« February 2009 | Main | April 2009 »

March 25, 2009

தமிழர்கள் உரிமைகளை மீட்பதில் அக்கறை உண்டு-ஜெயலலிதா

"லங்கைத் தமிழர்கள் உள்பட அனைத்துத் தமிழர்களின் உரிமைகளையும் மீட்பதில் எனக்கு அக்கறை உண்டு'' என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

MJO0325.jpg

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா-படம்: Jerome.K

இது குறித்து, முதல்வர் கருணாநிதி கூறிய கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

ச்சத்தீவை இலங்கை அரசு புனிதப் பகுதியாக அறிவிக்கப் போவது குறித்து நான் வெளியிட்ட அறிக்கைக்கு, முதல்வர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.

அதில், கடந்த 1974-ல் சட்டப் பேரவையில் தான் முன்மொழிந்த தீர்மானத்தைப் பற்றிக் கூறியுள்ளார். அதைப் படித்துப் பார்த்தாலே ஏதோ சம்பிரதாயத்துக்காக, சமாதானத் தொனியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் போலத் தான் இருக்கிறது. இழந்த உரிமையை மீட்கக் கூடிய போராட்டத் தொனியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் போல இல்லை.

மேலும், "கச்சத்தீவை தாரை வார்ப்பது தொடர்பாக, மத்திய அரசிடம் இருந்து எந்த சூசகமான தகவலும் அரசுக்கு வரவில்லை' என்று அப்போது கருணாநிதி கூறினார்.

கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி திமுக சார்பில் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்துப் பேசினார் கருணாநிதி. அப்போது, "ஒவ்வொரு பேச்சுவார்த்தையிலும் இந்தியா கச்சத்தீவை விட்டுத் தரக் கூடாது என்ற கருத்து தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது' என்று கடந்த 1974-ல் சட்டப் பேரவையில் தீர்மானத்தின் மீது தான் பேசியதாக கூறியிருக்கிறார்.

இந்தப் பேச்சில் இருந்தே, கச்சத் தீவை தாரை வார்க்க இந்தியா தயாராகி விட்டது என்பது முன்கூட்டியே கருணாநிதிக்கு தெரிந்திருப்பது தெளிவாகிறது.

நாடு தழுவிய போராட்டம்... 1974-ல் இந்தியா-இலங்கை ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பே, இதை எதிர்த்து ஒரு நாடு தழுவிய போராட்டத்தை கருணாநிதி நடத்தி மத்திய அரசுக்கு எச்சரிக்கை கொடுத்திருக்க வேண்டும். அப்படிச் செய்தால், 1974-ல் ஒப்பந்தம் நிச்சயமாக ஏற்பட்டு இருக்காது.

கண்டும் காணாமல் இருப்பது, முதல்வர் கருணாநிதிக்கு கை வந்த கலை. எனவேதான், கச்சத்தீவை புனிதப் பகுதியாக இலங்கை அரசு அறிவிக்க இருப்பதை உடனடியாக மக்களின் கவனத்துக்கும், மத்திய அரசின் கவனத்துக்கும் எடுத்துச் சென்றேன்.

இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி வழங்குவது குறித்து கூறியவுடன், இந்தப் பிரச்னையில் மாநில அரசை மத்திய அரசு கலந்து ஆலோசிக்காது என்றார் கருணாநிதி.

கச்சத்தீவை தாரை வார்த்தது, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்காதது ஆகியன அவரது ஆட்சியில்தான்.

அனைத்துத் தமிழர்கள் மீதும்... இலங்கைத் தமிழர் மீதும், கச்சத்தீவு மீதும் ஏன் இவ்வளவு அக்கறை என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

பத்தாண்டு காலம் முதல்வராக பதவி வகித்தும், மிகப் பெரிய கட்சியின் பொதுச் செயலாளராகவும் உள்ள எனக்கு இலங்கைத் தமிழர்கள் உள்பட அனைத்துத் தமிழர்கள் மீதும், தமிழர்களின் உரிமைகளை மீட்பதிலும் அக்கறை உண்டு.

ஆதரவை வாபஸ் பெற்றிருந்தால்... இலங்கைத் தமிழர்களை அழிக்க இலங்கை ராணுவத்துக்கு ஆயுதங்களையும், நவீன சாதனங்களையும் அளிக்க உறுதுணையாக நான் இருந்தேனா?

இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் மத்திய அரசு இலங்கை ராணுவத்துக்கு உதவி செய்ததைக் கண்டித்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்த வந்த ஆதரவை கருணாநிதி திரும்பப் பெற்றிருந்தால், மத்திய அரசு கவிழ்ந்து இருக்கும். தமிழர்கள் அழிக்கப்பட்டு இருக்க மாட்டார்கள்.

