழகத் தலைவர்கள் சொன்னார்கள் என்பதற்காக இராணுவத் தாக்குதலை நிறுத்த முடியாது என்று இலங்கை அரசாங்கத்தரப்புஅறிவித்திருக்கின்றதே?

ப: தமிழ் மக்கள் பகுதியில் மக்கள் மீது தாக் குதல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதை இங்கே சிலபேர் இல்லை என்று மறுக்கிறார்கள். அதை இலங்கை அரசு சொல்வதால் அவர்களின் வேசம் நன்றாக கலைகிறது.

கே: மக்கள் அகதிகளாக மர நிழல்களிலும் வயல்வெளிகளிலும் தங்கியிருப்பதாக கூறப் படுவது இவை உண்மைக்கு மாறான கூற்று என்று இலங்கை அரசால் கூறப்ப டுகிறதே?

ப: ஐ.நா அமைப்பு, செய்தி நிறுவனங்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற பல அமைப்புக்களை உள்ளே விடச் சொல்லுங்கள். எது உண்மை எது பொய் என்று உலகம் அறியட்டும்.

கே: அண்மையில் இந்தியப்பிரதமருடன் நீங்கள் சந்தித்த போது. பேசிய விடயங்களைப்பற்றி..?

ப: கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படும் தமிழக மீனவர்களைப் பற்றியும் இன்னல்களுக்குள்ளாகும் ஈழத்தமிழர்கள் பற்றியும் சர்வகட்சி மாநாடு நடைபெறு?ன்னரே பிரதமருக்கு விளக்கமாக எடுத்துக் கூறினேன்.

நிச்சயமாக அவர் நடவடிக்கை எடுக்கின்றேன் என்பதைத்தான் திரும்ப திரும்ப சொல்லியிருந்தார். வாக்குறுதிகளை அளித்தார்கள். நாங் கள் பொறுத்திருந்து பார்ப்போம்.

கே: இலங்கை இனப்பிரச்சினையில் எவ்வகையிலான தீர்வு எட்டப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

ப: அப்பாவி மக்கள் இன்னல்களிலிருந்து காப்பாற்றபடவேண்டும் அதுதான் அடிப்படை. அவர்களுடைய உள்நாட்டு விவகாரத்தில் தலையிடவோ, இது தான் தீர்வு என்று சொல்லவோ உரிமையில்லைத்தான். ஆனால் இந்தப்பிரச்சினைக்கு சரியான தீர்வு அரசியல் தீர்வு ஒன்றாகவே இருக்கமுடியும்

2008 அன்று தி ஹிந்து பத்திரிகைக்கு பேட்டி அளித்த ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் தமிழ் மக்களிற்கு இந்த நாட்டில் உரிமையிருக் கின்றது என்று சொல்லியிருக்கின்றார்.

ஆனால் சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை இராணுவத் தளபதி இது சிங்களவர்களுக்கே சொந்தமான நாடு என்று சொன்னார்.

அப்படியென்றால் ஜனாதிபதிக்கும் நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருப்பவருக்கும் இடையில் எப்படி இரு வேறுபட்ட கருத்துக்கள் இருக்க முடியும்? அதை அவர்கள் தெளிவு படுத்த வேண்டும்.

அங்கு இருக்கும் குடிமக்களுக்கு நீ இரண்டாம் பட்ச குடிமகன் தான் என்று அரசாங்கம் முடிவெடுத்து அறிவிக்கு மென்றால் அதை எல்லோரும் ஒட்டு மொத் தமாக அறிவிப்பார்களானால் அங்குள்ள உண்மை நிலைமை என்ன என்று தெரியவரும். அப்போது நாம் அதற்கு என்ன செய் யலாம் என்பதையும் தீர்மானிக்க முடியும்.

அவர்கள் வேறு வேறாகப் பேசும் போது பல சந்தேகங்கள் எழத்தான் செய்யும்.

October 17, 2008

வட-கிழக்கு மக்கள் நிம்மதியாக தொழில் செய்யக்கூடிய நிலை அவசியம்

டக்கு மற்றும் கிழக்கு பிரதேமக்களில் பெரும்பாலானவர்கள் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலையே பிரதானமாக கொண்டுள்ளனர்.

ஆனால் யுத்த நிலவரங்கள், இப் பிராந்திய மக்கள் தமது அன்றாட விவசாய மற்றும் மீன்பிடி தொழில்களை செய்ய்ய முடியாதவாறு பல்வேறு அச்சுறுத்தல்களை கொணர்ந்த வண்ணம் உள்ளன.

ஒக்ரோபர் 16ம் திகதியன்று அம்பாறை மாவட்டம் திருக்கோயிலில் கமத் தொழில் நிமித்தம் சென்று கொண்டிருந்த 4 விவசாயிகளின் படு கொலை இப் பகுதி மக்கள் எதிர் நோக்கும் அடிப்படை வாழ்வு நிலை அச்சுறுத்தல்களை எடுத்துக்காட்டுகிறது.

'வட்டமடு விவசாயிகளின் பரிதாப மரணம்' என்ற தலைப்பில் இன்று ஒக்ரோபர் 18ம் திகதி, விவசாயிகள் தங்கள் வயல் நிலங்களில் நிம்மதியாக தொழில் செய்யக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, வீரகேசரி நாளிதழ் ஆசிரியத் தலையங்கம் தீட்டியுள்ளது.

Chariots Whirl
அம்பாறை மாவட்டம்-சம்மாந்துறையில் உள்ள நெல் வயல்~படப் பிடிப்பு: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை

வீரகேசரி ஆசிரியத்தலையங்கம் முழுவதுமாக:

ட்டமடு விவசாயிகளின் பரிதாப மரணம் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் வட்டமடு வயல் பிரதேசமொன்றில் வைத்து நான்கு விவசாயிகள் இனந்தெரியாத ஆயுதபாணிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் இப்பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு தமிழர்களும் இரண்டு முஸ்லிம்களுமாக நால்வர் இனந்தெரியாத ஆயுதபாணிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அக்கரைப்பற்று மற்றும் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பதற்றம் நிலவியதுடன் ஹர்த்தாலும் அனுஷ்டிக்கப்பட்டது.

இவர்கள் நால்வரும் அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தங்களுடைய வயல் பகுதிகளுக்கு சென்ற சமயமே இவ்வாறு ஆயுததாரிகளினால் வழிமறிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை யார் செய்தார்கள், எதற்காக செய்தார்கள் என்பது மர்மமாகவே உள்ளது. இந்நிலையில் இப்பிரதேச விவசாயிகள் மிகுந்த அச்சத்துக்கும் கவலைக்கும் ஆளாகியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

இதேவேளை, மேற்படி வட்டமடு படுகொலைகளை முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாக கண்டித்துள்ளது. இதுகுறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட சூத்திரதாரிகளை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென்று கோரியுள்ளார்.

அத்துடன் இப்பகுதி மக்கள் அச்சமின்றி தமது அன்றாட வாழ்வாதார முயற்சிகளில் ஈடுபடுவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில் தற்பொழுது பாதுகாப்பு முற்று முழுதாக பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறும் நிலையில், இவ்வாறான சம்பவங்கள் தொடர்கின்றன என்று சுட்டிக்காட்டியுள்ள மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு அப்பாவி விவசாயிகளின் உயிரோடு எவரும் விளையாடக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

நாட்டில் அங்குமிங்குமாக தொடரும் படுகொலைகள் ஒருபுறம் மக்கள் மத்தியில் அச்ச உணர்வை மேலோங்க செய்துள்ளதுடன் மறுபுறம் தொழில் நடவடிக்கைகளில் நிம்மதியாக ஈடுபடமுடியாத சூழலையும் உருவாக்கி வருகின்றது.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேமக்களில் பெரும்பாலானவர்கள் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலையே பிரதானமாக கொண்டுள்ளனர். எனினும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது பெருமளவு நிலம் தரிசாகக் காணப்படுவதுடன் பாரம்பரியமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த மக்களும் வீடுகளில் முடங்கிப் போயுள்ளனர்.

அதேபோன்றே சுதந்திரமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடமுடியாத நிலையில் கடற்றொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கையை கொண்டுநடத்த முடியாது அரசின் நிவாரணங்களையே எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இதனால் வடக்கு கிழக்கு பொருளாதாரம் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதுடன் மக்களும் தங்கள் வாழ்க்கையை கொண்டுநடத்த முடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இருந்தபோதிலும் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில் ஆங்காங்கே விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. விவசாயிகள் மீண்டும் தமது தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டும் வந்தனர். எனினும் துரதிஷ்டவசமாக இவ்வாறான அச்சுறுத்தல்கள் மேலோங்கியிருப்பது விவசாயிகள் தமது தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் அரிசி மற்றும் மீன் வகைகளின் விலைவாசிகள் பன்மடங்கு உயர்ந்துள்ளதுடன் மக்கள் அவற்றை கொள்வனவு செய்யமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் பணவீக்கமும் பன்மடங்கு அதிகரித்து செல்கின்றது.

வடக்கு கிழக்கு பிரதேசத்தில் நிலைமை சீரடைந்து மக்கள் தங்கள் தொழில் நடவடிக்கைகளில் சுதந்திரமாக ஈடுபடக் கூடிய சூழ்நிலை இருக்குமேயானால் அவர்களின் பங்களிப்பு தேசிய பொருளாதாரத்தில் கணிசமானளவு இருப்பதுடன் பொருட்களின் விலைவாசிகள் குறைவடையவும் வாய்ப்பாக இருக்கும்.

ஆனால் இன்று தோன்றியுள்ள சூழ்நிலை மக்கள் தங்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது போயுள்ளதுடன் அரச நிவாரணங்களையே நம்பி வாழவேண்டிய இக்கட்டான நிலையை தோற்றுவித்துள்ளது.

இலங்கையில் விவசாய நடவடிக்கைகளில் கிழக்கு மாகாணம் கணிசமான பங்களிப்பை செலுத்தி வருகின்றது. இந்நிலையில் விவசாயிகள் தங்கள் வயல் நிலங்களில் நிம்மதியாக தொழில் செய்யக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

அதன் மூலமே நாட்டின் நெற்செய்கையை விஸ்தரிப்பதுடன் அரிசியின் விலையையும் கட்டுப்பாட்டுக்குள் பேணக்கூடியதாக இருக்கும்.

மாறாக இத்தகைய அச்சுறுத்தல்கள் தொடருமானால் அது விவசாய நடவடிக்கைகளை பரந்த அளவில் பாதிக்கச் செய்வதாக இருக்கும். எனவே இவ்வாறான சம்பவங்கள் தொடராதிருக்க அரசாங்கம் உறுதி செய்வது மிகவும் அவசியம்.

