ஊற்று

காணொளி: திருக்கோணேஸ்வர ஆலய படக்கோவையுடன் டிசம்பர் 6 - குருபெயர்ச்சி பலன்கள்

குரு பகவான் 2008 டிசம்பர் 6 காலை 6மணிக்கு, தனுசுராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ந்து 2009 டிசம்பர் 8 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.

இதனையொட்டி ஆலயங்களில் விசேட பூசைகளும், அர்ச்சனைகளும் இடம்பெறும்.

ஞானத்தைத் தரும் குரு என்ற முறையில் குரு பெயர்ச்சி காலங்களில் தெட்சணாமூர்த்திக்கு பூஜை செய்யப்படுகிறது. குருபெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் விஷேடமாக தெட்சணாமூர்த்தியை தரிசிப்பர்.

[திருகோணமலை - திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் அருள் பாலிக்கும் தெட்சணாமூர்த்தி~படப்பிடிப்பு: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை~மேலும் படங்கள்]

இசைஞானி இளையராஜா வழங்கும் கோத்தும்பி பதிகம்-திருக்கோணேஸ்வர ஆலய படக்கோவையுடன்:

மாணிக்கவாசகர் இறைவனை நாயகனாகவும், குருவை சகியாகவும் உருவகித்துப் பாடியுள்ளார். நாயகனான இறைவன் மேல் தீராத பக்தி கொண்ட நாயகி சோலையில் பறந்து திரியும் இராச வண்டிடம், "நீ ரீங்காரம் செய்து பாடும் போது இறைவனுடைய தொன்மைக் கோலத்தையும், பெருமைகளையும் பாடு" எனக் கூறுவது போல் பாடப் பட்ட திருவாசகப் பாடலே கோத்தும்பி ஆகும்.

கோத்தும்பி என்றால் வண்டுகளுக்கெல்லாம் அரசனாக விளங்கும் இராச வண்டைக் குறிக்கும்.

கொழும்பிலிருந்து வெளிவரும் முதன்மை தமிழ் நாளிதழாகிய வீரகேசரி சோதிடப் பக்கம், பன்னிரு ராசிகளுக்குமான குரு பெயர்ச்சி பலன்களை வெளியிட்டுள்ளது. அதன் தொகுப்பு வருமாறு:

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம் நட்சத்திரங்கள்)

மேன்மையான நற்குணங்கள் அதிகம் கொண்டவர்கள் நீங்கள். படபடவென எதையும் முகத்திற்கு நேரே பேசி விடுவீர்கள். யாருக்காகவும் உங்களின் தார்மீக கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். எல்லா விடயங்களிலும் முதன்மையாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவீர்கள்.

அன்புக்கு என்றுமே வசமாகும் உங்களின் ராசிக்கு குரு பகவான் 06.12.08 அன்று ஜீவனஸ்தான 10 ஆம் இடம் அமைகின்றார். உங்களின் ராசிக்கு பாக்கிய, விரயஸ்தான ஆதி பத்தியம் பெறுகின்ற குரு பகவான் பத்தாம் இடம் அமைகின்றார். பொதுவாகவே பத்தாம் இடம் குருவிற்கு உகந்த இடமல்ல என்பது ஜோதிட கூற்று.

தொழில் நிலைகளிலே சற்று பிரச்சினைகள், தொழில் சார்ந்த இடமாற்றம், பதவி மாற்றம் போன்ற பலா பலன்கள் எதிர்பாராத வகையிலே அமையும் நிலைகள் உண்டு. கடந்த ஒரு வருட காலமாக உங்களுக்கு குருவின் சஞ்சாரம் பாக்கியஸ்தானம் அமைந்து எல்லாவிதமான சிறப்பு நிலைகளையும் கொடுத்தது. முக்கியமாக பண விடயங்களில் நல்லதொரு சேமிப்பு நிலை உருவாகியிருக்கும். அதற்கு மாறாக இந்தக் குருப்பெயர்ச்சி உங்களுக்கு பண விடயங்களில் சற்று இழுபறி நிலைகளைக் கொடுக்கும்.

எனவே, கொடுக்கல் வாங்கல் விடயங்களில் மிகவும் நிதானமாகவும் பொறுமையாகவும் நீங்கள் செயற்பட வேண்டும். வெளிநாட்டு பிரயாண ஆர்வம் உடையவர்களுக்கு எப்படியும் இந்தக் குருப் பெயர்ச்சி மூலமாக அனுகூலமான பலாபலன்கள் கிடைக்கும் நிலையுண்டு. பொதுவாகவே மற்றவர்களின் கஷ்டங்களில் கவலை கொள்ளும் மனமும் உதவி செய்கின்ற மனப் பக்குவமும் கொண்ட உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி தேவையற்ற வீண் அலைச்சல் நிலைகளை அதிகம் கொடுக்கும். எதிர்பாராத வகையில் பண விடயங்களில் தொழில் விடயங்களில், திடீர் வீழ்ச்சி நிலைகள் அமையும் பலன் உண்டு.

எனவே, மிகவும் நிதான செயல் வேண்டும். குடும்ப நிலையில் சிறு சிறு மனச் சஞ்சலம், செலவினங்கள் என்பன இடையிடையே ஏற்பட்டு மறையும். தொழில் வாய்ப்பை எதிர்கொள்வோருக்கு அனுகூல பலன்கள் அமையும். பெண்களுக்கு மன நிலை சஞ்சலம் அதிகமாக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலைகளில் சற்றுக் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.