இலங்கைத் தமிழர்கள் மீது அந்த நாட்டு ராணுவம் குண்டு மழை பொழிகிறது. இந்த நிலைமைக்கு யார் காரணம்? நிச்சயம் கருணாநிதிதான். இதை யாராலும் மறுக்க முடியாது'' என்று தனது அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

March 11, 2009

உரத்த சிந்தனைகள் 1 - போரும் மனித உரிமைகளும்

ஆர். ஹரிஹரன்

லங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் மூன்றாண்டுகளாக நடந்துவரும் ஈழப்போரில் மக்களுக்குப் பல அடிப்படை உரிமைகள் இரு தரப்பினராலும் அடிக்கடி திட்டமிட்டு பறிக்கப் படுகின்றன. இவற்றில் முக்கியமாக எழுத்து மற்றும் பேச்சு சுதந்திரம், கலாச்சாரத் தனித்தன்மை, தங்கள் மொழி மற்றும் எண்ணங்களுக்கான அங்கீகாரம் எல்லாமே அடங்கும். விடுதலைப்புலிகள் தங்கள் இயக்கத்தை ராணு அடிப்படையில் இயக்குவது போர் மனப்பான்மையை வளர்க்கிறது. அதுபோலவே இலங்கை அரசு தனது ராணுவத்தின் அத்து மீறல்களைக் கண்டுகொள்ளாததும் ராணுவக்கலாச்சாரத்தின் தாக்கத்தை அதிகரிக்கிறது. அதனால் இரு தரப்பும் போரின் கட்டாயங்களுக்காக சில ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதையும் மக்கள் ஒப்புக் கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஏனோ தெரியவில்லை, போரும் மனித உரிமைகளும் ஒன்றை ஒன்று நன்கு புரிந்து வைத்திருந்தாலும், ஒத்துப் போவதில்லை. இதன் காரணத்தை அறிய ஆழ்ந்த சிந்தனை எதுவும் தேவையில்லை. போர் என்பதே தனி மனிதனின் அடிப்படை உரிமைகளான உயிருக்கும் உடமைகளுக்கும் எதிரியாக உபயோகப்படுத்தப் படும் உபகரணம்.

போர் புரியும் சிப்பாய் தனது பயிற்சிக் காலத்திலேயே ராணுவச்சட்டத்திற்குப் பணிந்து சில அடிப்படை உரிமைகளை ராணுவத் தலைமையிடம் ஒப்படைத்து விடுகிறார். அவருக்கு ஜனநாயக உரிமைகள் ஓரளவு ஒடுக்கப்படுகின்றன. முக்கியமாக தனது கருத்துக்களை பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லும் பேச்சுரிமையை அவர் இழக்கிறார். அவர் தனது பயிற்சிக் காலத்தில் சுய சிந்தனைகளை ஓரம் கட்டிவிட்டு, ராணுவம் கட்டளையிட்டதை அப்படியே நிறைவேற்றவேண்டும் என்ற உணர்வை ஒரு கிளிப்பிள்ளையப் போல அவரைத் திரும்பத் திரும்பச் சொல்ல வைத்து அதைப் பசியையும் உறக்கத்தையும் போல உடலுடன் இரண்டறக் கலந்ததாக்கி விடுகிறது ராணுவம். ஏற்கனவே கிராமப்புறச் சூழலில் வளர்ந்த அவருக்கு சிறு வயது முதலாகவே பல அடிப்படை மனித உரிமைகளை ஜாதி அல்லது பொருளாதர அடிப்படையில் சமூகம் மறுத்திருக்கிறது. ஆகவே அவருக்கு ராணுவம் அவருடைய அடிப்படை மனித உரிமைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பெரிய இழப்பாகத் தோன்றுவதில்லை.

அப்படிப் பட்ட அவருக்கு பயிற்சிக் காலத்தில் தனது குறிக்கோளுக்காக எதிரியைக் கொல்ல வேண்டும், எதிரியின் உடமைகளை அழிக்கவேண்டும் என்ற ராணுவ சித்தாந்தம் போதிக்கப்படுகிறது. அதற்கான போர்த் திறமைகளை அவருக்கு கற்பிக்கிறார்கள். வலிமையே ராணுவ நாகரீகம், மென்மை பெண்களுக்கு அழகு ராணுவ வீரனுக்கு அல்ல என்று அவருடைய நண்பர்களும் சமூகமும் அவருக்குப் போதிக்கிறது. அதனால்தான் ராணுவக்காரன் என்றால் தடலடி செய்பவன் என சமூகம் தனக்குத்தானே கற்பித்துக் கொள்கிறது. அதையே சிப்பாயும் திடமாக நம்புகிறார். ஆகவே பொதுவாக அவர் சரியாக எதையும் செய்து முடிக்க வேண்டும் என்ற ஒரே ஒரு குறிக்கோளை தனது வாழ்க்கையின் அடிப்படையாகக் கொள்கிறார். ஆகவே அவரது போர்க்காலச் செயல்களில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்று குறை கூறுவோரை ராணுவமே பெரும்பாலும் நம்பத்தயராவதில்லை.