October 15, 2008

எம்.பி. பதவியை இராஜினாமா செய்தார் கனிமொழி

முதல் அமைச்சர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபை தி.மு.க. எம்.பி.யுமான கனிமொழி, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தனது எம்.பி. பதவிக்கான ராஜினாமா கடிதத்தை முதல் அமைச்சர் கருணாநிதியை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.

[கனிமொழி]

இராஜினாமா தொடர்பாக தமிழ் நாட்டில் இருந்து வெளி வரும் தினமணி பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை திமுக தலைவரும், முதல்வருமான கருணாநி தியிடம் அக். 15, புதன்கிழமை அளித்தார் கனிமொழி.

பின் தேதியிட்டு இந்த ராஜிநாமா கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ராஜிநாமா கடிதத்தை ஏற்பதா? இல்லையா? என்பது குறித்து திமுக தலைமையிடம் எந்த அறிவிப்பும் வெளியாக வில்லை.

இலங்கைத் தமிழர்கள் மீதான ராணுவத் தாக்குதலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்வார்கள்' என்று அனைத் துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், மாநிலங்க ளவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை கனிமொழி புதன்கி ழமை அளித்தார். தமது தந் தையும், முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியி டம் இந்தக் கடிதத்தை அவர் அளித்துள்ளார்.

இதற்காக, முதல்வரின் கோபாலபுரம் இல்லத்துக்கு புதன்கிழமை காலை அவர் வந்தார். ராஜிநாமா கடிதத்தை நேரில் அளித்தார்.

இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண மத்திய அரசுக்கு 2 வாரம் காலக்கெடு அளித்து அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. ஆனால், தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறு நாளே தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜி நாமா செய்வதற்கான கடிதத்தை கனிமொழி அளித்துள்ளார்.

October 13, 2008

தமிழகத்தின் ஒன்றிணைந்த குரலே அதிக வலுவுடையதாக இருக்கும்

மிழகத்தில் இன்று அரசியல் கட்சிகள் மட்டுமின்றி மாணவர்கள், வணிகர்கள், திரையுலகத்தினர் என பலரும் இலங்கை வாழ் தமிழ் மக்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும், தங்கள் பூர்வீக பிரதேசத்தில் வாழவேண்டும் என்ற குறிக்கோளுடன் பலவித போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அவர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுத்தால் அது அதிக வலுவுடையதாக இருக்கும் என்பதே பொதுவான அபிப்பிராயம், என கொழும்பில் இருந்து வெளி வரும் முன்னணி தமிழ் நாளிதழான வீர்கேசரி, ஒக்ரோபர் 14ம் திகதிய ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

"தமிழகத்தில் எதிரொலிக்கும் இலங்கைத் தமிழர் விவகாரம்:, வீர்கேசரி ஆசிரியத்தலையங்கம் முழுமையாக:

இலங்கைத் தமிழர் விவகாரம் தமிழக அரசியற் கட்சிகள் மத்தியில் பெரும் அனுதாபத்தைப் பெற்றுள்ள அதேவேளை, ஒருமித்தும் தனித்தும் கூட்டங்களை நடத்தவும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவும் அவை திட்டமிட்டுள்ளன.

தமிழக முதல்வர் மு. கருணாநிதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இன்று கூட்டியுள்ளார். அதேவேளை, அக்கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ள அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, இன்று சென்னையில் எம்.ஜி.ஆர். சமாதிக்கு முன்பாக இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதமிருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் சகல கட்சிகளும் கலந்து கொள்வது அவசியமென காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் கே.வி. தங்கபாலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, ஈழத்தமிழர் பிரச்சினையில் அ.இ.அ.தி.மு.க.வும் , ம.தி.மு.க.வும் இதர கட்சிகளிலிருந்து தனிமைப்பட்டு விட்டன.

முதலமைச்சர் கருணாநிதி குரல் கொடுத்ததோடு நிறுத்தி விடாமல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட்டுகிறார். ஈழத் தமிழர் பிரச்சினையில் உண்மையான அக்கறையும், கவலையும், இன உணர்வுமுள்ள எவரும் இதனை வரவேற்கவே செய்வர். ஆனால், அ.இ.அ.தி.மு.க.வும் ம.தி.மு.க.வும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்று அறிவித்திருப்பதன் மூலம் மிகுந்த கவலையை ஏற்படுத்தி விட்டதாக திராவிடர் கழகத் தலைவர் வீரமணி நீண்ட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

தமிழக முதல்வர் கருணாநிதி கூட்டியுள்ள மாநாடு குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இக்கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பதும், இதனைக் கண்துடைப்பு நாடகமென விமர்சிப்பதும் துளியளவும் ஈழத்தமிழர்களுக்குப் பயனளிப்பதாக அமையாது என்றும் அவர்களின் நலனைக் கருத்திற் கொண்டேனும் அரசியல் நோக்கங்களைப் புறந்தள்ளி விட்டு ஒன்றுபட்டு குரல் எழுப்ப முன்வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வணிக சங்கக் கூட்டமைப்பு எதிர்வரும் 17ஆம் திகதி தமிழகம் தழுவிய அளவில் கடையடைப்பு, அறப்போர் நடத்த அழைப்பு விடுத்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியதாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் அரசியற் கட்சிகள் மாத்திரமன்றி வணிகச் சங்கங்கள் மற்றும் தமிழ்த் திரைப்படத் துறையினர் ஆகியோர் குரல்கொடுக்க முன்வந்திருப்பது பாரியதோர் திருப்பமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

இலங்கையில் தொடரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தக் கோரி தமிழ்த் திரை உலகினர் எதிர்வரும் 19 ஆம் திகதி பேரணியொன்றையும் பொதுக் கூட்டமொன்றையும் நடத்தவுள்ளனர். இதையொட்டி 18 ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மூன்று நாட்களுக் குள் படப்பிடிப்புக்கள் அனைத்தும் நிறுத்தப்படுமென்றும் அறிவிக்கப்படுள்ளது.

அத்துடன், தமிழ்த் திரை உலகைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினரும் எதிர்வரும் 18ஆம் திகதி சென்னையிலிருந்து தனி ரயில்களிலும் பஸ்களிலும் புறப்பட்டு இராமேஸ்வரம் செல்வதாகவும் 19 ஆம் திகதி இராமேஸ்வரத்தில் கண்டன ஊர்வலமும் பொதுக் கூட்டமும் நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் தமிழகக் கட்சிகள் காட்டி வரும் ஆர்வத்தையும், அக்கறையையும் எத்தரப்பினரும் குறைத்து மதிப்பிடக் கூடாது. கடந்த காலங்களில் இலங்கை தமிழர் தொடர்பில் தமிழகக் கட்சிகள் காட்டி வந்த ஆர்வம் காரணமாகவே தமிழக முன்னாள் முதல்வர் அமரர் எம்.ஜி.ஆர். மற்றும் முன்னாள் பிரதமர் அமரர் அன்னை இந்திராகாந்தி ஆகியோரின் கவனம் இலங்கை தமிழ் மக்கள் மீது செறிந்து போயிருந்தது.

இவ்வாறான பின்னணியில் இலங்கை விவகாரம் தமிழகத்தில் மீண்டும் எதிரொலிக்க தொடங்கியுள்ள நிலையில் அதனை சுமுகமாகத் தீர்ப்பதற்கு சகல தரப்பினரும் தம்மாலான பங்களிப்பைச் செய்வார்களேயானால் இலங்கையில் மீண்டும் அமைதி ஏற்படுவதுடன் மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை உருவாக்கக் கூடியதாக இருக்கும்.

தமிழக அரசியற் கட்சிகளைப் பொறுத்த மட்டில் எந்தவொரு விடயத்திலும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட போக்குகளைக் கொண்டிருந்தப் போதிலும், ஏதோ ஒரு வகையில் இலங்கை விவகாரத்தில் ஒரு மித்தப் போக்கு காணப்படுவது மிகவும் வரவேற்கத் தக்க விடயமாகும்.

அனைத்துத் தரப்பினரும் இலங்கை வாழ் தமிழ் மக்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும், தங்கள் பூர்வீக பிரதேசத்தில் வாழவேண்டும் என்ற குறிக்கோளுடனேயே இத்தகைய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அவர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுத்தால் அது அதிக வலுவுடையதாக இருக்கும் என்பதே பொதுவான அபிப்பிராயம். எனவே, அது குறித்து சற்றேனும் அக்கறை செலுத்துவது மிகவும் இன்றியமையாதது என்பதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

October 12, 2008

கருணா வீரகேசரி வாரவெளியீட்டுக்கு தொலைபேசியூடாக வழங்கிய செவ்வி

"ஜனாதிபதியிடம் எதனையும் உரிமையுடன் கேட்டுப் பெற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் நாம் இருக்கிறோம்"

னாதிபதியின் சகோதரர்களுடனும் நட்பு ரீதியான வலுவான உறவுள்ளது. இந்த நட்பினையும் எமது கிழக்கு அபிவிருத்திக்கான வாய்ப்புக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் (ரி.எம்.வி.பி.) அமைப்பின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) கொழும்பில் இருந்து வெளிவரும் முன்னணி தமிழ் நாளிதளான வீரகேசரியின் வாரவெளியீட்டுக்கு தொலைபேசியூடாக வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

[எம்.பி யாக சத்தியப்பிரமாணம் செய்த பிற்பாடு, ஜனாதிபதியுடன் கருணா]

திருநெல்வேலியில் பதின்மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டதற்காக ஐயாயிரத்துக் கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

ஜூலைக்கலவரம் உருவாகியது. சிங்கள மக்களிடம் அவ்வேளையில் இருந்த மனோ நிலையை அரசியல் தலைவர்கள் பயன்படுத்தின் கொண்டனர். அதே நேரத்தில் அனுராதபுரத்தில் தற்போது இருபத்தெட்டுப்பேர் கொல்லபட்டனர். எதுவும் நடைபெறவில்லை.

சிங்கள மக்கள் அன்றிருந்த மனோநிலை வேறு இன்றுள்ள மனோநிலை வேறு. என்று குறிப்பிட்ட அவர் அரசியலில் முஸ்லிம் களைப்பின்பற்றிப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. அவர்கள் அபிவிருத்தியை நோக்கியே செயற்பட்டார்கள். அவர்கள் ஏமாற்றப்படவும் இல்லை. ஏமாற்றப்பட் டதாகவும் சொல்லவுமில்லை. அவர்கள் பயப்படவும் இல்லை. சிறுபான்மை இனக் கட்சிகள் அரசுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே அபிவிருத்திகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமான், அஷ்ரப் போன்றவர்களின் அரசியல் இவ்வாறே அமைந்திருந்ததாகவும் கருணா செவ்வியில் தெரிவித்துள்ளார்.