உங்களின் ராசிக்கு சனி பகவானும் நான்காம் இடம் சஞ்சரிப்பது சற்று சுமாரான நிலைகளையே கொடுக்கும். எனவே, குருப்பெயர்ச்சி மூலமாக பெரும் நன்மைகளை எதிர்பார்க்க முடியாது. பிரதி வியாழக்கிழமை தோறும் குருவிற்கு கடலை மாலை அணிவித்து மஞ்சள் பூவினால் அர்ச்சனை செய்யவும். அத்தோடு உங்களின் அதிபதித் தெய்வம் அம்பாளுக்கும் அர்ச்சனை வழிபாடு செய்யவும். இதன் மூலமாக ஓரளவிற்கு அனுகூலமான பலன்கள் பெறலாம்.
___________________________________

ரிஷபம்: (கார்த்திகை 2 ஆம்,3ஆம், 4 ஆம் பாதம், ரோகிணி, மிருக சீரிடம் 1 ஆம் 2 ஆம் பாதம்)

இங்கிதமான பேச்சாற்றல் கொண்டு எவரையும் வசப்படுத்துகின்ற குண இயல்பும் எதையும் மனதிற்கு உள்ளே வைத்து சிந்திக்கின்ற நிலையும் கோபத்தை வெளிக்காட்டாது இடம், பொருள், ஏவல், பார்த்து செயற்படுகின்ற தன்மையும் தன் காரியத்திலே கண்ணும் கருத்துமாக இருக்கின்ற குண இயல்பும் கொண்ட உங்களின் ராசிக்கு 06.12.2008 அன்று குருபகவான், பாக்கியஸ்தானம் எனப்படுகின்ற ஒன்பதாம் இடம் அமைகின்றார். எல்லா வகையிலும் பாக்கியங்களை வாரி வழங்குவார் என்பதில் ஐயமில்லை எனலாம்.

உங்களின் ராசிக்கு அட்டம, லாபஸ்தான, ஆதிபத்தியம் பெறுகின்ற குருபகவான் பாக்கியஸ்தானமாகிய 9 ஆம் இடம் அமைவது தொழில் ரீதியிலே மிகவும் சிறப்பான நிலைகளைக் கொடுக்கும். தொழில் சார்ந்த பதவி உயர்வுகள் தொழில் நிலை வருமானங்கள் என்பன மிகவும் சிறப்பாக அமையும் நிலையுண்டு.

புதிய முயற்சிகளில் அனுகூலமான வெற்றிகள் ஏற்படும். சொத்துக்கள் சேரக்கூடிய பலா பலன்கள் உண்டு. குடும்பத்திலே சிறப்பான மகிழ்வும், சுப காரிய நிலைகளும் அமையக் கூடிய பலா பலன்கள் உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய பலா பலன்களை எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன்கள், பூரணமாக அமையக் கூடிய நிலை இருக்கும். கடன் பிரச்சினைகளில் இருந்து முழுமையாக நீங்கிவிடக் கூடிய பலன் உண்டு. பண வரவும், பண நிலுவையும் மிகவும் அனுகூலமானதாக அமையும் நிலையுண்டு.

லாட்டரி அதிர்ஷ்டங்களும் உங்களின் வீட்டுக் கதவை தட்டிப் பார்க்கின்ற நிலை உண்டு. எதிரிகளும் உங்களை தேடி வந்து பணிகின்ற நிலைகள் ஏற்படும். வெளிநாட்டுப் பயணங்களில் ஆர்வமாக உள்ளவர்களுக்கு அப்பலன் பூரணமாக சேரும் நிலையுண்டு. சென்ற ஆண்டு அட்டமஸ்தானமாகிய 8 ஆம் இடம் அமைந்த குருபகவான் பல வகையிலும் உங்களை ஆட்டிப் படைத்து விட்டிருப்பார். அதற்கெல்லாம் சேர்த்து இந்த ஆண்டு குருவின் பெயர்ச்சிப் பலன்கள் உங்களை மகிழ்ச்சிக் கடலிலே ஆழ்த்தும்.

மாணவர்களுக்கு கல்வி நிலையிலே சிறப்பான முன்னேற்றங்கள் அமைகின்ற நிலையுண்டு. குடும்பஸ்தர்களுக்கு எதிர்பாராத வகையிலே தலயாத்திரை, பயணங்கள் அமையும். சமூகத்திலே உயர்வும் கௌரவமும் ஏற்படுகின்ற நிலையுண்டு. தான, தர்மம் செய்யக்கூடிய வாய்ப்புகளும் அமையும். எனவே, எல்லா நிலைகளிலும் குரு பகவானின் சிறப்புப் பலன் உங்களை நாடி வரும். நன்மை வரும் என்று குருபகவானை மறந்து விடாமல் இடையிடையே அர்ச்சனை வழிபாடுகள் செய்வித்து, இரட்டிப்பு அதிர்ஷ்டம் பெறுங்கள்.
___________________________________

மிதுனம்: (மிருக சீரிடம் 3 ஆம் 4 ஆம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1 ஆம் 2 ஆம் 3 ஆம் பாதம்)

மிருதுவான தோற்றம் கொண்டவர்கள், பார்வைக்கு அமைதியானவராகவும் மிக அப்பாவித்தனமுமுடையவராகவும் இருப்பீர்கள். ஆனால் செயற்பாட்டில் ஆகாய சூரர்களாக இருப்பீர்கள். உங்களின் தனிப்பட்ட ஒவ்வொரு விடயத்தையும் எளிதாகவும் சிறப்பாகவும் செய்து முடிப்பீர்கள்.

இந்தப் பூனையும் பால் குடிக்குமா? என்கின்ற சுபாவமாகவே இருந்து உங்கள் காரியங்களில் ஜெயித்து விடுவீர்கள். நீங்கள் எøதயும் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள். உங்களின் ராசிக்கு குருபகவான் 06.12.2008 அன்று அட்டமஸ்தானமாகிய 8 ஆம் இடம் அமைகின்றார். உங்கள் ராசிக்கு, களத்திர, ஜீவன, ஸ்தான ஆதி பத்தியம் பெறுகின்ற குருபகவான் 8 ஆம் இடத்திலே நீச பங்கமாக சஞ்சரிப்பது பெரும் நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. எந்த விடயமாக இருப்பினும் மிகவும் நிதானமாகவும் பொறுமையாகவும் செயற்பட வேண்டும்.

தொழில் ரீதியில் சற்று அலைச்சல், வேலைப்பளு, மேலதிகாரிகளுடன் மனச் சஞ்சலம், தேவையற்ற வீண் பிரச்சினைகள் போன்ற பலாபலன்கள் ஏற்படும் நிலையுண்டு. திடீர் சுகயீனங்கள், மருத்துவ செலவு, சத்திர சிகிச்சை போன்ற நிலைகளும் ஏற்படலாம். எனவே, எல்லா விடயங்களிலும் நிதானமான செயற்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.