இத்தகைய மனப்போக்குக்கு ஒரு நல்ல உதாரணம் இலங்கை பாதுகாப்புத்துறை காரியதரிசியாகப் பணியாற்றும் முன்னாள் ராணுவ கேர்ணலாயிருந்த திரு கோடபாயா ராஜபக்சஅவர்களே. அவர் ராணுவத்தின் மனித உரிமை மீறல்களைப் பற்றிக் குறைகூறுவோரை எள்ளி நகையாடி, இவர்கள் எல்லோரும் நாட்டின் எதிரிகள், விடுதலைப் புலிகளுக்குத் துணை போகும் தேச விரோதிகள் என்ற பல முறை வர்ணித்திருக்கிறார். அத்தகைய மெத்தனமான போக்குக்கு முக்கியமான காரணம் அவருடைய ராணுவப் பின்னணியே என நம்புகிறேன். மேலும் அரசியல் மற்றும் அவருடைய பதவியும் மற்ற காரணங்களாயிருக்கலாம்.

விடுதலைப் புலிகளின் போக்கும் இந்த அடிப்படை மனப் பான்மையிலிருந்து மாறுபட்டதல்ல. தமிழ் ஈழத்தைப் பெற பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கே தெரியும் மற்றவர்கள் அதற்குப் பணிந்தே ஆகவேண்டும் என்று அவர்கள் திடமாக நம்புகிறார்கள். ஏதோ நமது உரிமைகளுக்காக இவர்களாவது போரிட முன்வருகிறார்களே என்று தனி ஈழ நாட்டில் திடமான ஆர்வம் காட்டுவோர் - அவர்களே சிங்கள ராணுவம் மனித உரிமைகளை மீறுகிறது என்று கூக்குறல் எழுப்பினாலும் - விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்களைக் கண்டும் காணாமலும் இருந்து விடுகின்றனர். தமிழ் ஊடகங்களில் அத்தகைய செய்திகள் பெரும்பாலும் ஒதுக்கப்படுவதன் காரணமும் இத்தகைய மனப்போக்கே.

போர்க்காலத்தில் ராணுவத்தைப் பற்றிக் குறை கூறுவது ராணுவ வீரர்களின் மனதிடத்தைப் பாதிக்கும் என்பதில் ஓரளவு உண்மை இருக்கிறது. ராணுவ வீரன் போரில் தன் உயிரைப் பயணம் வைத்து போரில் ஈடுபடாத மக்களைக்காக்கிறான். அது அவனது அடிப்படைக் கடமையாகும். ஆகவே அத்தகைய குறிக்கோளோடு அவன் போரில் ஈடுபடும்போது கட்டாயம் போரில் சிலரின் உயிர்க்கொலைகளும் உடமை இழப்புக்களும் நிகழும் என்பது பொதுவாக மக்களுக்குத் தெரிந்த விஷயம். ஆகவே அவை நேரும்போது ஏன் சமூகம் கொந்தளிக்கிறது என்று அவனுக்கு விளங்குவதில்லை. அதனால் மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பேசுவோரை எல்லாம் எதிரிக்குத் துணை போனவர்கள் என்ற எண்ணம் ராணுவத்தினரினிடையே பரவலாக உள்ளது.

மனித உரிமைகள் போரிலும் சரி, அமைதிக்காலத்திலும் சரி, கட்டாயம் மதிக்கப்பட வேண்டியவையாகும். அதுவே மனித நாகரீகத்துக்கும் ஜனநாயகத்துக்கும் அடிகல்லாகும். ஆகவே போராயிருந்தாலும் அதில் நாட்டுக்காகச் சேவைபுரியும் ராணுவ வீரனாயிருந்தாலும் அல்லது அப்போரை நடத்த வழிகாட்டும் அரசியல் தலைமயும் மனித உரிமைக்கு அதிக இழப்புக்கள் நேராதவாரு, ராணுவ வீரர்களுக்கு அதன் அடிப்படையை விளக்க வேண்டும். ஆனால் போர் வீர ர்களுக்கு அத்தகைய பேச்சுக்களில் நம்பிக்கை பிறக்கவேண்டுமென்றால் சமூகம் அதன் எல்லா அங்கங்களிலும் மனித உரிமையை மதிக்கும் கலாச்சாரத்தைக் கொண்டுவரப் பாடுபட வேண்டும். இல்லாவிட்டால் ராணுவத்திற்கு இதெல்லாம் ஏட்டுச்சுரைக்காய்தான் என்று தன்னிச்சையாகச் செயல்படும். அது பெரும் இழப்பாகும்.