கருணா வீரகேசரி வார இதழுக்கு வழங்கிய செவ்வியின் முழுவிபரம் வருமாறு:

கே. மாகாண சபையின் ஊடாக தமிழர்களின் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யமுடியுமா? ஏனைய மாகாண சபைகளில் உள்ளோர் அதிகாரங்கள் போதாது எனக் கூறிவருகையில் அரசாங்கம் அதிகாரப்பரவலõக்கத்திற்குத் தயாராக உள்ளதா?.

ப. இதிலொரு சிறப்பியல்புள்ளது. ஏனைய மாகாணங்களைப் பொறுத்தவரையில் அதிகாரங்கள் போதாது. ஆனால் எமது பிரதேசம் அவ்வாறல்ல யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசம் என்ற வகையில் அதிகமான அரசார்பற்ற நிறுவங்களின் வளங்கள் ஒதுக்கப்படுகிறது. மற்றையவைகளுக்கு இந்த வளம் இல்லை. இது ஏனைய மாகாணங்களுக்குப் பிரச்சினையாக இருக்கும். ஆனால் எமது பிர ÷தசத்தினை சர்வதேசங்களின் உதவிகளுடன் அபிவிருத்தி செய்யமுடியும்.

அதே நேரத்தில் காலப்போக்கில் அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுத்து நிதிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. அது சம்பந்தமாக ஜனாதிபதியிடம் பேசியுள்ளேன். அதனை அவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

கே. என்ன அடிப்படையில் அல்லது உடன் ல் பாட்டில் அரச தரப்பு எம்.பி.யாக இணைந்துள்ளீர்கள்.?

ப. எங்களுக்கும் அரசாங்கத்திற்குமிடையில் எந்த விதமான உடன்பாடும் இல்லை. ரி.எம்.வி.பி. கட்சி என்பது ஏற்கனவே அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்துதான் இயங்கும் என கூறியிருக்கிறோம். அதற்கமைய இணைந்துள்ளோம். ஒரு சிறுபான்மைக்கட்சி என்ற வகையில் மத்திய அரசில் ஆளும் தரப்புடன் இணைந்து இயங்க வேண்டும் என்பது எமது கொள்கையும் கூட. அப்போதுதான் அதிகமான அபிவிருத்திகளைச் செய்யக் கூடியதாக இருக்கும். இதில் தொண்டமான் மற்றும் அஷ்ரப் ஆகியோரை நாம் பார்க்கலாம். அவர்கள் இவ்வாறானதாகவே செயற்பட்டு வந்தனர்.

நாம் இழந்த 22 வருட இடைவெளியை நிரப்ப வேண்டிய தேவை எமக்கிருக்கிறது. பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் எமக்கிருந்தாலும் அபிவிருத்தி செய்யக்கூடியதாகவோ அல்லது தேவைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவோ இருக்கவில்லை. அதனை குறை நிரப்புச் செய்யவேண்டிய கட்டாயம் இருக்கிறது.

வாய்ப்பேச்சு அரசியல் இப்போது செயற்பாட் டிற்குப் பொருந்தாது. அதனால் செயற்பாட்டு அரசியலை நடத்துவதற்காகவே மத்திய அரசுடன் கூட்டுச் சேர்ந்து இயங்குதல் என்பதை கொள்கையாகவே வைத்துள்ளோம். தமிழ் எம்.பி.க்கள் 22பேர் இருந்தும் எமது பிரதேசங்களை சரியாக அபிவிருத்தி செய்ய முடிய வில்லை. அதனைக் கேட்பாரும் இல்லை, பார்ப்பாரும் இல்லை. அதற்காக அவர்களை நாம் குற்றம் சொல்லவும் முடியாது.

அவர்கள் சரியான முறையில் செயற்பட்டிருந்தால் எவ்வளவோ விடயங்களைப் பெற்றுக் கொண்டி ருக்க முடியும்.

கே. கிழக்கு மாகாணம் ஏற்கனவே பின்தங்கிய மாகாணமாக உள்ளது. போர் காரணமாக மேலும் பின்தங்கிய நிலையில் உள்ளது.

இந்தப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கு எத்தகைய திட்டங்களை அரசு முன்வைத்துள்ளது.

அதற்கான நிதி நிலைமை எவ்வாறுள்ளது.?

ப. அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் கூட கிழக்கின் அபிவிருத்தி குறித்து முக்கியப்படுத்தி பேசியிருக்கிறோம். மீட்கப்பட்ட பிரதேசத்தை ஒரு முன்மாதிரியாகச் செய்ய வேண்டிய தேவையும் உள்ளது. தமிழ் மக்க ளுக்கு அரசின் செயற்பாட்டை திறம்பட தெளிவுபடுத்த வேண்டியும் உள்ளது. அதனை ஜனாதிபதி உணர்ந்திருக்கிறார். இதில் ஒரு விடயம் உள்ளது. 22 வருட காலமாக யுத்தம் நடை பெற்ற பிரதேசம் ஓரளவுக்கு மீட்கப்பட்டு தேர்தல் நடைபெற்று ஐந்து அல்லது ஆறு மாதங்களில் பெரிய மாற்றங்கள் வரும் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது. ஆனால் அதற் கான அத்திவாரங்கள் போடப்பட்டு நடவடிக் கைகள் எடுக்கப்பட்டே வருகிறது. உதாரணத் திற்கு வாகரையில் மீன்பிடி அபிவி ருத்தி நல்லமுறையில் ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு தான் கட்டம் கட்டமாக அவை ஏற்படும்.

ஆனால் அதற்கான அழுத்தங்கள் உள்ளன.

நாங்களும் அழுத்தம் கொடுக்கவுள்ளோம்.

உரிமையுடன் ஜனாதிபதியிடம் கேட்டுப் பெறவேண்டிய தேவை உள்ளது. அந்த அள விற்கு நெருக்கமும் உள்ளது.

கே: அந்தவகையில் அரசாங்கம் கிழக்கை அபிவிருத்தி செய்யும் என்ற நம்பிக்கை உங்களுக்குள்ளதா?

ப. நிச்சயமாக எமக்கு நம்பிக்கையுள்ளது.

அபிவிருத்திக்கு எமக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு நல்கும்.

கே. கிழக்கு முழுமையாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் மீன்பிடித்தடை எதற்காக? தேடுதல்கள் எதற்காக.?

ப. மீன்பிடித்தடைகளை நீக்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். அண்மையில் கூட 15க்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் வந்துள்ளன. அவை வருவது பிரச்சினையல்ல தடைகளை நீக்குவதில்தான் பிரச்சினையிருக்கிறது. இப்போது மீன்பிடிப்பதற்கான அனுமதி இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்.

ஏற்கனவே ஓட்டமாவடி வாழைச்சேனை போன்ற பகுதிகளில் முஸ்லிம்கள் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏனைய பகுதிகளில் ஓரளவுக்கு அவற்றை நீக்கிக் கொண்டு போகலாம். மற்றையது கிழக்கு கட்டுப்பாட்டிலுள்ளது என்றில்லை. அத்துடன் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் பிரச்சி னைகளில்லையென்று இல்லை. வடக்குப்பிர தேசம் இழந்து கொண்டு வருகையில் எல்லா இடங்களிலும் தாக்குதல்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. இவற்றினைக் கட்டுப் படுத்தவதற்கு தேடுதல்கள் நடைபெறுகின் றன. இது ஒரு பிரச்சினையாக இருந்தது.

மட்டக்களப்பின் புத்திஜீவிகளை அழைத்து ஜனாதிபதியுடன் இது குறித்துப் பேசுவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தேன். அவர்கள் ஜனாதிபதியுடன் உரிமையுடன் பேசினார்கள்.

அவரும் அதற்குரிய விளக்கங்களை கொடுத்தார். உரிமையுடன் கேட்டு பேசிக் கொண்டார்கள். இவ்வாறான விடயங்கள் விளக்கங்களுடன் உரிமைகளுடன் இருந்தால் காலப்போக்கில் பிரச்சினைகள் இல்லாமல் போகும்.

கே. நீங்கள் விரைவில் அமைச்சராகப் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. அப்படியானால் எந்த அமைச்சைப் ந் பொறுப்பேற்கவுள்ளீர்கள்.?

ப. நாங்கள் அமைச்சுப்பதவி பற்றி இதுவரை பேசவில்லை. எங்களது மக்களைப் பொறுத்தவரை அபிவிருத்தி பற்றியே எங்களது மக்களும் எதிர்பார்க்கிறார்கள். காலப்போக்கில் அமைச்சுப்பதவி பற்றிப் பேசுவதற்கான வாய்ப்புள்ளது.

கே: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அண்மையில் சந்தித்தீர்கள். இச்சந்திப்பு புதிய அரசியல் கூட்டணி உருவாகவுள்ளதாக பேசப்படுகிறதே.?

ப. கூட்டணி சம்பந்தமாகப் பேசவில்லை.

இது ஒரு நட்பு ரீதியான சந்திப்பாகவே அமைந்திருந்தது. எங்களது நெருக்கங்களை அதிக?த்துக் கொள்ளவே இச்சந்திப்பு நடைபெற்றது. காலப்போக்கில் ஒரு கூட்டு அரசியல் கட்சியாக கூட்டுச் சேர்ந்து இயங்குவது பற்றி அவசரமாக முடிவெடுக்க முடியாது.

அதனை முடிவு செய்வதானால் மத்திய குழு, உயர் பீடம் பழைய உறுப்பினர்களுடன் கலந் தாலோசித்தே மேற்கொள்ளமுடியும். ஆனால் எல்லா அரசியல் கட்சிகளுடனும் நட்பு நல்லுறவைப் பேணுவதற்கு எதிர்பார்க்கிறோம்.

கே. உங்களது எதிர்கால அரசியல் செயற்பாடு எவ்வாறு அமையும்?

ப. இது குறித்து நாங்கள் ஏற்கனவே கூறியிருக்கிறோம். இரண்டு விடயங்களுக்காகவே பாராளுமன்ற உறுப்பினராக இணைந்துள்ளேன். ஒன்று எமது மக்களுக்கான அபிவிருத்திக்கு?ய களமாக பாராளுமன்றத்தினைப் பயன்படுத்த வேண்டும். அத்துடன சர்வதேசங்களுடன் நல்லமுறையில் இணைந்து அபிவிருதிக்கான வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும்?. இரண்டாவது எமது கட்சியை மீளமைப்புக்குட்படுத்தி அதன் செயற்பாட்டை பரவலாக்குவதற்கு?ய களமாகவும் பயன்படுத்தும் நோக்கம் உள்ளது.