பண வரவு விடயங்களிலும் சற்று மந்த நிலைகள் இருக்கும். எதிர்பார்க்கும் லாபங்கள், தொழில் ரீதியில் அமைவது மிகவும் சிரமமாகும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையே மனச் சஞ்சலங்கள், தேவையற்ற பிரச்சினைகள் போன்ற பலாபலன்கள் ஏற்படும். நீங்கள் உண்டு, உங்கள் பாடு உண்டு என்ற போக்கிலே இருந்து கொள்ளுங்கள். அப்படியில்லையென்று செயற்பட்டீர்கள் என்றால் பிரச்சினை உங்கள் வீட்டுக் கதவை தட்டும்.

திருமணம் போன்ற சுப காரியங்களை எதிர்பார்க்கின்ற அன்பர்களுக்கு சிறு தடைகள், தாமத நிலைகள் என்பன ஏற்பட்டு மறையும். வெளிநாட்டு பயண ஆயத்தங்களில் ஈடுபாடு கொள்பவர்கள் சற்று அவதானத்துடன் செயற்பட வேண்டும். மாணவர்கள் தங்களின் கல்வி நிலையிலே கூடுதலான ஊக்கமும் முயற்சியும் எடுக்க வேண்டும். உங்களின் ராசிக்கு சனி பகவான் சஞ்சாரம் ஓரளவிற்கு அனுகூலமானதாக அமைவதினாலே சற்று ஆறுதல் தருகின்ற பலா பலன்கள் இடையிடையே அமையும்.

கடன் பிரச்சினைகளில் இழுபறி நிலைகளும் தேவையற்ற அலைச்சல், மனச் சஞ்சலங்களும் ஏற்படுகின்ற நிலை இருக்கும். நண்பனும் எதிரியாகின்ற நிலைகள் இருக்கும். பிரதி வியாழக்கிழமை தோறும் குருபகவானுக்கு கடலை மாலை அணிவித்து மஞ்சள் புஷ்பத்தினால் அர்ச்சனை வழிபாடு செய்து வரவும், அத்தோடு உங்களின் ராசி நாத தெய்வமான விஷ்ணு பகவானுக்கும் துளசி வில்வ இலையால் அர்ச்சனை வழிபாடு செய்யவும். எந்த விடயத்தையும் சாதுரியமாக சமாளிக்கின்ற நீங்கள் இந்தக் குருப் பெயர்ச்சியின் பலாபலன் அறிந்து அதற்குத் தக செயற்பாடு கொண்டு வெற்றி காண்க.
___________________________________

கடகம்: (புனர்பூசம் 4 பாதம், பூசம், ஆயிலியம்)

கலகலப்பான சுபாவமும் எவரையும் எளிதிலே நட்புறவு கொள்கின்ற ஆற்றலும் எல்லோருடனும் அன்பாக இருக்க வேண்டும் என்கின்ற எண்ணமும் அதிகமான நட்புறவுகளினாலேயே ஆபத்துக்களையும் எதிர்ப்புக்களையும் சந்திக்கின்ற நிலையும் சற்று சுய நலம் கலந்த செயற்பாடும் எல்லோருக்கும் உதவி செய்கின்ற தன்மையும், நிறைந்த நல் மனமும் கொண்ட உங்களின் ராசிக்கு 06.12.08 அன்று குரு பகவான் களத்திரஸ்தானமாகிய 7 ஆம் இடம் அமைகின்றார். உங்களின் ராசிக்கு ரோக, பாக்கியஸ்தான ஆதிபத்தியம் பெறுகின்ற குருபகவான் 7 ஆம் இடம் அமைவது, அனுகூலமான நற் பலாபலன்கள் அமையும்.

பொதுவாகவே, சந்தோஷத்தையும் நட்புறவையும் விரும்புகின்ற உங்களுக்கு இந்தக் குருப் பெயர்ச்சி சிறப்பான பலாபலன்களை கொடுக்கும். குடும்பத்திலே கணவன், மனைவியிடையே நல்ல நட்புறவு இருக்கும். சுப காரிய நிகழ்வுகளும் சுபச் செலவுகளும் அமையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறுகின்ற பலன் உண்டு. தொழில் ரீதியிலே நல்ல சிறப்பான முன்னேற்றங்கள் அமைகின்ற நிலையுண்டு. பண வரவு மிகவும் திருப்திகரமான முறையிலே உங்களுக்கு வந்து சேருகின்ற பலன் உண்டு.

புதிய முயற்சிகளில் வெற்றிகள் ஏற்படுகின்ற பலாபலன் அமையும். திருமணம் போன்ற சுப காரியங்களை எதிர்கொள்ளுகின்ற அன்பர்களுக்கு அப்பலன் பூரணமாக அமையும் நிலையுண்டு. வெளியூர் பிரயாணங்களுக்கு முயற்சி செய்பவர்களுக்கு அப்பலன் அனுகூலமானதாக அமையும் நிலையுண்டு. மாணவர்களுக்கு கல்வி நிலையில் சிறப்பான நல்ல முன்னேற்றங்கள் அமையும் பலன் உண்டு.

எனவே இந்தக் குருப்பெயர்ச்சி உங்களுக்கு ஏற்புøடய நல்ல பலாபலன்களையே பெரும்பாலும் தருகின்ற நிலையுண்டு. உங்களின் ராசிக்கு ஏழரைச் சனி சஞ்சாரம் நடைபெறுகின்றது. கடைக்கூற்று சஞ்சார நிலை அமைகின்றது. 2009 ஆம் ஆண்டு நடுப் பகுதியோடு ஏழரைச் சனி நிறைவு பெறும். எனவே இந்த ஏழரைச் சனி சிறு சிறு அலைச்சல் நிலைகளை இடையிடையே கொடுக்கும். சற்று நிதானத்துடன் செயற்படுவது மிகவும் நல்லது.

களத்திரஸ்தான நிலையில் அமைகின்ற இந்தக் குருப்பெயர்ச்சி மனைவி வழியால் எதிர்பாராத வகை நன்மைகளை கொடுக்கின்ற பலாபலன் உண்டு. குழந்தைப் பேறு எதிர்பார்க்கின்றவர்களுக்கும் அனுகூலமான நற்பலா பலன்கள் அமையும் நிலையுண்டு. எனவே சென்ற வருடத்திலே குரு பகவானின் ரோகஸ்தான சஞ்சாரம் பல வகையிலும் உங்களுக்கு மனச் சஞ்சலம், பிரச்சினைகள், உடல் நிலை சுகயீனங்கள் என பலாபலன்களை கொடுத்திருக்கும்.