மேலும் 'ஏரியா வெபன்' (அதாவது போரிடுவோரைக் குறியிடாமல் ஒரு பகுதியையே அழிக்கும்) என்று கூறப்படும் ஆயுதங்களையும் வெடிகுண்டுகளையும் உபயோகிப்பதை அரசு ஒரு கொள்கையாகக் கையாளவேண்டும். உதாரணமாக தீவிரவாத இயக்கங்கள் தன் நாட்டு மக்களிடையே ஒளிந்திருந்து தங்கள் தாக்குதலை நடத்துகின்றன. அத்தகைய சூழ்நிலையில் விமானத்திலிருந்து குண்டுமாறி பொழிவது அப்பாவி மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பேராபத்த்தை விளைவிக்கும். ஆகவேதான் இந்திய ராணுவம் உள்நாட்டுப் போர்களில் விமானப் படையைத் தாக்குதலுக்கு அதிகபட்சம் உபயோகிப்பதில்லை.

March 08, 2009

ஜெயலலிதா: 'தமிழர்களின் காவலர்' கலைஞர் கருணாநிதி, ஈழத் தமிழர்களை காக்கத் தவறிவிட்டார்

'தமிழர்களின் காவலர்' என தன்னை அழைததுக்கொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, ஈழத் தமிழர்களை காக்கத் தவறிவிட்டார் என்று அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

Jeya0309O.jpg

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா-படம்: Jerome.K

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (08.03.09) ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

2008 ஆம் ஆண்டு தொடக்கத்தில், சிறிலங்கா இராணுவத்திற்கு ஆயுதங்களையும், நவீன சாதனங்களையும் இந்திய அரசாங்கம் அனுப்பியதை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காண்பித்தன. ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை காங்கிரஸ் தலைமையிலான, தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மறுக்கவில்லை.

பின்னர், இந்திய பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும், பாரதப் பிரதமருக்கு மிக நெருக்கமானவர்களும் இலங்கைக்கு சென்று வந்த தகவலையும் ஊடகங்கள் வெளிப்படுத்தின. இந்தச் செய்திகளையும் மத்திய அரசு மறுக்கவில்லை. தி.மு.க.வும் இது குறித்து எந்த ஆட்சேபனையும் எழுப்பவில்லை.

இலங்கைத் தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் கருணாநிதியும் இதை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. அமைச்சர்கள் பதவி விலகவுமில்லை; பதவி விலகப் போவதாக மத்திய அரசை மிரட்டிக் கூட பார்க்கவில்லை.

இந்தக் கேள்விகளை எல்லாம் நான் வினவிய போது, இது மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் வருகிறது என்பதும், இது குறித்து மத்திய அரசு மாநில முதலமைச்சரை கலந்து ஆலோசிக்கத் தேவையில்லை என்பதும் கூட எனக்குத் தெரியவில்லை என்று என்னை கேலி செய்தவர் தான் சிறுபான்மை தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி.

இருப்பினும், அதே கருணாநிதி இப்போது, இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக மூன்று தீர்மானங்களை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்! இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து கருணாநிதி கவலைப்படுவதாக தெரியவில்லை என்று அவர் மீது குற்றம் சாட்டும் போது, "இது மத்திய அரசின் பொறுப்பு" என்றும், "மாநில அரசிற்கு எந்தவிதமான பங்கும் இல்லை" என்றும் தெரிவிக்கிறார்.

ஆனால், இதை வைத்து அரசியல் ஆதாயம் அடைய வேண்டும் என்று விரும்பும் போது, இந்தப் பிரச்சினையை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு கொண்டு வருகிறார் கருணாநிதி. கருணாநிதியின் செயல், தப்பித்து ஓடும் முயலுடன் சேர்ந்து தானும் ஓடி, அதே சமயத்தில் அதனை வேட்டையாடி துரத்துகின்ற நாய்களுடன் தானும் சேர்ந்துகொண்டு வேட்டையாடுவது போலவும் உள்ளது.

அதே நேரத்தில், தி.மு.க. மத்திய அரசில் அங்கம் வகிக்கின்ற ஒரு கட்சி என்பதை மிகவும் சாமர்த்தியமாக விட்டுவிட்டு மறைக்கப் பார்க்கிறார் கருணாநிதி.