கே.சிங்கள அரசுகள் தமிழர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்றுதான் நீங்கள் ஆயுதப் போராட்டத்தில் இணைந்தீர்கள் கிழக்கு மக்க ளுக்கு இவர்கள் ?லம் ஏதாவது செய்ய முடியும் என்று இன்று நம்புகிறீர்களா?

ப. கடந்தகாலத்தின் தவறுகளாலேயே இந்த யுத்தம் இவ்வாறு பூதாகரமாக வெடித்தது என்பதனை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். பெரும்பாலான அரசியல் தலைவர்கள் தங்களுடைய சுய லாபங்களுக்காக இனவாதத்தைத் வளர்த்தார்கள். இதற்குச் சின்னதொரு உதாரணம். திருநெல்வேலியில் பதின்மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டதற்காகத்தான் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். ஜூலைக் கலவரம் என்ற ஒன்று உருவானது. அந்த நேரத்தில் சிங்கள மக்களிடம் இருந்த மனோநிலைகளை அரசியல் தலைவர்கள் பயன்படுத்தினார்கள்.

அதே நேரத்தில் அனுராதபுரத்தில் ஜானக பெரேராவின் மீதான தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். அப்போது எதுவித உணர்ச்சிவசப்பாடுகளும் இடம்பெறவில்லை.

அன்றைக்கு அந்த மக்களுக்கிருந்த மனோநிலை வேறு இப்போதுள்ள மனோநிலை வேறு. இப்போது சிங்கள மக்கள் தமது இதயத்திலிருந்தே தமிழர்களுக்கு சகல உரிமைகளும் கொடுக்கப்பட வேண்டும் என முடிவெடுக்கிறார்கள். எல்லா இடங்களும் சமத்துவமாக இருக்க வேண்டும். என்றும் விரும்புகிறார்கள். ஆனால் தனிநாடு என்பதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

அதே நேரத்தில் இப்போதைய அரசாங்கமும் முற்போக்கான சிந்தனையுடன் உள்ளது. இது நமக்கொரு வாய்ப்பாக இருக்கும். அதே நேரத்தில் எமக்கு ஜனாதிபதியின் சகோதரர்களுடனும் நட்பு ரீதியான வலுவான உறவுள்ளது. அதனையும் எமது அபிவிருத்திகளுக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும். என்னைப் பொறுத்தவரையில் 22வருடகாலமாக சிதைந்து அழிந்துபோயுள்ள பொருளாதாரக்கட்டமைப்புகள், கல்வி, கலை கலாசாரம் மற்றும் சமூகக் கட்டுமானங்கள் அடங்கலான அனைத்தையும் வளர்த்தெடுக்க வேண்டும். அகதிவாழ்க்கை, இடம்பெயர்வுகள் போன்றவற்றால் சிதைந்து போயுள்ள எமது பிரதேசத்தின் அனைத்து விடயங்களையும் கட்டியெழுப்பிய பின்னரே மாகாண சபையின் பொலிஸ் அதிகாரமோ ஏனையவைகளõகவோ பேச இருக்கும்.

மீண்டும் மீண்டும் தேவையற்றவைகளைக் கேட்டு பிரச்சினைகளை வளர்ப்பது அவ்வளவுக்கு நல்லதல்ல. தென்பகுதிகளில் உள்ள மக்கள், மற்றும் அரசியல்வாதிகளின் மனங்கøளயும் வென்று கொண்டு நமது தேவைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. அதற்கு வீணான விதண்டாவாதமான கோரிக்கைகளை விடுப்பது நல்லதல்ல.

கே. கடந்த காலங்களில் தமிழ் தலைமைத்துவங்கள் சிங்களத் தலைமைத்துவங்களால் ஏமாற்றப்பட்ட வரலாறே உள்ளது. இந்நிலையில் நீங்கள் இப்போது வைத்துள்ள நம்பிக்கைக்குப் பாத்திரமாக இன்றைய அரசியல் தலைவர்கள் செயற்படுவார்களா?

ப. நிச்சயமாக ஒரு மாறுதல் இருக்கிறது. அரசிலும் அரசியல் தலைவர்களிட?ம் தென்பகுதி மக்களிடமும் உரிமைகளைக் கொடுக்க வேண்டும் என்ற மன மாறுதல் இருக்கிறது.

பொதுவாக உரிமைகள் என்பதற்குள் மாகாண சபைக்குரிய அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.

கே. கடந்த காலங்கள் போல் நீங்கள் ஏமாற்றப்பட்டால் உங்களது அடுத்த நடவடிக்கை என்ன.?

ப. எதையும் அரசியல் ரீதியாகக் குரல் கொடுத்துப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றே எதிர்பார்க்கின்றோம். இதில் முஸ்லிம்களைப் பின்பற்றிப் பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது. அவர்கள் என்ன செய்தார்கள் என்றால் இந்த 22 வருடகாலத்தில் கட்சி வேறாக இருந்தாலும் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பி அவர்களது அபிவிருத்தியை நோக்கியே செயற்பட்டனர். அவர்கள் ஏமாற்றப்பட்டதாகச் சொல்லவும் இல்லை. ஏமாற்றப்படவும் இல்லை. அவர்கள் பயப்படவும் இல்லை.

ஏனென்றால் மக்கள் சக்தியும் பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் உள்ளது. அதே போல் நாங்கள். கிழக்கு மாகாண மக்கள் அனைவரும் ரி.எம்.வி.பி.யின் கீழ் இருப்பார்களாக இருந்தால் வெற்றிகளைச் சம்பாதிக்கலாம்.

அது தவறுமாக இருந்தால் எதனையுமே பெற்றுக் கொள்ள முடியாத சூழல் உருவாகலாம்.

அதில் மாகாண சபைத் தேர்தலில் திருகோண மலைக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.

மாகாண சபை இயங்கினாலும் அந்த மாவட்டத்திற்காக உரிமைக் குரல் கொடுப்பதற்கு யாரும் இல்லை. அவர்கள் விட்ட தவறு இது.

எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் விடப்படக் கூடாது. ரி.எம்.வி.பி. கட்சிதான் என்றி ல்லை. எமது கட்சி தவறுவிடலாம். கருணா அம்மான் தலைவராக இருக்கலாம். அல்லது வேறு ஒருவர் தலைவராக இருக்கலாம். ரி.எம். வி.பி. கட்சியைப்பிடிக்காவிட்டால் வேறு ஒரு கட்சி. நாம் ஏதாவது ஒரு கட்சியில் பலமாக இருக்க வேண்டும். ஒருமித்து ஒரே கட்சிக்கே வாக்களித்து நமது பலத்தினை நாம் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இதனையே கிழக்கு மாகாண மக்களிடம் வேண்டு கோளாக விடுக்கிறேன். பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இருக்கும் போது வாதிடும் திறனும் இருக்கும் அப்போது வென்று கொண்டே போகலாம்.

கே. சர்வகட்சி மாநாட்டுக் குழுவில் எவ்வாறான தீர்வுத் திட்டத்தை முன்வைக்கவுள்ளீர்கள்?

ப. ஒரு மித்த இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான சரியான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எமது திட்டமாகும்.

கே.யுத்தத்தினால் கிழக்கில் பெருந்தொகையானோர் விதவைகளாகியுள்ளனர். அவர்களுக்கõன திட்டங்கள் ஏதாவது உள்ளதா? அத்துடன் யுத்தத்தினால் அண்மைக்காலம் வரை பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நஸ்ட ஈடுகள் வழங்கப்படவில்லை அதற்கு என்ன செய்யவுள்ளீர்கள்.?

ப. விதவைகள் என்று அவர்களைக் குறிப்பிடுவதை விடவும் பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவிகள் என்ற அடிப்படையில் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் பேசி தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல் பயிற்சிகளை வழங்குதல் போன்ற நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளேன். அதனூடாக கைத்தொழில் ஊக்குவிப்புகளை மேற்கொண்டு சந்தைப்படுத்தல் வரை செய்து முடிக்க எண்ணியுள்ளேன்.

எதிர்கõலத்தில் இதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. நஸ்ட ஈடு விடயத்தில் ஜனாதிபதி மற்றும் ஏனையவர்களுடனும் பேசி அவற்றினைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க எண்ணியுள்ளேன்.

கே. இடம்பெயர்ந்த மக்களது விடயத்தில் உங்களது நிலைப்பாடு என்ன? முக்கியமாக சம்பூர் மக்கள் தங்களது நிலங்களுக்குத் திரும்ப முடியாத நிலை உருவாகியுள்ளது இதற்குப் பரிகாரம் என்ன.?

ப. இடம்பெயர்ந்த மக்கள் கட்டாயமாக குடியமர்த்தப்படவேண்டும் என உறுதியாகக் கேட்டு வருகிறோம். மட்டக்களப்பை பொறுத்தவரை அதிகமானவர்கள் குடியமர்த்தப்பட்டு விட்டார்கள். படிப்படியாக குடியமார்த்தப்பட்டு வருகிறார்கள். தொப்பிகல பிரதேசத்தில் குடியமர்த்தல் நடைபெற்று வருகிறது.

சம்பூர் மக்கள் சம்பந்தமாக ஜனாதிபதி மற்றும் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்டோருடன் பேசியுள்ளேன். சம்பூரில் நான்கு கிராம சேவையாளர் பி?வுகளை அனல் மின் நிலையத்திற்காக எடுக்கிறார்கள். அவர்களுக்கு நல்லவிதமான மாற்றீடான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மற்றைய பிரதேசங்களில் மக்கள் குடியமர்த்தப்படுகிறார்கள். இந்ந நடவடிக்கைகளை ஆளுநருடன் பேசிய போது மிக விரைவாக இந்த மக்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு கொடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர் ஆவன செய்வதாக உறுதியளித்திருக்கிறார். இந்த மக்களின் பிரச்சினைகளை மிக விரைவில் தீர்த்து வைப்பதற்கு நானும் தொடர்ந்தும் செயற்படுவேன்.

கே. சர்வதேச மன்னிப்புச் சபை உங்களுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைப் பாராளுமன்றம் கொண்டு வர வேண்டும் எனக் கோரியிருக்கிறது. இது குறித்து உங்களது கருத்து என்ன.?

ப. இது தேவையற்ற கோரிக்கையாகும்.