தற்போது அமைகின்ற இந்தக் குருப் பெயர்ச்சியானது எல்லா வகையிலும் நன்மைகளும் சிறப்புகளும் தருவதாய் அமைகின்றது. எந்த விடயமாக இருப்பினும் அதை சாணக்கியத்துடன் செயற்படுத்தும் ஆற்றலும் அறிவும் கொண்ட நீங்கள் இந்தக் குருப் பெயர்சியின் மூலமாக சாதுரியத்துடன் செயற்பட்டு அதிகமான நன்மைகளை பெறலாம். கடகராசி அன்பர்களுக்கு குருப்பெயர்ச்சி குதூகலமானதாக அமையும்.

___________________________________

சிம்மம்: (மகம், பூரம், உத்தரம் 1 ஆம் பாதம்)

சிந்தித்து செயல்படும் ஆற்றலும் சாதுரியத்துடன் செயல் ஆற்றுகின்ற தன்மையும் அதிகமாக கொண்டவர்கள் நீங்கள். எந்த விடயத்தை எப்படி எந்த முறையில் செய்ய வேண்டும் என்கின்ற மதிநுட்பம் உங்களுக்கு கை வந்த கலையாகும்.

சுய நலமும் சாதிக்க வேண்டும் என்கின்ற துடிப்பும் மிகவும் அதிகம் கொண்டவர்கள் நீங்கள். உங்களின் மன எண்ணங்களை அறிந்து கொள்வது மிக மிகக் கடினமாகும். எதையும் உள் மனதினிலே வைத்து திட்டம் தீட்டுகின்ற உங்களுக்கு 06.12.08 அன்று குருப்பெயர்ச்சி மூலமாக குருபகவான் ரோகஸ்தானமாகிய 6 ஆம் இடம் அமைகின்றார்.

உங்களின் ராசிக்கு பஞ்சம, அட்டம, ஸ்தான நிலைபெறுகின்ற குருவின் சஞ்சாரம் ஆறாம் இடத்தினிலே அமைவது சிறப்பான நிலை இல்லை. மிகவும் பொறுமை நிதõனத்துடன் செயற்பட வேண்டும். தொழில் நிலைகளிலே தேவையற்ற வீண் பிரச்சினைகள், மேலதிகாரிகளுடன் மனஸ்தாபம், நண்பர்களும் பகைவர்களாக மாறுகின்ற நிலை போன்ற பலா பலன்கள் இருக்கும். குடும்பத்திலே மனச் சஞ்சலமும் கணவன் மனைவியிடையே சிறு சிறு பிரச்சினைகளும் ஏற்பட்டு மன நிலையில் சந்தோஷ நிலை குறையும். பண வரவு சற்று மந்தமான நிலையிலேயே அமைகின்ற பலன் உண்டு.

கடன் பிரச்சினைகளில் இறுக்கமான நிலைகள் ஏற்பட்டு மறையும் பலன்கள் உண்டு. கொடுக்கல், வாங்கல் விடயங்களிலே மிகவும் நிதானமான செயற்பாடு வேண்டும். உடல் நிலையில் கூடிய கவனம் இருக்க வேண்டும். திடீர் சுகயீனங்கள், மருத்துவ செலவுகள் என்பன எதிர்பாராத வகையில் ஏற்படும். எனவே எல்லா வகையிலும் நிதானமான செயற்பாடு வேண்டும். உங்களின் ராசிக்கு சனீஸ்வர சஞ்சாரமும் ""ஏழரைச் சனி நடுக்கூற்று'' சஞ்சாரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

திருமணம் போன்ற சுபகாரிய நிலைகளை எதிர்பார்க்கின்றவர்களுக்கு சிறு சிறு தடை தாமத நிலைகள் தொடருகின்ற பலன் இருக்கும். வெளிநாட்டு பிரயாண முயற்சிகள் மேற்கொள்பவர்களும் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபாடு கொள்ள இருப்பவர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து நிதானத்துடன் செயற்படுவது மிகவும் நல்லது.

எல்லா வகை நிலைகளிலும் குருவின் சஞ்சாரம் உங்களுக்கு சுமாரானதாகவும் மத்திமமானதாகவும் அமைகின்றது. ""சத்தியமாமுனி யாறிலே யிருகாலிலே தலை பூண்டதும்'' என்கின்றது ஜோதிடப் பாடல். எனவே, இந்தக் குருப்பெயர்ச்சியானது உங்களின் ராசிக்கு சத்திய சோதனையாக அமைகின்றது. பிரதி வியாழக்கிழமை தோறும் குருவிற்கு கடலை மாலை அணிவித்து மஞ்சள் புஷ்பத்தினால் அர்ச்சனை செய்யவும். நிதானத்துடன் செயற்பாடுகள் புரிந்து கொள்ளுங்கள்.
___________________________________

கன்னி: (உத்தரம் 2 ஆம், 3 ஆம், 4 ஆம் பாதம், அத்தம், சித்திரை 1 ஆம், 2 ஆம் பாதம்)

கனிவு நிறைந்த உள்ளமும் கபடம் அற்ற செயற்பாடும் கொண்ட கன்னிராசி அன்பர்களே! எதைச் செய்தாலும் சரியாக செய்ய வேண்டும் என்கின்ற எண்ணமும் யார் அறிவுரை சொன்னாலும் அதை பவ்வியமாக கேட்டு பின்பு தமது இஷ்டப்படி நடக்கின்ற குணமும் இதனாலேயே பல கஷ்டங்களையும் எதிர்கொள்ளுகின்ற நிலையும் அதிகமான சிந்தனையை எப்பொழுதும் கொண்டவராய் இருக்கும் உங்களுக்கு 06.12.08 அன்று நடைபெறுகின்ற குருப்பெயர்ச்சி மூலமாக குருவின் சஞ்சாரம் பஞ்சமஸ்தானமாகிய 5 ஆம் இடம் அமைகின்றது.