சென்ற வருடம் ஒரு மாத கால இரகசிய பயிற்சியை நூற்றுக்கணக்கான சிறிலங்கா இராணுவ வீரர்கள் அரியானா மாநிலத்தில் மேற்கொண்டார்கள்! பயிற்சியை முடித்த சில சிறிலங்கா இராணுவ வீரர்களின் பேச்சுக்கள் அடங்கிய தொகுப்பு உட்பட இந்தப் பயிற்சி குறித்து 'ஜெயா' தொலைக்காட்சி வெளிச்சம் போட்டுக் காட்டியது.

இது எனக்கு தெரிந்து உடன், நான் இதை எதிர்த்து குரல் கொடுத்தேன். ஆனால் கருணாநிதியிடமிருந்தோ அல்லது அவரது ஆதரவாளர்களிடமிருந்தோ எந்த எதிர்ப்பும் வரவில்லை. இந்தப் பயிற்சி அதிநவீன மற்றும் தலைசிறந்த சாதனங்களை பெற்றுள்ள இந்திய இராணுவத்தால் அளிக்கப்பட்டது.

இந்திய அரசின் முழு ஒப்புதலோடு தான் இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது என்பது வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். வேறுவிதமாக சொல்ல வேண்டுமென்றால், இலங்கையில் நடத்தப்படும் இனவெறி தாக்குதல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முழு ஆதரவோடு மட்டுமல்லாமல், முழு ஈடுபாடு கொண்ட ஆதரவுடன் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையிலும், எங்களைப் பொறுத்த வரையிலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்றால், "காங்கிரஸ் மற்றும் தி.மு.க." என்றுதான் அர்த்தம். எங்களைப் பொறுத்த வரையில், தி.மு.க. என்றால் கருணாநிதி. இலங்கைத் தமிழர்களின் படுகொலைக்கு கருணாநிதியும் ஒரு முக்கியக் காரணம்.

இந்தப் படுகொலையில் முக்கியப் பங்காற்றிவிட்டு, இந்தப் படுகொலையை எதிர்த்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றுகிறார் சிறுபான்மை தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி! யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் கருணாநிதி? இந்த மூன்று தீர்மானங்களில் கடைசி தீர்மானத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்கவில்லை என்று கூறுகிறார் கருணாநிதி.

இது போன்ற பித்தலாட்ட பாசாங்கு தீர்மானங்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஏன் ஆதரவு தர வேண்டும்? மக்களை ஏமாற்றுவதற்காகவே நடத்தப்படும் கண்துடைப்பு நாடகத்திற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஏன் ஆதரவு தர வேண்டும்?

ஒரு நாட்டிற்கு மற்றொரு நாடு ஆயுதங்களை அளிப்பதும், பயிற்சி கொடுப்பதும் புதுமையானது அல்ல. ஆனால் இலங்கையை பொறுத்த வரையில், யார் தாக்கப்படுகிறார்கள்? இந்த ஆயுதங்களும், பயிற்சியும் யாருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன? என்பது தான் கேள்வி.

சிறிலங்கா அரசு தன்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும், இராணுவ பலத்தையும் அங்குள்ள தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறது என்பது அனைவரும் நன்கு அறிந்த ஒன்றாகும். விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகள் மீது தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது என்று சிறிலங்கா அரசு கூறலாம்.

ஆனால், இறந்தவர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது, விடுதலைப் புலிகள் மீது மட்டும் நடத்தப்படும் தாக்குதல் அல்ல, பெரும்பாலான அப்பாவித் தமிழர்களின் மீது நடத்தப்படும் தாக்குதல் இது என்பது தெளிவாகிறது.

இதில் உள்ள முக்கியமான சாராம்சம் என்னவென்றால், இந்திய ஆயுதங்களும், தோட்டாக்களும், வெடி மருந்துகளும். அப்பாவி இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இன்று பயன்படுத்தப்படுகின்றன. இது மட்டுமல்லாமல், சிறிலங்கா கடற்படை, கடலில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களையும் சுட்டு வீழ்த்துகிறது.

அண்மையில், இந்தியாவிற்கு சொந்தமாக இருந்து, பின் கருணாநிதியின் ஆசீர்வாதத்துடன் முந்தைய காங்கிரஸ் மத்திய அரசால் சிறிலங்காவுக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவில் இந்திய மீனவரை சிறிலங்கா கடற்படை சுட்டுக்கொன்றது. விதியின் திருவிளையாடலை என்னவென்று சொல்வது!

தொடர்ந்து, இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுவந்த போதிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இந்தக் கொடுமைகளை எல்லாம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், சிறிலங்கா அரசுக்கு ஆயுதங்களை அனுப்பியும், நவீன சாதனங்களை அளித்தும், சிறிலங்கா இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்தும், சிறிலங்கா அரசுடன் ஒத்துழைக்கும் ஒரு அரசாக இருந்துள்ளது.