அந்த அமைப்புக்குள் இருக்கும் எங்களுக்கெதிரான அரசியல் தீய சக்திகளின் விளையாட்டாகவே இது இருக்கிறது. ஏனென்றால் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குப் போய் நான் எதுவித குற்றச்சாட்டும் இல்லாது விடுவிக்கப்பட்டு வந்துள்ளேன்.

அப்போது இவர்களது குற்றச்சாட்டுக்கள் குறித்தும் ஆராய்ந்தவர்கள். இங்கு நடக்கின்ற பிரச்சினைகளுக்கும் எங்களுக்கும் எது வித தொடர்பும் இல்லை. அந்தவகையில் இது சர்வதேச மன்னிப்புச் சபையின் ஒரு தேவையற்ற குற்றச்சாட்டாகும். நாங்கள் யுத்தம் செய்யவும் இல்லை.

நாங்கள் படைக்கு ஆட்கள் சேர்பதும் சிறுவர்களைச் சேர்ப்பது என்று கூறுவது என்பதெல்லாம் தேவையற்ற குற்றச்சாட்டாகும்.

October 11, 2008

"தமிழகம் அணி திரண்டுள்ளமை ஆறுதல்தரும் விடயமாகும்"

"தமிழர்கள் நாதியற்றவர்கள் அல்ல, அவர்களுக்காகக் குரல் கொடுக்க நாம் இருக்கின்றோம் என்று தமிழகம் அணி திரண்டுள்ளமை ஆறுதல்தரும் விடயமாகும்," என கொழும்பில் இருந்து வெளிவரும் முன்னணி தமிழ் நாளிதளான வீரகேசரி, அதன் ஒக்ரோபர் 12 ம் திகதி வார வெளியீட்டின் ஆசிரியத் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

"தமிழகத்தின் எழுச்சி" என்ற தலைப்பில் வெளி வந்துள்ள ஆசிரியத் தலையங்கம், முழுவதுமாக:

நீண்ட நாட்களுக்குப் பின் தமிழகம் தனது மௌனத்தைக் கலைத்துள்ளது. போரின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழ் மக்களுக்காக தமிழக மண்ணில் இருந்து மீண்டும் உரத்துக் குரல்கள் எழும்பத் தொடங்கிவிட்டன.

இந்தக் குரல்கள் தமிழகத் தலைவர்களை இலங்கைத் தமிழர் குறித்து வெளிப்படையான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வைத்துள்ளது. தமிழகக் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி வருகின்றன.

அரசியல் சார்ந்த சக்திகள் ஒருபுறமும் மறுபுறம் திராவிடர் கழகம் மற்றும் படைப்பாளிகள் முன்னணி, திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் என அரசியல் சார்பற்ற அமைப்புக்களும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளன.

உண்மையில் ஈழத் தமிழர்களுக்காக தமிழகம் ஓரணியில் திரள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காரணகர்த்தாவாக இருந்துள்ளது.

வழமையாக பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க என்பன ஆதரவாகக் குரல் கொடுத்து வந்துள்ளன. தற்போது இந்த அணிகளுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்துள்ளதானது இலங்கை விவகாரம் தமிழகத்தில் புதிய திருப்பத்திற்கு வழிவகுத்துள்ளது.

இலங்கை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், தமிழர்களின் சுய உரிமைப் போராட்டத்திற்கு எங்கள் ஆதரவு, ஒத்துழைப்பு, நல்லெண்ணம் என்றைக்கும் மாறாதது. இலங்கை கடற்படையினால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். உள்நாட்டு சண்டை என்ற பெயரில் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் கருணாநிதி சிறிதும் அக்கறையின்றி இருக்கிறாரே.

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் என்னுடைய நிலைப்பாடும் அ.தி.மு.க. வின் நிலைப்பாடும் எல்லோருக்கும் நன்கு தெரிந்ததே.

1. இலங்கையின் மற்ற குடிமக்களைப் போல தமிழர்களும் சம உரிமையுள்ள குடி மக்கள். அவர்கள் யாருக்கும் இரண்டாந்தரமானவர்கள் அல்ல.

2. சட்டத்தின் முன் சமத்துவம் வேண்டியும், கல்வியில், வேலை வாய்ப்பில் சமத்துவம் பெறவும், இலங்கைத் தமிழர்கள் நடத்தும் நெடிய போராட் டத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.

3. சுய நிர்ணய உரிமை வேண்டி அவர்கள் நடத்தும் தார்மீக போராட்டத்தை நாங்கள் முழுமையாக அங்கீகரிக்கிறோம்.

4. இலங்கையில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தமிழர்கள் தங்களுக்கென சுயாட்சி உரிமையுள்ள தமிழ்த் தாயகம் உருவாக்கிக் கொள்ள அவர்களுக்கு இருக்கும் வேட்கையை நாங்கள் புரிந்து ஏற்றுக் கொள்கிறோம்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இரு வேறு பக்கங்கள் உள்ளன என்பதை தெளிவுற உணர வேண்டும். சுய நிர்ணய உரிமைக்கென்ற தமிழர்களின் போராட்டம் என்பது ஒருபுறம். ஆயுதம் ஏந்தியவர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடுவது என்பது மறுபுறம். முதலாவதை ஆதரிக்கிறோம். இரண்டாவதை கடுமையாக எதிர்க்கிறோம்.

மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கை, இலங்கைத் தமிழர்கள் நலன்காக்க கருணாநிதி பயன்படுத்த வேண்டும்; பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதியுடன் பேசி, தமிழர்கள் மீதான இனப்படுகொலை குறித்த இந்தியாவின் கவலையைத் தெரிவித்து, அதனை நிறுத்துமாறு வலியுறுத்த வேண்டும் என்று கருணாநிதி பிரதமரை கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில் ஈழத் தமிழர்கள் படுகொலைக்கும் கொடூரச் செயல்கள் அனைத்திற்கும் கூட்டாளியாக இந்திய அரசு செயற்படுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்ததையும் இங்கு குறிப்பிடுதல் பொருந்தும்.

தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மட்டுமல்ல, எந்தப் பிரச்சினையிலும் தமிழக அரசு தூங்கியதில்லை என்று கூறியுள்ளதுடன் தமிழக மக்களை மத்திய அரசுக்குத் தந்திகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டதுடன் வரும் 14 ஆம் திகதி ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக முதல்வரைப் பொறுத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஈழத் தமிழர் பிரச்சினையில் உறுதியான முடிவை எடுக்கின்ற வல்லமையைக் கொண்டவராக இன்றும் உள்ளார். எனினும் இதுவரை ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்திய மத்திய அரசின் நிலைப்பாடே தனது நிலைப்பாடுமாகும் என்று கூறி வந்ததை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அந்த ஒரு நிலையில் இருந்த தமிழக முதல்வரின் மனமாற்றத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்பாடு காரணமாக அமைந்து விட்டது.

தமிழகத்தில் இன்று எழுந்துள்ள எழுச்சி இந்திய மத்திய அரசை மாத்திரமல்ல, இலங்கை அரசையும் சற்று சிந்திக்க வைத்துள்ளது.

ஒட்டுமொத்த தமிழினத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள போர் அனர்த்தம், அழிவுகள், உயிரிழப்புகள் அனைத்தையும் சர்வதேச சமூகமும் கைகட்டிக் கொண்டு மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தது.

தமிழர்கள் நாதியற்றவர்கள் அல்ல, அவர்களுக்காகக் குரல் கொடுக்க நாம் இருக்கின்றோம் என்று தமிழகம் அணி திரண்டுள்ளமை ஆறுதல்தரும் விடயமாகும்.

தமிழகத்தின் இந்த எழுச்சி தமிழர்களுக்கு நீதி, நியாயம் கிடைக்கும்வரை ஒலிக்க வேண்டுமென்பதே இலங்கையில் மாத்திரமல்ல, உலகத் தமிழர்கள் அனைவரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

[படத்தில் - "கேசரிக்கு" மட்டக்களப்பில் வீதியோர விளம்பரம்]

October 10, 2008

நேரு பாதையிலிருந்து விலகிய மன்மோகன்

பழ. நெடுமாறன்

1938-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ம் தேதி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரி ஸில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஸ்பெயினில் ஜனநாயகத்தை அழித்து சர்வா திகார ஆட்சியை நிறுவியிருந்த பிராங்கோ வைக் கண்டித்தும், சீனாவின் மீது படையெ டுத்து ஜப்பானிய ராணுவம் செய்துவரும் அட்டூழியங்களைக் கண்டித்தும் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஸ்பானியப் போராட்டத் தலைவர்களில் ஒருவரான வாபாசி லோனாரா என்பவரும் ஜவாஹர்லால் நேருவும் கலந்துகொண்டு பேசினார்கள்.

[இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு]

ஐரோப்பாவில் ஹிட்லர், முசோலினி ஆகி யோர் தலைமையில் பாசிசம் படர்ந்து கொண்டிருந்த வேளை. அவர்களைப் பின் பற்றி ஸ்பெயின் நாட்டிலும் பிராங்கோ பாசிச சர்வாதிகார ஆட்சியை நிறுவியதற்கு எதிராக ஜனநாயக உணர்வு படைத்தவர்கள் போராடினார்கள். ஐரோப்பா முழுவதுமிருந்த ஜனநாயகவாதிகள் இப்போராட்டத் திற்கு ஆதரவாகத் திரண்டார்கள். பிரிட்ட னில் படித்துக் கொண்டிருந்த இந்திய மாணவர்கள் பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளத் தொண்டர்களாகத் தங்களைப் பதிவு செய்து கொண்டார்கள். ஜவாஹர்லால் நேருவின் மருமகனும் இந்திராவின் கணவருமான பெரோஸ் காந்தியும் அவர்க ளில் ஒருவராவார்.

ஸ்பெயின் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக நடைபெற்ற இப்போ ராட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் சார் பில் ஆதரவை அளிப்பதற்காக நேரு இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

பாரிஸிலிருந்து வெளிவந்த ரூடி பிராவோ எனும் பத்திரிகைக்கு ஸ்பெயின் போராட்டம் பற்றி உணர்ச்சிகரமான ஒரு நேர்காணலை நேரு அளித்தார்.

ஸ்பெயின் நாட்டு எல்லைக்குச் சென்று அங்கு முகாமிட்டிருந்த போராட்ட வீரர்களை நேரில் சந்தித்து ஊக்குவித்தார்.

ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நவம்பர் 17-ம் தேதி இந்தியா திரும் பிய நேருவுக்கு மும்பையில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஸ்பெயின் நாட்டில் நடை பெறும் உள்நாட்டுப் போரின் விளைவாக அம்மக்கள் உணவு, மருந்து இல்லாமல் படும் துயரம் குறித்து அக்கூட்டத்தில் நேரு உருக்க மாகப் பேசினார். அம்மக்களுக்குத் தேவை யான உணவுப் பொருள்களையும் மருந்துப் பொருள்களையும் திரட்டி அனுப்பி வைக் கும்படி மும்பை வணிகர்களை வேண்டிக் கொண்டார். அதற்கிணங்க உணவுப்பொ ருள்களும் மருந்துப் பொருள்களும் ஒரு கப் பல் நிறைய இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது
1939-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி சீனா சென்ற நேரு 13 நாள்கள் அங்கு சுற்றுப்பய ணம் செய்தார். ஜப்பானியர் படையெடுப் பின் விளைவாக சீரழிந்து கிடந்த சீன மக்களின் துயரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அங்கிருந்து திரும்பியவுடன் காங்கிரஸ் தலைவராக இருந்த சுபாஷ் சந்திரபோசைச் சந்தித்து சீன மக்களின் துயரங்களை விளக்கினார். உடனடியாக காங்கிரஸ் சார்பில் மருத்துவ உதவிக்குழு ஒன்றினை அனுப்பி வைப்ப தென முடிவு செய்யப்பட்டு டாக்டர் கோட் னீஸ் தலைமையில் குழு ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்த காலக் கட்டத்தில்கூட பாதிக்கப்பட்ட மக்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தா லும் ஓடோடிச் சென்று அவர்களுக்கு உதவுவதை அன்றைய காங்கிரஸ் கட்சி செய்தது. ஸ்பெயினுக்கும் சீனா வுக்கும் காங்கிரஸ் கட்சி செய்ய முன் வந்த மனித நேய உதவிகளை அன் றைய பிரிட்டீஷ் அரசே தடுக்க வில்லை.

ஆனால் இன்று என்ன நடக்கி றது? காங்கிரஸ் கட்சி பாரம்பரி யத்திற்கு இழுக்கு நேரும் வகை யில் அண்டை நாடான இலங்கையில் தமிழர்கள் சிங்கள இனவெறியரால் கொன்று குவிக் கப்படுவதைப் பார்த்தும் பாராமுகமாக இருக்கிறது. பசியும் பட்டினியுமாகக் கிடக்கும் ஈழத் தமிழர்களுக்கு உதவ வேண்டிய இந்தியா அவர்களை அழிப்பதற்கு சிங்கள அரசுக்கு ஆயுத உதவியும் ஆள் உதவியும் செய்கி றது. இந்திய ராணுவத்தின் துணைத் தலை மைத் தளபதியே இதை உறுதி செய்திருக்கி றார்.

இலங்கையில் நடைபெற்று வரும் போரில் சிங்களப் படைக்கு உதவியாக இந்தியப் படை வீரர்கள் யாரும் அங்கு செல்லவில்லை என இந்திய ராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதியான மிலன் லலித் குமார் கூறியுள்ளார்.

மண்டபத்தில் ஹிந்து செய்தியாளருக்கு அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியதா வது:

இலங்கைக்கு இந்திய ராணுவ அதிகாரிகள் அவ்வப்போது செல்கிறார்கள். சிங்கள ராணு வத்திற்கு ஆலோசனைகள் வழங்கிவிட்டுத் திரும்பி விடுகிறார்கள். இலங்கையில் ராடார் சாதனங்களை இயக்கிய இரண்டு இந்திய ராணுவத் தொழில்நுட்ப வல்லுநர்கள் புலிக ளின் தாக்குதலில் படுகாயமடைந்திருப்பதாக கூறுவதில் உண்மை இல்லை. காயமடைந்த வர்கள் ஒருவேளை சிவிலியன்களாக இருக்கக்கூடும் என்று கூறியுள்ளார்.

இந்திய ராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதியாக இருக்கும் ஒருவருக்கு இந்திய அரசியல் சட்டம் குறித்தும் உலக நாடுகளின் சட்டங்கள் குறித்தும் நன்கு தெரிந்திருக்க வேண் டும். வெளிநாடொன்றில் நடைபெறும் போரில் இந்தியாவின் குடிமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் அதற்கான அனுமதியை இந்திய அரசிடம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் அவர்கள் சென்றிருப்பார்களேயானால் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராடார் சாதனங்களை இயக்கியவர்கள் இந்திய ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். அவர்கள் சிவிலியன்கள். அவர்களாகவே சென்றிருக்கிறார்கள் என்பது உண்மையானால் இந்திய அரசு அவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கப்போவதுமில்லை என்பதும் உண்மையானால் அதே உரிமை தமிழர்களுக்கும் உண்டு.

இலங்கையில் கொன்று குவிக்கப்படும் தமிழர்களைப் பாதுகாக்க, தமிழ்நாட் டைச் சேர்ந்த தமிழர்கள் செல்வதை யும் இந்திய அரசு தடுக்க முடியாது.

இந்திய ராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதியின் கூற்று இதற் குத்தான் தமிழர்களைத் தூண்டுகி றது.

கடந்த 30 ஆண்டு காலத்தில் இலங்கையில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல் லப்பட்டிருக்கிறார்கள். சுமார் பத்து லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ வழியின்றி இந்தியா உள்பட உலக நாடுகளில் அகதிகளாக அடைக்கலம் புகுந்துள்ளனர்.

ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து உண்ண உணவோ உறைவிட வசதிகளோ இல்லாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவ தமிழ் நாட்டு மக்கள் திரட்டிய உணவு, மருந்துப் பொருள்களை செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் அனுப்பி வைக்க அனுமதி தரக்கூட இந்திய அரசு மறுக்கிறது. தமிழக அரசும் வாய்மூடி மௌனம் சாதிக்கிறது.

இந்தியாவிலுள்ள வேறு எந்த மொழி பேசும் தேசிய இனமும் இப்படியோர் அவல நிலையை இதுவரை சந்தித்தது இல்லை. வங் காளி, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி மற்றும் இந்தி மொழி பேசுகிற இனத்து மக்கள் வேறு எந்த நாட்டிலாவது வாழ்ந்து இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாக நேர்ந்தால் அதைப் பார்த்துக்கொண்டு மேற்கண்ட மொழி பேசும் இன மக்கள் சும்மா இருந்திருப் பார்களா? இந்திய அரசுக்கு எதிராகக் கொதித்தெழுந்து போராடி இருப்பார்கள்.

சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதம ரான நேரு எந்த நாட்டுடனும் ராணுவ உடன் பாடு செய்து கொள்ள மறுத்தார். அமெரிக்க வல்லரசு, நேட்டோ, சீட்டோ என பல்வேறு நாடுகளை ராணுவ ரீதியான கூட்டு உடன் பாடு நாடுகளாக உருவாக்கி சோவியத் ஒன்றி யத்திற்கு எதிராக அணி திரட்டியது. அதைப் போல சோவியத் ஒன்றியமும் தங்களின் தற் காப்புக்காக வார்சா உடன்பாடு நாடுகளின் அணியை உருவாக்கிற்று.

ஆனால் நேரு இந்த ராணுவ கூட்டுகளைக் கண்டித்தார். அதுமட்டுமல்ல, புதிதாக விடு தலை பெற்ற ஆசிய ஆப்பிரிக்க நாடுகளை ஒன்றிணைந்து அணிசாரா நாடுகளின் குழு ஒன்றினை உருவாக்கினார். அவருடைய இந்த தொலைநோக்குப் பார்வையின் விளை வாக மூன்றாம் உலகப் போர் மூளுவது தடுக் கப்பட்டது.

ஆனால் நேருவின் வழி வந்ததாகத் தன் னைக் கூறிக்கொள்ளும் மன்மோகன் சிங் அரசு, இலங்கையில் தமிழர்களை இனப்படு கொலைக்கு உள்ளாக்கி வரும் சிங்கள அர சுக்கு ஆயுதங்களை அள்ளித் தருகிறது.

அன்பு நெறியைப் போதித்த மகாவீரரும், புத்தரும், காந்தியடிகளும் பிறந்த மண்ணிலி ருந்து ஆயுதங்கள் இலங்கைக்கு அனுப்பப்படு கின்றன. அந்த ஆயுதங்களின் துணை கொண்டு ஈழத்தமிழர்களை மட்டுமல்ல தமிழ்நாட்டு மீனவர்களையும் சிங்கள வெறி யர்கள் கொலை செய்கிறார்கள். நமது குடிமக் கள் நமது எல்லைக்குள்ளேயே படுகொலை செய்யப்படுவதைப் பார்த்த பின்பும் மன்மோ கன் அரசுக்கு பதைபதைப்பு வரவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிக ளும் தமிழர் அமைப்புகளும் கூட்டாகவும் தனியாகவும் போராட்டங்கள் நடத்திய பிறகு கூட மத்திய அரசு தன்னுடைய தவறைத் திருத்திக் கொள்ள முன்வரவில்லை.

காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியத்திற்கும் நேரு பெருமகனாரின் தொலைநோக்கு சிந்த னைக்கும் கொஞ்சமும் தொடர்பற்ற அரசாக மன்மோகன் சிங் அரசு விளங்குகிறது. நேரு வின் காலத்தில் சூயஸ் கால்வாய்ப் பிரச்னை யில் பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் கைகோர்த்து எகிப்துக்கு எதிராகக் களம் இறங்கியபோது, இப்பிரச்னையில் உலக நாடுகளின் கருத்தைத் திரட்டுவதற்காக வி.கே. கிருஷ்ணமேனனை நேரு தனது தூது வராக அனுப்பினார்.

அதைப்போல, பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து சிங்கள அரசுடன் பேசுவதற்கு மூத்த ராஜதந்திரியான ஜி. பார்த்தசாரதியை அனுப்பினார்.

நேருவோ இந்திராவோ சர்வதேசப் பிரச்னைகளுக்கு ஒருபோதும் அதிகாரிகளை அனுப்பியதில்லை. ஆனால் மன்மோகன் சிங், எம்.கே. நாராயணன், சிவசங்கர் மேனன் போன்ற அதிகாரிகளை இலங்கைப் பிரச் னைக்குத் தீர்வு காண நம்பியிருக்கிறார். அவர் களைத்தான் அனுப்பி வைக்கிறார். ராஜதந் திர பார்வையும் தொலைநோக்கிச் சிந்தனை யும் அறவே இல்லாத அதிகாரிகள் இப்பிரச் னையை மேலும் சிக்கலாக்கிவிட்டார்கள்.

இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு உள் பட்ட இலங்கையில் எது நடந்தாலும் அது இந்தியாவையும் பாதிக்கும் என்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல் மன்மோகன் சிங் அரசு செயல்படுகிறது. இந்த அரசின் தவறான அணுகுமுறைகளின் விளைவாக ஈழத் தமிழர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக் கிறார்கள் என்பதோடு இந்தியாவுக்கு எதி ரான நாடுகள் இலங்கையில் காலூன்றி நிற் கும் அபாயம் உள்ளது. நேருவும் இந்திராவும் சர்வதேசப் பிரச்னைகளில் மிகவும் தேர்ந்த ராஜதந்திரிகளைத் தங்களுக்குத் துணையாகக் கொண்டிருந்தார்கள். அதன் காரணமாகத் தான் அணிசாரா நாடுகளின் தலைமை இந்தி யாவைத் தேடி வந்தது. ஆனால் இன்று சுற் றிச் சுற்றி வரும் செக்குமாடுகளைப்போல குறிப்பிட்ட சிந்தனை வளையத்திற்குள் சிக் கிக் கிடக்கும் அதிகாரிகள் தவறான ஆலோச னைகளை வழங்கி உலக அரங்கில் இந்தியா வின் மரியாதையைக் கெடுத்து விட்டார்கள்.

தமிழக மக்களின் கொதிப்புணர்வை இந் திய அரசுக்கு உணர்த்தி சரியான நடவடிக்கை எடுக்கும்படி தூண்ட வேண்டிய தமிழக முதல்வரும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக அமைச்சர்களும் ஒப்புக்காக ஏதோ பேசுகிறார்களே தவிர உண்மையில் தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யத் தவறிவிட் டார்கள்.

இவர்களின் இந்த மகத்தான தவறை வர லாறு பதிவு செய்துள்ளது. இன்றைய தலை முறையும் நாளைய தலைமுறையும் இவர் களை ஒருபோதும் மன்னிக்கப்போவ தில்லை.[நன்றி: தினமணி]


October 08, 2008

இந்த அரசு தேவைதானா ?

08 ஒக்ரோபர் 2008 - புதன்கிழமை, தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் தினமணி நாளேட்டின் ஆசிரியர் தலையங்கம்:

"பாவப்பட்ட ஜென்மங்கள்" என்கிற வார்த்தைப் பிரயோகத்துக்கு மிகவும் பொருத்தமானவர்கள் யார் என்று கேட்டால், இலங்கையில் வாழும் யாழ்ப்பாணத் தமிழர்கள்தான். காஸ்மீரப் பண்டிட்டுகளாவது அகதிகளாக அவர்களது உறைவிடத்திலிருந்து விரட்டப்பட்டு விட்டனர். ஆனால் இலங்கை வாழ் தமிழர்களுக்கு அதற்கும் வழியில்லாமல், அங்கேயே இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படுவதுதான் தலையெழுத்து போலிருக்கிறது.

அவர்களுக்குக் கொஞ்ச-நஞ்சம் பாதுகாப்பு அளித்து வந்த விடுதலைப் புலிகளும் பலமிழந்து விட்ட நிலைமை. ஆதரவுக்கரம் நீட்ட வேண்டிய இந்திய அரசு, அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய கவலையில் இலங்கை என்கிற அண்டை நாடு இருப்பதையே மறந்து போய்விட்டதாகத் தோன்றுகிறது.

சீதோஷ்ண நிலை மாற்றம், பொருளாதார நெருக்கடி போன்ற பிரச்னைகளில் மூழ்கி இருக்கும் சர்வதேச நாடுகளுக்கு இந்துமகா சமுத்திரத்தில் இருக்கும் சிறிய தீவான இலங்கையில் வசிக்கும் சிறுபான்மை மக்களான தமிழர்களைப் பற்றிக் கவலைப்பட நேரமில்லை.

தேயிலைத் தோட்டங்களில் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்யச் சென்ற இந்திய வம்சாவளித் தமிழர்களை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்த அறுபதுகளில் தொடங்கி, இப்போது எஞ்சி இருக்கும் தமிழர்களையும் அழித்து விடுவது என்கிற இலங்கை அரசின் இராணுவத் தாக்குதல் வரை, ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. அது, இந்தியா இந்தப் பிரச்சினையை சரியாக அணுகவில்லை என்பதுதான்!

இந்திரா காந்தி பிரதமராக இருந்தவரை, இலங்கை அரசு இந்தியா என்ன சொல்லுமோ, என்ன செய்யுமோ என்று பயந்தது. அதனால், தமிழர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையை சற்று கவனத்துடன் கையாள முற்பட்டது. ராஜீவ் காந்தியின் மரணத்துக்குப் பிறகு, யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு இந்தியாவின் ஆதரவு கிடையாது என்பதைப் புரிந்துகொண்டது முதல், இலங்கையின் சிங்கள அரசும், இராணுவமும் திட்டமிட்டுத் தமிழர்களை அழிப்பதிலும், தமிழர் வாழும் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றுவதிலும் முனைப்புடன் செயற்படத் தொடங்கின.

வசதி படைத்த யாழ்ப்பாணத் தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறி, ஐரோப்பா, அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் குடியேறி விட்டனர். அவர்களது வாரிசுகள் அந்தந்த நாடுகளில் படித்து, வளர்ந்து, தாய்நாடு பற்றிய சிந்தனையோ பற்றோ இல்லாதவர்களாக வளர்ந்துவிட்டனர். முந்தைய தலைமுறையினரும் சரி, போராளிகளுக்குப் பொருளுதவி அளித்து வந்ததுடன் தங்களது கடமை முடிந்தது என்று ஓய்ந்துவிட்டனர்.

இந்த நிலையில், இந்தியாவின் அக்கறையின்மையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, இலங்கைத் தீவிலிருந்து தமிழர்களை ஒட்டுமொத்தமாக அழித்துவிடுவது என்று இலங்கை அரசும் இராணுவமும் தீர்மானித்து விட்டதுபோலத் தோன்றுகிறது. கடந்த சில வாரங்களாக அங்கே இராணுவம் நடத்தும் தாக்குதல்கள் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரைக் குடித்திருக்கிறது. விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்துகிறோம் என்கிற பெயரில், அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து, இனப்படுகொலை நடத்தும் இலங்கை அரசைக் கேள்வி கேட்பார் இல்லாத நிலைமை.

பிஜித் தீவில் இந்தியர்கள் பிரச்சினை, வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் பிரச்சினை ஏன் உகாண்டா மற்றும் தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்குப் பிரச்சினை என்கிற போதெல்லாம் வெகுண்டெழுந்து செயற்படும் இந்திய அரசு, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மட்டும் மெத்தனப் போக்குடன் ஏன் செயற்படுகிறது என்கிற கேள்வியைத் தமிழர்கள் கேட்பதில் நியாயம் இல்லாமல் இல்லை.

முன்பெல்லாம், நம்மவர்கள் மத்திய ஆட்சியில் முக்கியப் பங்கு வகிக்காதபோது, நமக்கு அதனால்தான் மரியாதை இல்லையோ என்று நினைக்கத் தோன்றியது. கடந்த 18 ஆண்டுகளாக, மத்திய அரசின் அச்சாணியாக தமிழகத்தின் மாநிலக் கட்சிகள் செயற்பட்டும் அதே நிலைமை நீடிப்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

அதிகாரிகள் மட்டத்தில் பேசிப் பயனில்லை என்பதையும், பிரதமர் மன்மோகன் சிங்கே நேரடியாக இலங்கை அதிபருடன் பேசி, தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும், உரிமைக்கும் பாதுகாப்புத் தேடித் தர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் எழுப்புகின்ற குரல் தில்லியில் கேட்கிறதா என்பது தெரியவில்லை.

ஆனால், முதல்வர் கருணாநிதியே பிரதமரிடம் பேசியிருப்பதாகச் சொல்கிறார். அது ஓரளவுக்குப் பிரதமரை யோசிக்க வைத்திருக்கும் என்று நம்பலாம். "கவலை வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை நம்புங்கள்" என்று பிரதமர் நா தழுதழுக்கத் தன்னிடம் கூறியிருப்பதாகவும், பிரதமரின் வார்த்தைகள் தனக்கு நம்பிக்கை தருவதாகவும் கூறுகிறார் முதல்வர்.

மத்திய அரசு இலங்கைத் தூதரக அதிகாரி மூலம் விடுத்திருக்கும் எச்சரிக்கை மீறப்பட்டால், இந்த அரசு தேவைதானா என்ற கேள்விக்கு விடை காண வேண்டி வரும் என்று முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார். அது மத்திய அரசுக்கு மட்டுமல்ல, அவரது தலைமையிலான தமிழக அரசுக்கும் பொருந்தும் என்பதுதான் உண்மை!

October 07, 2008

இலங்கை தமிழர் விவகாரத்தையிட்டு இந்திய கட்சிகளுக்கு உண்மையான அக்கறையில்லை என்கிறார் சோ

மிழக - இந்திய அரசியல் கட்சிகளின் இலங்கை தமிழர் தொடர்பான நிலைப்பாடு வெறும் கண் துடைப்பு என்கிறார் சோ இராமஸ்வாமி.

பி.பி.சி. தமிழோசைக்கு பத்திரிகையாளர் சோ இராமஸ்வாமி ஒக்ரோபர் 7ம் திகதி வழங்கிய செவ்வியின் ஒலிப்பதிவு:

தென் கிழக்குப் பல்கலைக்கழகம்; ஆக்கிரமிக்கப்படும் கல்வியின் பூமி

முஸ்லிம் தேச அக்கறையாளர்கள் அறிக்கை

ல்கலைக்கழகமா? காவல் நிலையமா? பற்றி எரியும் தென் கிழக்குப் பல்கலைக் கழகம்; பல்கலைக்கழக்திற்குள் அரச பயங்கரவாதம்:

PDF பதிப்பில் முழுமையாக அறிக்கயை படிக்க: இங்கே அழுத்தவும்.


October 06, 2008

"இலங்கை தமிழர் பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காணும் என்று நம்புவோம்"

மத்திய அரசு தீர்வு காணும்!

லங்கை தமிழர் பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காணும் என்று நம்புவோம் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

இலங்கை தமிழர் பிரச்னைக்காக சென்னையில் திங்கள்கிழமை - 06 ஒக்ரோபர், திமுக நடத்திய பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவது குறித்து இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தொலைபே சியில் பேசினேன். இலங்கையில் இருந்து வரும் செய்திகள் எங்களை கலங்கடித்து வருகிறது என்று அங்கு நடந்து வரும் கொடுமைகளை அவரிடம் எடுத்துச் சொன்னேன் கவலை வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை நம்புங்கள் என்று நா தழுதழுக்க பிரதமர் என்னிடம் கூறினார். பிரதமரின் அந்த வார்த்தைகள் எனக்கு நம்பிக்கை தந்தது.