உங்களின் ராசிக்கு சுக, களத்திர ஸ்தான ஆதிபத்தியம் பெறுகின்ற குருபகவான் பஞ்சமஸ்தானமாகிய ஐந்தாம் இடம் அமைவது மிகவும் சிறப்பான நிலையாகும். எடுக்கின்ற முயற்சிகளில் நல்ல வெற்றிகள் அமையும் நிலையுண்டு.

தொழில் ரீதியில் சிறப்பான முன்னேற்றங்களும் தொழில் சார்ந்த பதவி உயர்வுகளும் லாபகரமான பண வரவுகளும் அமையும். குடும்பத்தில் நல்ல மகிழ்வும், சுப காரிய அனுகூல பலா பலன்களும் அமையும். எடுக்கின்ற முயற்சிகளில் நல்ல சிறப்பான வெற்றிகள் ஏற்படும்.

திருமணம் போன்ற சுப காரிய நிலைகளை எதிர்பார்க்கின்ற அன்பர்களுக்கு அப் பலன் பூரணமாக கிடைக்கின்ற நிலை உண்டு. வெளிநாட்டில் வேலை வாய்ப்புகள் மற்றும் வெளிநாட்டு பயணம் போன்ற முயற்சிகளில் ஈடுபடுவோருக்கும் அனுகூலமான பலன்கள் அமையக் கூடிய நிலைகள் உண்டு.

குரு பார்த்தால் கோடி நன்மை என்பதற்கு அமைய பாக்கியஸ்தான பார்வையாக உங்களின் ராசியை நோக்கி இருக்கும் குரு பகவான் பார்வையால் லாட்டரி அதிர்ஷ்டங்களும் உங்களை நாடி வருகின்ற நிலையுண்டு. அதே நேரம் உங்களின் கடன் பிரச்சினைகளும் சுமுகமாக தீர்ந்து விடுகின்ற நிலை உண்டு.

எந்த விடயமாக இருந்தாலும் வெற்றிகளும் சிறப்புகளும் தரும் பலன் இந்தக் குருப்பெயர்ச்சி மூலமாக அமைகின்றது. உங்களின் ராசிக்கு ஏழரைச் சனி சஞ்சாரத்தின் முதற் கூற்றுப்பலன் நடைபெறுகின்றது. இப்பலன் இடையிடையே சிறு சிறு மந்த நிலைகளைக் கொடுக்கும். இருப்பினும் குருவின் பஞ்சமஸ்தான பலன் மிகவும் மேன்மையான நற்பலன்கள் உங்களுக்குத் தரும். மாணவர்களின் கல்வி நிலையில் அனுகூலமான நல்ல சிறப்புகள் ஏற்படும் நிலையுண்டு.

பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகள் அமையும் பலன் உண்டு. எல்லா வகையிலும் இந்தக் குருப்பெயர்ச்சி சிறப்புகள் பலவும் தருவதாய் அமைகின்றது. உங்களின் ராசி நாத தெய்வம், விஷ்ணு வழிபாடும், இடையிடையே குருக் கிரக வழிபாடும். இரட்டிப்பு அதிர்ஷ்டம் தரும். எனவே இந்தக் குருப்பெயர்ச்சியானது உங்களுக்கு குதூகலம்தான் என்பதில் ஐயமில்லை.
___________________________________

துலாம்: (சித்திரை 3 ஆம், 4 ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1 ஆம் 2 ஆம் பாதம்)

துவளாத மனமும் தூய்மையான எண்ணமும் கொண்ட துலாராசி அன்பு உள்ளங்களே! எதைச் செய்யினும் அதிலே ஒரு நேர்மையை விசுவாசத்தன்மையை உங்களிடம் காண முடியும். திறமை என்பது உங்களின் ராசிக்கு உடன் பிறந்த தன்மையானது. அனைவரையும் நேசிக்கின்ற பாங்கும் அசைக்க முடியாத தெய்வ நம்பிக்கையும் உங்களின் உயர்ந்த சிந்தனையும் நல்ல நிலைகளின் தன்மையாளர்களாக்கும்.

உங்கள் ராசிக்கு பிரகஸ்பதி எனப்படுகின்ற குரு பகவான் 06.12.08 அன்று சுகஸ்தானமாகிய 4 ஆம் இடம் அமைகின்றார். உங்களின் ராசிக்கு ஜெய, ரோகஸ்தான, ஆதிபத்தியம் பெறுகின்ற வியாழ பகவான் நான்காம் இடம் அமையப் பெறுவது பெரும் நன்மைகளை எதிர்பார்க்க முடியாது. எடுக்கின்ற விடயங்களிலும் முயற்சிகளிலும் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும். தொழில் முயற்சிகளிலும் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும்.

தொழில் ரீதியிலே சிறு சிறு பிரச்சினைகள், மனச் சஞ்சலங்கள் என்பன ஏற்பட்டு மறையும் நிலையுண்டு. குடும்பத்தில் சுமாரான மத்திமமான பலன்களே அமையும். பண வரவு விடயங்களில் சிறு மந்த நிலை இருக்கும்.

எதிர்பாராத வகையில் உடற் சுகயீனங்களும் மருத்துவ செலவும் ஏற்படுகின்ற நிலை இருக்கும். தொழில் நிலையில் திடீர் இடமாற்றம், தாயார் வழியில் சுகயீனங்கள், மருத்துவ செலவுகள் என்பன இருக்கும். எனவே, எந்த விடயமாக இருப்பினும் சற்று பொறுமை நிதானத்துடன் செயற்படுவது மிகவும் நல்லது. நீங்கள் அமைதியாக இருந்தாலும் பிரச்சினைகள் உங்களைத் தேடி வரும் நிலையுண்டு. பொதுவாகவே தேவையற்ற விடயங்களில் தலையீடுகளை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

திருமணம் போன்ற சுபகாரிய நிலைகள் ஓரளவிற்கு அமையக் கூடிய பலன் இருக்கும். கடன் பிரச்சினைகளில் சற்று இழுபறி தாமத நிலைகள் இருக்கும். குடும்ப நிலையில் தேவையற்ற பிரச்சினைகள் இடையிடையே ஏற்படலாம்.

எனவே, பொறுமையான செயல் வேண்டும். ""தர்மபுத்திரர் நாலிலே வனவாசம்படி போனதும்'' என்கின்றது ஜோதிடப் பாடல். எனவே அதற்கு தகுந்தாற்போல செயற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். மாணவர்களின் கல்வி நிலையில் ஓரளவிற்கு அனுகூலமான பலா பலன்கள் அமையும் நிலையுண்டு. உங்களின் ராசிக்கு சனீஸ்வர பகவான், லாபஸ்தானமாகிய 11 ஆம் இடம் அமைவது, திடீர் நன்மைகள்.