சக்தி வாய்ந்த இலாக்காக்களை தங்கள் வசம் வைத்துள்ள 10 "கனம் பொருந்திய" தமிழர்கள், இந்திய அரசின் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார்கள். இந்திய அரசில் தி.மு.க. மிக முக்கிய அங்கம் வகிக்கிறது.

தி.மு.க. தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொண்டிருந்தால், மத்திய அரசு கவிழ்ந்திருக்கும். தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தனது நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் வளமான இலாக்காக்களை பெறுவதற்காக "ஆதரவு வாபஸ்" என்ற ஆயுதத்தை வெற்றிகரமாக பயன்படுத்திக் கொண்டவர் தான் கருணாநிதி.

ஆனால், "தமிழர்களின் காவலர்" என்று தன்னைத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கருணாநிதி, தமிழர்கள் பாதுகாப்பு, தமிழர்கள் நலன் என்று வரும் போது. வாய்மூடி மௌனியாக காட்சி அளிப்பார் என்பதை அனைவரும் அறிவர்.

மக்களைப் பற்றிய அக்கறை கருணாநிதிக்கு இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். விடம் போல் ஏறும் விலைவாசியை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கையையும் கருணாநிதி எடுக்கவில்லை. சட்டத்தின் ஆட்சியை தமிழ்நாட்டில் நிலைநாட்ட எந்தவித நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை.

கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களும், தி.மு.க.வினரும் தமிழ்நாட்டில் சட்டத்தை சீர்குலைக்கும் வன்முறையாளர்களாக உருவாகியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தேர்தல் என்பது மாபெரும் கேலிக்கூத்தாகிவிட்டது. தி.மு.க.வினர்.

அப்பாவி பொதுமக்களின் மீது ரவுடிகளையும், குண்டர்களையும் ஏவி விட்டு தாக்குதல் நடத்துவதும், காவல்துறையினர் மேலிடத்து நிர்ப்பந்தம் காரணமாக வன்முறைகளை கைகட்டி வேடிக்கை பார்ப்பதும் தான் வாடிக்கையான நடைமுறை ஆகிவிட்டன.

கருணாநிதி குடும்பத்தினரின் எதேச்சாதிகாரம் தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகிறது. தமிழ்நாடு என்ற மாநிலமே கருணாநிதி குடும்பத்தினரின் தனி இராஜ்ஜியம் போல் ஆகிவிட்டது. குடும்பத்தினர் ஒவ்வொருவரும், குறுநில மன்னர்கள் போல் நடந்துகொள்கின்றனர்.

கருணாநிதியின் மகன் ஸ்டாலின் அதிகார பூர்வமாகவே "காத்திருக்கும் முதலமைச்சர்" என்று அழைக்கப்படுகிறார். கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி ஏற்கெனவே தனக்குத் தானே "தென் தமிழகத்தின் முதலமைச்சராக" முடிசூட்டுக் கொண்டு விட்டார்.

அழகிரியின் ஒப்புதல் இல்லாமல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கருணாநிதியோ, மாநில அரசு அதிகாரிகளோ எதையும் செய்ய முடியாது. கருணாநிதியின் மூன்றாவது மனைவியாகிய துணைவிக்கு பிறந்த மகள் கனிமொழி டெல்லிக்கு கருணாநிதியால் அவரது தூதுவராக நியமிக்கப்பட்டவர்.

மாநிலத்தின் வளங்களை கொள்ளையடிப்பதில் இதர மகன்களும், மகள்களும், பேரன்களும், பேத்திகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இத்தனை முக்கியமான காரியங்களுக்கெல்லாம் தலைமை தாங்க வேண்டியுள்ள கருணாநிதியிடமிருந்து, இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கோ அல்லது வெளிநாட்டில் உள்ள தமிழர்களுக்கோ எதுவும் செய்வார் என்று எதிர்பார்ப்பதில் நியாயமில்லை.

தனது குடும்ப உறுப்பினர்களுக்காகவோ அல்லது தி.மு.க. அனுதாபிகளுக்காகவோ டெல்லியில் வளமான பதவிகளை பெறவேண்டும் என்றால் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தவும், மத்திய அரசை பயமுறுத்தவும் கருணாநிதி தயங்கமாட்டார் என்றும், இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை என்றால் சென்னையில் உட்கார்ந்து கொண்டு அறிக்கைகள் விடுவதோடு நிறுத்திக் கொள்வார் என்றும் நான் குறிப்பிட்டிருந்தேன்.