இளகிய மனம் படைத்த பிரதமரும், சோனியா காந்தியும் இலங்கைப் பிரச் னையில் தலையிட்டு தீர்வு காண்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அவர்கள் இரு வரும் நமக்கு வழிகாட்ட வேண்டும்.

அந்த வழி இந்தியாவைக் காப்பாற்று கின்ற வழியாக மட்டுமல்லாமல் இனப் படுகொலையை தடுக்கின்ற வழியாகவும் அமையும் இல்லையெனில் அடுத்து என்ன செய் வது என்பது குறித்து திமுக பொதுக்குழு கூடி முடிவெடுக்கும். இலங்கை தமிழர் பிரச்னையில் மத்திய அரசு ஒத்துழைக் கும் என்று நம்புவோம். இல்லையெனில் இலங்கை தமிழர்களோடு சேர்ந்து நாமும் சாவோம்.

[லங்கைப் பிரச்னை தொடர்பாக தி.மு.க. சார்பில் சென்னையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகிறார் அக் கட்சியின் தலைவரும், முதல்வருமான கருணாநிதி. உடன் (இடமிருந்து) நிதி அமைச்சர் க. அன்பழகன், மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின்.]

ஒருவேளை மத்திய அரசால் பிரச்னை யைத் தீர்க்க முடியாவிட்டால் தமிழர்களாகிய நம்மால் கைகட்டி உட்கார முடி யாது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் இந்திய அரசு தமிழர்களுக்கு துணை நிற்க வேண்டும் என்று பிரதமரை கேட்டு கொள்கிறேன்.

29-1-1956 சிதம்பரத்தில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் "தாய் தமிழகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்'' என்ற தீர்மானத்தை நான் (கருணாநிதி) முன்மொழிந்தேன். பொன்னம்பலனார் வழிமொழிந் தார். இன்றைய தீர்மானமும் அதுதான்.

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் என்று யாரும் எங்களைச் சொல்ல முடியாது. இலங்கைப் பிரச்னை தொடங்கிய காலம் முதலே எங் களது போர் முழக்கமும் தொடங்கி விட் டது பிரதமர் என்னிடம் பேசிய பிறகு தில்லி யில் உள்ள இலங்கை தூதரக அதிகா ரியை அழைத்து மத்திய அரசு எச்சரித் துள்ளது. இது மீறப்பட்டால் இந்த அரசு தேவைதானா? என்ற கேள்விக்கு விடை காண வேண்டி வரும் தனி ஈழம் பிறந்துதான் ஆக வேண்டுமா என்ற விவாதம் இப்போது நடந்து வருகிறது. பல நாடுகள் சமாதான முயற்சி யில் ஈடுபட்டும் இலங்கையில் அமைதி ஏற்படவில்லை.

ஒருவேளை தமிழனின் ரத்தம் முழுவ தும் இலங்கை மண்ணில் அபிஷேகம் செய்யப்பட்டால்தான் அமைதி ஏற்ப டுமோ என்னமோ தெரியவில்லை. தமிழர்களின் ரத்தம் அபிஷேகம் நடக்காமல் இலங்கையில் அமைதி பூ பூக்க வேண்டும் என்பதே எனது ஆசை.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளை கண்டு நான் தனிமையில் புலம்பிக் கொண்டிருந்தேன். இந்த ஒரு பிரச்னையிலாவது தமிழர்கள் அனைவ ரும் ஒன்றுபட வேண்டும். தமிழர்கள் அனைவரும் ஒரு முகமாக இருந்து பிரச் னைக்குத் தீர்வு காண்போம் என்றார் கரு ணாநிதி.

அமைச்சர்கள் க. அன்பழகன், ஆர்க் காடு வீராசாமி, மு.க. ஸ்டாலின், துரை முருகன், வீரபாண்டி ஆறுமுகம், க. பொன்முடி, பரிதி இளம்வழுதி, திமுக துணைப் பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன், மாநிலங்களவை உறுப்பி னர்கள் கவிஞர் கனிமொழி, திருச்சி என். சிவா, தென்சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ. அன்பழகன் உள்ளிட்டோர் விழாவில் பேசினார்கள். [நன்றி: தினமணி]


October 05, 2008

சங்க இலக்கியத்தில் மனித நேயம்

முனைவர் ந. முருகேசன்

னிதன் சக மனிதனை நேசிக்கிற-சக மனிதன் துன்பம் போக்கி வாழ்கின்ற மனித நேயத் துக்கும் அப்பால், உலகத்தில் உள்ள எல்லா உயிர் களிடமும் அன்பு காட்டுகின்ற-எல்லா உயிர்க ளின் துன்பம் போக்குகின்ற உன்னதமான வாழ்க்கை நெறியைச் சங்ககாலம் காட்டுகிறது.

பெரிய வள்ளல் என்று இன்றும் போற்றப்படு கின்ற பாரிவள்ளல் மனிதர்களிடம் மட்டுமா அன்பு காட்டினான்? அவனுடைய அன்பு, வாடிய முல்லைக் கொடியிடம் கூட சென்றதே! படரக் கொடியின்றி வாடிய முல்லைக் கொடி படர, தன் தேரையே நிறுத்திவிட்டு நடந்து வந்த பாரியின் மனம், சகல உயிர்களையும் நேசித்த உணர்வு மிக்கதல்லவா! வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரின் முன் னோடி பாரிதான்! பாரியைப் போலவே பெரிய வள்ளலாக, சங்க காலத்தில் வாழ்ந்தவன் பேகன். அவனும் புலவர் களையும் இரவலர்களையும் நேசித்ததோடு, அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டினான்.

மனிதனின் வாட்டத்ததைப் போக்கிய மன்னன் பேகன், குளிரால் வாடிய மயிலுக்கு உயர்ந்த போர்வையைப் போர்த்தினான். இவனும், எவ்வு யிரும் தம் உயிர் போல் எண்ணி இரங்கிய வட லூர் வள்ளலாரின் முன்னோடியே! குறுங்குடி மருதனார் என்ற சங்ககாலப் புலவர் பாடிய அகநானூற்றுப் பாடல் ஒன்று எண்ணத் தக்கது. தன்னைப் பிரிந்து சென்ற தலைவனை நினைத்து வாடும் தலைவியை நோக்கி, "கார்கா லம் வந்துவிட்டது; தலைவன் விரைவில் வந்து விடுவான்' என்று, பருவ காலத்தைச் சுட்டிக் காட்டி ஆற்றுவிக்கும் தோழி, தலைவனின் நல்ல மனதைக் கூறுவதில் சங்ககால மனித உணர்வைக் காணலாம்.

""பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்
உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்'' (அகநா-4)

பூத்த சோலையில் தம் துணையோடு தேனில் திளைத்து மகிழும் வண்டினங்கள், மணியொலி கேட்டு பயந்து, கலைந்து சென்று விடுமோ என்று கருணையோடு எண்ணி, தன் தேர் மணிக ளின் நாவை ஒலிக்காத வண்ணம் கட்டி, தேரைச் செலுத்துபவனாம் தலைவன். பலநாள் பிரிந்து கிடந்து, வாடும் தலைவியைக் காண விரைந்து வரும் வேளையிலும், வண்டினங்கள் மகிழ்வைச் சிதைத்துவிடக் கூடாதே என்று நினைத்த உள் ளம் சங்ககாலச் சமுதாயப் பண்பைப் பிரதிபலிப் பதாகும்.

எவ்வுயிர்க்கும் தன்னால் துன்பம் நேர்ந் துவிடக் கூடாது என்பதையும், எவ்வுயிரிடத்தும் அன்பு காட்ட வேண்டும் என்பதையும் குறுங்குடி மருதனார் இக் காட்சியின் மூலம் உணர்த்துகிறார்.

சீத்தலைச் சாத்தனார் பாடிய அகப்பாடல் ஒன் றும் நினைக்கத்தத்தது. காதலியைப் பிரிந்து சென்ற தலைவன், தன் பணி முடித்துக் குதிரை பூட்டிய தேரில் திரும்பும் போது, தன் பாகனுக்கு உரைத்ததில் காணப்படும் அன்புணர்ச்சி கற் றோர் நினைவை விட்டு அகலாதது.

""வாஅப் பாணி வயங்குதொழில் கலிமாத்
தாஅத் தாளிணை மெல்ல ஒதுங்க
இடமறந் தேமதி வலவ குவிமுகை
வாழை வான்பூ ஊழுறுபு உதிர்ந்த
ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு
கணைக்கால் அம்பிணைக் காமர் புணைநிலை
கடுமான் தேர்ஒலி கேட்பின்
நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே'' (அகநா-134)

காதலியை விரைவில் காண வேண்டும் என்று வரும் வழியில், ஆண்மானும் பெண்மானுமாய்க் கூடி மகிழ்ந்திருப்பதைக் கண்ட தலைவன், தேரொலி கேட்டு அவைகள் கலைந்துவிடும் என்று எண்ணி, குதிரையைச் சாட்டையால் அடித்து ஓட்டாது மெல்ல நடத்திச் செல்க என்று பாகனுக்கு உரைக்கிறானாம்.

மனித நேயத் தையும் தாண்டி அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டும் தலைவனின் உயர்ந்த நெறியைச் சங்க இலக்கியம் நமக்குக் காட்டுகிறது. [நன்றி: தினமணி]

சர்வதேச மருத்துவ நல அமைப்பு - 2008 செப்டம்பர் மாத செய்தி இதழ்

ர்வதேச மருத்துவ நல அமைப்பு - 2008 செப்டம்பர் மாத செய்தி இதழ் ~

2004 இல் ஆரம்பிக்கப்பட்ட இவ்வைமப்பின் செயற்பாடுகள் இவ்வளவு குறுகியகாலத்துக்குள் விரிவைடந்தைமக்கு உங்கைளப்போன்ற நல்லுள்ளங்கேள முற்று முழுதான நன்றிக்குரியவர்கள்! கீழே வழங்கப்பட்டுள்ள சிறிய குறிப்புகள் இவ்வைமப்பு இற்றைவரை போரினால் பாதிக்கப்பட்ட எம்மக்களுக்கும் மற்றும் பல்வேறு நாடுகளில் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வழங்கிய உதவிகளின் ஒரு பகுதியே!

முழுமையாக PDF இதழை படிக்க: இங்கே அழுத்தவும்