அதிர்ஷ்டங்கள் அமையக் கூடிய நிலைகள் உண்டு. பிரதி வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு கடலை மாலை அணிவித்து அர்ச்சனை வழிபாடு செய்யவும். அத்தோடு அம்பாள் வழிபாடும் மேற்கொள்ளவும். உளத் தூய்மையான உங்களின் செயற்பாடு பெரும் கஷ்டம் கொடுக்காது.
___________________________________

விருச்சிகம்: (விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

விவேகம் நிறைந்த செயற்பாடும், ஆழ்ந்த நுண்ணறிவும், எந்த விடயமாக இருப்பினும் அதை சரியாக கற்றுத்தெரிய வேண்டும். என்கிற மனநிலையும் எல்லோருக்கும் உதவி செய்கின்ற மன நிலையும், எந்த விடயம் என்றாலும் அதில் முதன்மையாக இருக்கின்ற செயற்றிறனும் கொண்ட உங்களுக்கு 06.12.08 அன்று நடைபெறுகின்ற குருப் பெயர்ச்சியின் மூலமாக உங்களின் ராசிக்கு ஜெயஸ்தானமாகிய மூன்றாம் இடம் குரு பகவான் சஞ்சரிக்கின்றார்.

உங்கள் ராசிக்கு தன, பஞ்சமஸ்தான நிலை ஆதிபத்தியம் பெறுகின்ற குருபகவான் 3 ஆம் இடம் அமைவது, சற்று மத்திம சுமாரான பலா பலன்களையே கொடுக்கும். எடுக்கின்ற விடயங்களிலே நிதானமாக செயற்பாடு வேண்டும். தொழில் ரீதியிலே அலைச்சல், இழுபறி நிலைகள் இருக்கும். எந்த விடயம் எடுத்தாலும் சிறு சிறு தடைகள் தாமத நிலைகள் ஏற்பட்டு மறையும் பலன் உண்டு. குடும்பத்தில் சற்று அனுகூலமான பலாபலன்கள் அமைய இடமுண்டு.

இருப்பினும் திடீர் செலவினங்கள், உடல் நிலை சுகயீனங்கள் போன்ற பலா பலன் இருக்கும். சகோதரர் வழியில் மனச் சஞ்சலங்கள், தேவையற்ற வீண் பிரச்சினைகள் இடையிடையே ஏற்பட்டு மறையும் பலன் உண்டு. பண வரவு சற்று மத்திமமான நிலையிலேயே அமையும் பலன் உண்டு.

கடன் பிரச்சினை, இழுபறி தாமத நிலைகளைக் கொடுக்கும். வர வேண்டிய பணங்கள் வருமான இலாபங்கள் சற்று தாமதமாக வந்து சேரும் நிலையுண்டு. கொடுக்கல், வாங்கல் விடயங்களில் அவதானமாக செயற்பட வேண்டும்.

திருமணம் போன்ற சுப காரிய பலாபலன்களை எதிர்பார்க்கின்ற அன்பர்களுக்கு அப்பலன் ஓரளவிற்கு நன்மை தருவதாய் இருக்கும். வெளிநாட்டு பிரயாணங்களை எதிர்கொள்வோருக்கு சிறு சிறு தாமத நிலைகள் கொடுக்கும். எந்த விடயமாக இருந்தாலும் சற்று பொறுமை, நிதானத்துடன் செயற்படவும். தேவையற்ற வீண் விடயங்களில் தலையீடு இல்லாமல் இருப்பது மிகவும் நல்லது. உங்களுடைய ராசிக்கு சனீஸ்வர பகவான் சஞ்சாரம்,

ஜீவன ஸ்தானமாகிய 10 ஆம் இடம் அமையப் பெறுவது தொழில் நிலைகளில் பதவி மாற்றம் இடமாற்றம் என்பன ஏற்படலாம். சிறந்த ஆளுமைத் திறன் உடைய உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி உகந்ததல்ல. எனவே அதற்கு ஏற்ப செயற்பாடு கொண்டு செயல்பட வேண்டும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் குருவிற்கு கடலை மாலை அணிவித்து அர்ச்சனை செய்யவும். அத்தோடு உங்களின் ராசிநாத தெய்வம் அம்பாளுக்கும் அர்ச்சனை வழிபாடு செய்யவும்.
___________________________________

தனுசு: (மூலம், பூராடம், உத்தராடம் 1 ஆம் பாதம்)

தன்னம்பிக்கையும் தளர்விலா மனமும் எதையும் எதிர்த்து போராடக் கூடிய வலிமையும் தான் நினைக்கும் விடயங்களை சாதிக்கின்ற பிடிவாத குணமும் எத்தனை பேர் அறிவுரை சொன்னாலும் தன் முடிவின்படியே காரியம் செய்கின்ற குண இயல்பும், மற்றவர்களை எப்போதும் சந்தேக கண்ணோடு பார்க்கின்ற தன்மையும் செய் நன்றி மறவாத நற்பண்பும் கொண்டுள்ள உங்களுக்கு இந்தக் குருப் பெயர்ச்சியானது தனஸ்தானமாகிய 2 ஆம் இடம் 06.12.08 அன்று சஞ்சரிக்கின்றார்.

உங்களின் ராசிக்கு குரு பகவான் ஜென்ம, சுகஸ்தான ஆதிபத்தியம் பெறுகின்றார். பொதுவாக சென்ற ஆண்டு ஜென்மஸ்தானமாகிய 1 ஆம் இடம் அமையப்பெற்று பல வகையிலும் பிரச்சினைகளை கொடுத்த குரு பகவான் தற்போது அமைகின்ற தனஸ்தானமாகிய 2 ஆம் இட சஞ்சாரம் மூலமாக பல வகையிலும் நன்மைகளும் சிறப்புகளும் தரக்கூடியவராக அமையப் பெறுகின்றார்.