'தமிழர்களின் காவலர்' என்ற கருணாநிதியின் முகத்திரையை என்னுடைய அறிக்கைகள் கிழித்தவுடன், அதிலிருந்து நழுவி வெளிவருவதற்காக, இலங்கைத் தமிழர்கள் குறித்த கொள்கையில் நான் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதாக என்மீது குற்றம் சாட்டுகிறார்.

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் என்னுடைய நிலைப்பாட்டை அனைவரும் அறிவர். இலங்கையில் உள்ள தமிழர்கள் அங்குள்ள சிங்களவர்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற தமிழர்களின் உரிமைக் குரலை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சம உரிமை ஆகிய இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம்.

இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய போராட்டத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். சிறிலங்கா அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, சுயநிர்ணய அதிகாரம் பெற்ற தமிழர் நாடு வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.

ஆயிரக்கணக்கான அப்பாவி ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் இறக்க காரணமான, ஏற்கெனவே திசை மாறிப்போன ஆயுதம் ஏந்திய போராட்டத்தை தான் நாங்கள் எதிர்க்கிறோம். இந்த ஆயுதம் ஏந்திய போராட்டத்தின் விளைவாக முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் தமிழக மண்ணில் படுகொலை செய்யப்பட்டது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

இவை இரண்டையும் ஒன்று சேர்த்து இந்தப் பிரச்சினையை குழப்ப முயற்சி செய்கிறார் கருணாநிதி.

தமிழகத்தின் முதலமைச்சர் என்ற முறையிலும், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் முக்கியமான கட்சியின் தலைவர் என்ற முறையிலும், பாரதப் பிரதமர், சிறிலங்கா அரச தலைவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அங்கு தமிழர்களின் மீது நடத்தப்படும் இனப் படுகொலையை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி பேச வேண்டும் என்று, பிரதமரை வலியுறுத்த வேண்டும் என்று நான் கருணாநிதிக்கு ஆலோசனை கூறினேன்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக, தமிழக மக்கள் அனைவரும் பிரதமர் அலுவலகத்திற்கு தந்திகள் அனுப்பி பாரதப் பிரதமரை வற்புறுத்த வேண்டும் என்ற மிக அற்புதமான, அதிமேதாவித்தனமான எண்ணத்தை வெளிப்படுத்தினார் கருணாநிதி!

கருணாநிதியின் அறிவுரையை மக்கள் ஏற்கவுமில்லை, அதைப் பின்பற்றவுமில்லை என்பதை உணர்ந்த கருணாநிதி, பாரதப் பிரதமரை வற்புறுத்த, மத்திய ஆளும் கூட்டணியிலிருந்து விலக வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதையும் செய்யத் தயார் என்று அறிவித்தார். தன்னுடைய அன்பு மகள் உட்பட அனைத்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் பதவி விலகல் கடிதங்களை தானே பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார் கருணாநிதி.

ஆனால், நாடாளுமன்ற மக்களவை தலைவருக்கோ, அல்லது மாநிலங்களவைத் தலைவருக்கோ அக்கடிதங்களை அனுப்பவில்லை. அதற்கு பதிலாக அவர் நிர்ணயித்த கெடுவான கடைசி தேதியை முடிவுக்கு வரவிட்டு, பின்னர் அந்த பதவி விலகல் கடிதங்களை தானே கிழித்து போட்டுவிட்டார் கருணாநிதி.

2004 ஆம் ஆண்டு மே மாதம் கருணாநிதி நேரில் டெல்லி சென்று, டி.ஆர். பாலுவுக்கு கப்பல் போக்குவரத்துத் துறை ஒதுக்கீடு செய்யப்படும் வரை, அமைச்சர் பதவி கிடைத்த ஏழு தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய அமைச்சர் பொறுப்புகளை ஏற்கக் கூடாது என்று கட்டளையிட்டார்.

கப்பல்துறை பணம் ஈட்டுவதற்கு ஒரு முக்கிய துறையாக இருப்பதனால், கருணாநிதிக்கு அந்த இலாகா இன்றியமையாத ஒன்றாகத் தேவைப்பட்டது.

தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தலைவர் திரு. கே. சந்திரகேசகர் ராவ் வினோதமாக தானாகவே முன்வந்து டி.ஆர். பாலுவுக்கு அந்த இலாகாவை விட்டுக் கொடுத்ததினால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே கவிழாமல் காப்பாற்றப்பட்டது.

தன் சுயநலத்திற்காக என்றால், கருணாநிதியினால் இதை செய்ய முடியும். ஆனால், ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரச்சனை என்றால், பொது மேடைகளிலிருந்து புனிதரைப் போல் ஞானப் பாடம் நடத்தும் தொனியில் முழங்குவார்; மக்களை தந்தி அனுப்ப ஆணையிடுவார்! அல்லது மாநில சட்டமன்றப் பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றுவார். இது மட்டும்தான் அவருக்கு தமிழ் மக்களின் மேல் இருக்கும் பற்றும், அக்கறையும்!.

தி.மு.க. தலைமையின் தூண்டுதலால் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது, திரைப்பட இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீர், இந்திய நாட்டிற்கு எதிராக பேசியதற்காக கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் இந்த இரு இயக்குனர்களும் முதலமைச்சர் கருணாநிதியால் சென்னையில் தொடக்கப்பட்ட மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆவார்கள்.

சுருங்கச் சொல்லப்போனால் எந்த வார்த்தைகள் அவர்களை இன்று சிக்கலில் மாட்டிவிட்டதோ, அவை யாவும் முதலமைச்சர் கருணாநிதியின் ஆசியும் ஒப்புதலும் பெற்றவை தான். பின்னர், இந்த இரு இயக்குனர்களும் விடுவிக்கப்பட்ட பிறகு, சீமான் மீண்டும் கைது செய்யப்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சீமான் கூறிய அனைத்தையும், கருணாநிதியும் மொழிந்திருக்கிறார். சீமான் என்னென்ன பேசினாரோ, அவற்றை எல்லாம் கருணாநிதியும் கூறியிருக்கிறார். ஆனால், சீமான் சிறையில் இருக்கிறார். கருணாநிதியோ, தலைமைப் பீடத்தில் முதலமைச்சராக உட்கார்ந்து கொண்டு எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறார்.

என்ன வயிற்றெரிச்சல்! என்ன வினோதம்! கருணாநிதி மேல் யாராவது நம்பிக்கை வைத்தால், இது தான் அவர்களுக்கு கிடைக்கும் தண்டனையாகும்.

இலங்கையில் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் சண்டையில், ஒன்றும் அறியாத அப்பாவி தமிழ் மக்கள் இடம் பெயர்ந்திருக்கிறார்கள். அவர்கள் வீடு இன்றி அகதிகளாக தங்களுடைய நாட்டிலேயே அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உணவு, உடை, மருந்து எதுவுமின்றி, தங்க வசதியுமின்றி தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த அவல சூழ்நிலைக்கு பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பலமாதங்களாக நிலவுகின்ற சூழ்நிலை இது தான். இப்படி அல்லல்படும் மக்களுக்கு, தந்தி மூலமாகவோ, அல்லது இந்திய தூதரகத்தின் கீழ்மட்ட அதிகாரியை கடிந்து கொள்வதின் மூலமாகவோ, ஆயிரக்கணக்கில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு எந்தவித நிவர்த்தியும் கிடைக்காது.

இப்படி துன்பத்தில் சிக்கிக் கொண்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்பதில், இந்தியாவில் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கோ, அல்லது மாநிலத்தில் ஆட்சி செய்பவர்களுக்கோ எள்ளளவாவது அக்கறை இருக்க வேண்டாமா?

இலங்கையில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு இந்திய அரசு உணவு, உடை மற்றும் மருந்துககளை ஏன் அனுப்பவில்லை? மனிதாபிமான அடிப்படையில் இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக உதவி புரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதைத்தான் மாபெரும் தோல்வி என்று நான் சுட்டிக்காட்டுகிறேன்.

இந்த காரணத்தினால் தான், மன்மோகன் சிங்கின் மத்திய அரசும், கருணாநிதியின் மாநில அரசும் தமிழ் மக்களின் மேல் உண்மையான அக்கறை செலுத்தவில்லை என்று நான் கூறுகிறேன்.

இன்று நாம் உண்ணாநிலை இருப்பதினால், பசியினால் வாடும் இலங்கைத் தமிழர்களின் வயிறு நிரம்பப்போவதில்லை. இந்த உண்ணாநிலை அறப் போராட்டம் ஒரு அடையாளமே. இந்த உண்ணாவிரதத்தின் மூலம், இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் துயர நிகழ்வுகள் குறித்து, தமிழ் நாட்டு மக்கள் மிகவும் கவலை அடைந்து இருக்கிறார்கள் என்பதையும்; இதுபோன்ற சம்பவங்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் நடந்து கொள்கின்ற விதம், தமிழக மக்களை வருத்தம் அடைய வைத்திருக்கிறது என்பதையும்; தமிழக அரசுக்கும், இந்திய அரசுக்கும் தெரியப்படுத்துகிறோம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதி என்ற முறையிலும், இலங்கைத் தமிழர்களின் நிவாரணத்திற்காக நான் நிதி வசூல் செய்ய உத்தேசித்துள்ளேன். உண்ணாநிலை அறப் போராட்டங்கள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. அனைவரும் தாராளமாக நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.