எடுக்கின்ற முயற்சிகளில் சிறப்பான வெற்றிகள் அமையும் நிலை உண்டு. தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றங்களும் பதவி உயர்வுகளும் அமையும் நிலையுண்டு. பண வரவு மிகவும் சிறப்பான நிலையிலே அமையும். குடும்பத்தில் நல்ல மகிழ்வும் சுப காரிய பலாபலன்களும் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரிய நிலைகளை எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் நிறைவாக அமையும் பலன் உண்டு. எதிர்பாராத வகையில் அதிர்ஷ்டங்கள் ஏற்படக்கூடிய நிலைகள் உண்டு.

வெளிநாட்டு அதிர்ஷ்டங்கள் ஏற்படக்கூடிய நிலைகள் உண்டு. வெளிநாட்டு பிரயாணங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு அப்பலன் பூரணமாக அமையக்கூடிய நிலைகள் இருக்கும். புதிய முயற்சிகளில் சிறப்பான வெற்றிகள் அமையும் பலன் உண்டு. உங்களின் ராசிக்கு சனீஸ்வரனின் சஞ்சார பலனும் சாதகமான நிலையில் பாக்கியஸ்தானமாகிய 9 ஆம் இடம் அமைவது அனுகூலமான நல்ல பலாபலன்களை கொடுக்கும் நிலையுண்டு. மாணவர்களுக்கு கல்வி நிலையில் சிறப்பான பலாபலன் அமையும் நிலையுண்டு.

பரீட்சைகளில் சிறப்பான சித்திகள் ஏற்படும். எல்லா வகையிலும் சிறப்புகள் பலவும் தரக்கூடியதாக இந்தக் குருப் பெயர்ச்சி உங்களுக்கு அமைகின்றது. உங்களின் ராசி நாதனாக அமைகின்ற குரு பகவான் தனஸ்தான சஞ்சாரமாக அமைந்து அதி சிறப்பான பலன்களைக் கொடுப்பார். எதையும் எதிர்கொள்கின்ற மன வலிமையுடைய உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி குதூகலமும் சாதனையும் தருகின்றதாக அமையப் பெறுகின்றது. அதற்கு தகுந்தபடி செயல்கள் புரிந்து நல்ல வெற்றிகள் பெறுக.
___________________________________

மகரம்: (உத்தராடம் 2 ஆம், 3 ஆம், 4 ஆம் பாதம், திருவோணம், அவிட்டம் 1 ஆம், 2 ஆம் பாதம்)

மனதிலே பட்டதை மறைக்காமல் சொல்லும் தைரியம் உடையவர்கள் நீங்கள். எந்த விடயமாக இருந்தாலும் சாதிக்கக் கூடிய ஆற்றல் கொண்டவர்கள். பொது விடயங்களிலே அதீத அக்கறையும் ஈடுபாடும் கொண்டு செயல் ஆற்றும் குண இயல்புடையவர்கள்.

முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்கின்ற மனம் கொண்டவர்கள். எதிரியாக ஒருவன் அமைந்துவிட்டால் அந்த எதிரிக்கு துன்பம் கொடுப்பதில் பின் நிற்கமாட்டீர்கள். இப்படியான குண இயல்புகள் உடைய உங்களின் ராசிக்கு குருப் பெயர்ச்சி 06.12.08 அன்று உங்களின் ஜென்ம ராசிக்கு சஞ்சரிக்கின்றார். பொதுவாகவே மகர ராசி அன்பர்களுக்கு ஜெய விரயஸ்தான ஆதிபத்தியம் பெறுகின்ற குருபகவான் ஜென்ம ஸ்தானமாகிய 1 ஆம் இடம் அமைவது சிறப்பான நிலையாக இருக்காது.

எந்த விடயம் எடுத்தாலும் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும். தொழில் நிலைகளில் வேலைப்பளு, திடீர் பிரச்சினைகள், மேலதிகாரிகளுடன் மனச் சஞ்சலம் போன்ற நிலைகள் இருக்கும். குடும்பத்தில் சிறு சிறு மனச் சஞ்சலங்கள், மனைவி, பிள்ளைகள் மூலமாக பிரச்சினைகள் என்பன ஏற்படும். பண வரவு விடயங்களிலும் எதிர்பார்க்கின்ற நிலைகள் இருக்காது.

கடன் பிரச்சினைகளில் இழுபறி நிலைகள் தொடரும். திருமணம் போன்ற சுப காரிய நிலைகளை எதிர்பார்க்கின்றவர்களுக்கு தடை, தாமத நிலைகள் இருக்கும். வெளிநாட்டு பயண முயற்சிகளில் ஈடுபடுவோருக்கும் இழுபறி நிலைகள் இருக்கும். ""ஜென்மராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும்'' என்கின்றது ஜோதிடப் பாடல். குருவின் பலன் மட்டுமின்றி உங்களின் ராசிக்கு சனீஸ்வரனும், ""அட்டமத்து சனியாக'' சஞ்சரித்துக் கொண்டு அமைகின்றார்.

எனவே கஷ்ட நிலைகளும் பிரச்சினைகளும் உங்கள் வீட்டுக் கதவை வந்து தட்டும் நிலையுண்டு. நீங்கள் உண்டு உங்கள் பாடு உண்டு என அமைதியாக செயற்படுங்கள். எந்த விடயம் என்றாலும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயற்படுங்கள்.

முக்கியமாக கொடுக்கல் வாங்கல் விடயங்களிலும் பொது விடயங்களிலும் நிதானமாக செயற்படுங்கள். உங்களின் ராசி நாத தெய்வம் விநாயகர், சிவன் வழிபாடும், பிரதி வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் முறையே குரு, சனீஸ்வர வழிபாடு நன்மை தரும். எந்த விடயத்தையும் ஆளுமையோடு செய்கின்ற உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி சுமாரானதே. அதற்கு அமைய செயல் கொண்டு வெற்றிகள் காண நிதானமாக முயற்சி செய்யுங்கள்.
___________________________________

கும்பம்: (அவிட்டம் 3 ஆம், 4 ஆம் பாதம், சதயம், பூரட்டாதி 1 ஆம், 2 ஆம்,3ஆம் பாதம்)

குன்றாத மனமும், நிறைந்த குண இயல்பும் கொண்டவர்கள் நீங்கள் ""அதிர்ஷ்டம் கதவை தட்டும்'' எனும் வாக்கியம் உங்களின் ராசிக்கே சாலப் பொருத்தமாகும். வாழ்க்கையில் எதிர்பாராத வகையில் அதிர்ஷ்ட பலன்கள் உங்களை அடிக்கடி நாடி வருவது உண்டு.

இருப்பினும் உங்கள் காரியங்களை சாதிப்பதற்காக எதையும் செய்ய தயங்கமாட்டீர்கள். தனக்கு உரிய மரியாதை கிடைக்க முன்னின்று செயற்படுவீர்கள். எல்லா வகையிலும் ""காரியக்காரர்'' நீங்கள். உங்கள் ராசிக்கு 06.12.08 அன்று அமைகின்ற குருப்பெயர்ச்சி விரயஸ்தானமாகிய 12 ஆம் இடம் அமைகின்றது. உங்களின் ராசிக்கு தன லாபஸ்தான ஆதிபத்தியம் பெறுகின்ற குருபகவான் விரயஸ்தானமாகிய 12 ஆம் இடம் அமைவது சற்று நன்மையான பலாபலன் கொடுக்கின்ற நிலையுண்டு. பொதுவாக இந்தக் குருப்பெயர்ச்சி பெரும் நன்மைகள் தரக்கூடியது அல்ல.

இருப்பினும் ஓரளவிற்கு அனுகூலமான பலன்கள் அமையும். எதிர்பாராத வகையில் திடீர்ச் செலவுகள் ஏற்படுகின்ற நிலை இருக்கும். இருப்பினும் அமைகின்ற செலவுகள், சுபகாரியச் செலவு, தர்மகாரியச் செலவு என்கின்ற நிலையிலே அமைகின்ற பலன் உண்டு. எடுக்கின்ற முயற்சிகளில் சற்றுக் கூடிய கவனம் வேண்டும். தொழில் ரீதியில் சிறு சிறு பிரச்சினைகள், அலைச்சல் நிலைகள் என்பன இருக்கும். குடும்பத்திலே ஓரளவிற்கு அனுகூலமான பலாபலன் அமையும். இடையிடையே சிறு சிறு மனச் சஞ்சலம் ஏற்படும்.

உடல் நிலையில் திடீர் சுகயீனங்கள், மருத்துவ செலவுகள் அமையும். தேவையற்ற விடயங்களில் தலையீடு இல்லாமல் இருப்பது மிகவும் நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய நிலைகளை எதிர்பார்க்கின்றவர்களுக்கு சற்று இழுபறி தாமத நிலையின் பின்னர் அனுகூலமான பலன் கொடுக்கும். மாணவர்கள் கல்வி நிலையில் முயற்சியும் கூடிய கவனமும் எடுப்பது மிகவும் நல்லது. உங்களின் ராசிக்கு சனீஸ்வர சஞ்சாரம், களத்திரஸ்தானமாகிய 7 ஆம் இடம் அமைவது, சுமாரான பலன்களையே கொடுக்கும் நிலையுண்டு.

எனவே இந்தக் குருப்பெயர்ச்சி உங்களுக்கு பெரும் சிறப்பான நிலைகள் கொடுக்காது அதற்கமைய நீங்கள் செயற்பட வேண்டும். வியாழக்கிழமைகளில் கடலை மாலை அணிவித்து குருபகவானுக்கு மஞ்சள் புஷ்பத்தால் அர்ச்சனை வழிபாடு செய்யவும். உங்களின் ராசி நாத தெய்வம் விநாயகர் வழிபாடும் செய்யவும். எடுக்கின்ற விடயங்களிலே மிகவும் நிதானத்தோடு செயல் புரிந்து அனுகூலமான பலாபலன்கள் பெற முயற்சி செய்யுங்கள்.

___________________________________

மீனம்: (பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி)

மிடுக்கான பேச்சும், தோற்றமும் மற்றவர்கள் திருப்பி பேச முடியாத நிலையிலே வாதங்கள் செய்கின்ற திறமையும் தாம் நினைக்கின்ற விடயங்களை சாதிக்கின்ற தன்மையும் எல்லோருக்கும் உதவி செய்கின்ற நல்ல மனமும் தனது சுய நலம் அதிகம் பார்க்கின்ற குண இயல்பும் சமூகத்திலே முன்னிலை வகிக்க நினைக்கும் எண்ணங்களும் கொண்ட உங்களுக்கு 06.12.08 அன்று அமைகின்ற குருப்பெயர்ச்சி லாபஸ்தானமாகிய 11 ஆம் இடம் அமைகின்றது.

உங்கள் ராசி நாதனாகவும் ஜீவனஸ்தான அதிபதியாகவும் அமைகின்ற குருபகவான் 11 ஆம் இடம் அமையப் பெறுவது மிகவும் சிறப்பான நற்பலாபலன்கள் கொடுக்கின்ற நிலை உண்டு. எடுக்கின்ற முயற்சிகளில் நல்ல வெற்றிகள் அமையும்.

தொழில் ரீதியில் முன்னேற்றகரமான பலாபலன்கள் அமைகின்ற நிலை உண்டு. பண வரவு மிகவும் திருப்திகரமானதாக அமையும் பலன் உண்டு. குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியும் சுப காரிய அனுகூலங்களும் அமையும் நிலையுண்டு.

எதிர்பாராத வகை அதிர்ஷ்டங்கள் ஏற்படுகின்ற நிலையுண்டு. வர வேண்டிய வரவுகள் தானாக வந்து சேரக்கூடிய நிலைகள் இருக்கும். லாட்டரி அதிர்ஷ்டங்கள் அமையும் பலன் உண்டு. திருமணம் போன்ற சுப காரிய நிலைகளை எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் பூரணமாக கிடைக்கும் நிலையுண்டு.

[திருகோணமலை - திருக்கோணேஸ்வரர் ஆலய நவகிரக பீடம்]

Comments

Hello dear Sir / Madam,

It was a wonderful moments i had , after a very long time...when i view your our temple through your eyes..!! Really a good job !! It was so nice to sit and watch the slide show..with good photography...!

Hope to have more ...in future...!

Wish you all the best...!

With best regards,
Shakthi.S.Wickramanayagam.

Post a comment

(The comment may need to be approved by Ootru.com. Until then, it won't appear on the entry. Thanks for waiting.)

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை