Main

February 17, 2008

சமுதாய நலன் மற்றும் ஒருமைப்பாட்டில் மிக உயர் நிலையை அடைதல்

கொழும்பு, சைவ மங்கையர் கழக அதிபர் அமரர் செல்வி நாஹம்மாள் காசிப்பிள்ளை ஞாபகார்த்த உரை நிகழ்வில், இளைப்பறிய நீதியரசர் உயர்திரு சி.வி. விக்னேஸ்வரன் நிகழ்த்திய அறிமுக சொற்பொழிவின் தமிழாக்கம்:

இன்று எங்கள் பாத்திரங்கள் மாறிவிட்டன. இரண்டு வருடங்களுக்கு முன்னர் முதலாவது ஞாபகார்த்தக் கூட்டத்தை தலைமைவகித்த திருமதி துரைசாமி அவர்கள் இந்த வருட ஞாபகார்த்த உரையை வழங்க பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த உரையானது கடந்த இரு வருடங்களினூடக நெறிவடைந்துள்ளது. இந்த உரையின் முதலாவது காசிப்பிள்ளை ஞாபகார்த்த உரையை ஆற்றும் தருணம்-செல்வி காசிப்பிள்ளையின் மரணத்தின் போது அவருடன் நாங்கள் மிகவும் நெருக்கமாக இருந்த காரணத்தினால், அவரது வாழ்க்கை, அவரது சாதனைகள் அவ்வேளையில் எங்கள் சிந்தைகளை நிறைத்திருந்தது. சென்ற ஆண்டு செல்வி மதிவதனி பொன்னம்பலம், இரத்தினக் கைத்தொழிலில் அவரது அனுபவங்களைப் பற்றியும் செல்வி காசிப்பிள்ளை அதிபராக இருந்த போது அவரது பாடசாலை அனுபவங்களைப் பற்றியும் பேசினார். இந்த வருடம் 'பெண்ணும் மாறும் உலகமும் - இந்து மதத்தின் பதிலுரை' என்ற கருவை மையமாகக் கொண்டுள்ளது.

[அமரர் நாஹம்மாள் காசிப்பிள்ளை]

சமுதாயத்தில் ஓர் இந்துப் பெண்ணின் பாத்திரம் என்பது செல்வி காசிப்பிள்ளைக்கு மிகவும் பிடித்த விடயமாகும். அவர் அந்தக் காலத்தின் இந்து மத்தின் விழுமியங்களிலும் இந்தக் காலத்தின் சமுதாய நெறிகளிலும் சிரத்தை கொண்டிருந்ததுடன் இரண்டு நியமங்களினதும் ஓர் சந்தோசமான கல்வியை உருவாக்குவதில் மிகவும் கடினமாக உழைத்தார். இரண்டின் தோற்றப்பாடுகளிலும் இருக்கும் பேதங்களை அவர் நன்கு அறிந்திருந்தார். இந்துமத வாழ்க்கையில் ஆழமான சமய சிந்தனைகள் நடத்தைகள் என்பன, ஆண் அல்லது பெண்ணை தனித்தனியாக நோக்கவில்லை. ஆணும் பெண்ணும், குடும்பம், சமுதாயம், பொதுவில் மானிடத்தில் பரந்துபட்ட பாத்திரங்களை வகிக்க வேண்டியவர்களாக உள்ளனர். வாழ்க்கையின் நோக்கமானது சந்தோசமான பிள்ளைப் பராயத்தை (பிரம்மச்சாரியம்), மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கையை (கிரஹஸ்த), திருப்திகரமான துறவு வாழ்க்கையை (வானபிரஸ்த), மனம் நிறைந்த யோக வாழ்க்கையை (சந்நியாசம்) கொண்டிருத்தலே ஆகும். இந்த முறைமையில் ஒருவரது வாழ்க்கையை ஒருவர் ஒருவர் பூரணப்படுத்த ஆணும் பெண்ணும் பல பாத்திரங்களை வகிக்க வேண்டியிருந்தது. மனைவி பாதுகாக்கப்பட வேண்டியவளாகவும் வாஞ்சையுடன் நடாத்தப்பட வேண்டியவளாகவும் இருந்தாள். அவள் இல்லத்தைக் கொண்டு நடாத்தினாள். கணவனும் பிள்ளைகளும் வீட்டில் அவளைச் சுற்றித் திரளும் அதேவேளையில் மனைவியும் பிள்ளைகளும் வீட்டிலுள்ள ஆணை, குடும்பத்தின் மிக நெருக்கமான தலைவனாக பெருமிதத்துடன் நோக்கினர். வீட்டின் தலைவனுக்கு வீட்டின் தலைவி கொடுக்க எதிர்பார்க்கப்பட்ட மரியாதை கீழ்ப்படிவில் தங்கியிருந்தது. பொதுவில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான வயது வித்தியாசம் கூடுதலாக இருந்தது. மூத்தவர்களை மதிக்கும், கடமையில் சீரிய மதிப்பைக் கொண்ட ஓர் சமுதாயத்தின் இந்த மனப்பாங்கு கணவனின் விருப்புகள் மந்திரகோள் தேவைகளுக்கு மதிப்பளித்து இடங்கொடுக்க இளம் மனைவிக்கு இலகுவாக இருந்தது. காட்டில் துறவு அல்லதுவானபிரஸ்த வாழ்க்கையில், கணவன் கற்றலிலும் சிந்தனையிலும் நேரத்தை செலவிடும் போது, மனைவியானவள் அவரது தேவைகளையும் சௌகரியங்களையும் கவனிக்க வேண்டியவளாகின்றாள். கணவர் சிந்தனை மார்க்கம் அல்லது ஞானம் அல்லது சூட்சும அறிவு மார்க்கத்தைப் பின்பற்றும் போது, மனைவி கர்ம யோக மார்க்கத்தைப் பின்பற்றினாள். இவ்விரு சமய மார்க்கங்களும் ஒன்றைவிட ஒன்று தாழந்ததல்ல. கர்மயோகத்தைப் பின்பற்றிய சில பெண்கள் ஞானப் பரிணாமத்தின் உன்னத நிலையை அடைந்துள்ளார். திருவள்ளுவரின் மனைவி வாசுகியின் கதையை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

கொங்கனனார் என்னும் துறவி ஓர் சிறந்த சித்தாராக இருந்த போதும் அவர் கடுங் கோபக்காரனாக இருந்தார். ஒரு நாள் அவர் தியானத்திலிருந்த போது கொக்கு ஒன்று அவரின் மேலாகப் பறந்த போது அவரின் மேல் எச்சமிட்டது. கோபத்துடன் அந்தக் கொக்கை நோக்கிய போது அது எரிந்து சாம்பலாகியது. இந்த நிகழ்வின் பின்னர் இத்தகைய சக்தி வாய்ந்த சித்தர் பிச்சை கேட்டுத் திருவள்ளுவரின் வீட்டிற்குச் சென்றார். அதேநேரம் வாசுகி தனது கணவரின் தேவைக்கும் அவரது ப+ஜைக்கும் வேண்டிய நீரைக் கிணற்றிலிருந்து அள்ளிக் கொண்டிருந்தார். அவர் தனது கணவனுக்குச் செய்து கொண்டிருந்த கடமையை இந்தத் துறவிக்காக நிறுத்துவதாக இல்லை. அவர் துறவியை வீட்டினுள் அழைப்பதற்குச் சிறிது காலதாமதமாகிவிட்டது. கொங்கனனார் சினம் கொண்டு அவரை எரித்து விடுவது போன்று நோக்கினார். இந்த மாது சாந்தமாகவும் கம்பீரமாகவும் காணப்பட்டார். அவர் 'கொக்கென்று நினைத்தீரோ கொங்கனனாரே' என்று அவரை நோக்கி உரைத்தார். கணவனிற்கு சேவகம் செய்யும் இந்த பெண்ணிற்கு தனது ஆச்சிரமத்தில் தனிமையில் நடந்த நிகழ்ச்சி எவ்வாறு தெரியும் எனச் சித்தர் ஆச்சரியமடைந்தார். அவருக்கு வாசுகியின் முன்மை புரிந்தது, அவரை பதிவிதரை என்று கொண்டாடி தன் வழியே சென்றார். ஆச்சிரமத்தில் தனது கணவனிற்கு சேவை செய்த காரணத்தினாலேயே வாசுகி அத்தகைய சக்தியைப் பெற்றார்.

இது எவ்வாறு சாத்தியமாகியது? இற்றைக் காலத்தில் எம்மில் பலர், சத்தியசாய்பாபா போன்ற குருக்களை உண்மையான ஈடுபாட்டுடன் வழிபடும் போது அவர்களின் அருளைப் பெறுவதைப் போன்று அன்றைய காலத்தின் வாழ்க்கை வழி முறைகளில் தங்களது கணவன்மார்களை குரு ஸ்தானத்தில் வைத்து அவர்களிடம் அன்பும் நம்பிக்கையும் கொண்ட மனைவியர்களுக்கு அதிசயங்கள் பல நடைபெற்றன.

அருள் என்றால் என்ன என்பதனை நான் பலதடவை யோசித்திருக்கின்றேன். எனது முஸ்லீம், கிறிஸ்தவ, இந்து நண்பர்கள் பலர், தமது வாழ்வில் நடைபெற்ற அதிசயமான பல நிகழ்வுகளை முறையே அல்லா அல்லது யேசு அல்லது இந்து கடவுள்கள் அல்லது குருவிற்கு அர்ப்பணம் செய்வதை கண்டிருக்கின்றேன். பௌத்தராகிய காலம் சென்ற பலாங்கொட ஆணந்த மைத்திரி தேரர் சத்தியசாய்பாபாவின் அருளைப் பற்றி எடுத்தியம்பியுள்ளார். அருளாவது, அதிசய நிகழ்வுகளின் உச்ச நிலைக்கு இட்டுச் செல்லும், எமக்குப் புறம்பான அல்லது புறம்பான சக்தியினால் தூண்டப்பட்ட எம்மகத்தே நடைபெறும் செயன்முறைகளா? பல மதங்களை சார்ந்தோர் தமது கடவுள்கள் அல்லது குருவினைப் பற்றி இவ்வாறு பேசும் போது அதிசயங்கள் பலவற்றை நிகழ்த்தும் நம்பிக்கை எங்கள் அனைவரினுள்ளும் ஏதோவொரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றது போல் தோன்றுகின்றது.

நாம் இந்துக்களாகட்டும், கிறிஸ்தவர்களாகட்டும் அல்லமு முஸ்லிம்களாகட்டும் நாம் கொண்டுள்ள நம்பிக்கையே உண்மையில் அற்புதங்களை அனுபவிக்கச் செய்கின்றது. இராமகிருஷ்ண பரமஹம்சர் ஓர் கதை கூறுவார். ஓர் ஆற்றின் ஒரு பக்கத்தில் ஓர் குரு இருந்தார். அவர் சிறிது தற்பெருமை கொண்டவர். தன்னைத் தானே உயர்வாகக் கருதுபவர். மற்றக்கரையில் வசிக்கும் ஓர் இளம் பெண் ஆற்றைக் கடந்து வந்து குருவிற்குப் பால் கொண்டு வருவாள். ஒரு நாள் ஆறு பெருக்கெடுத்தது. பெண் காலதாமதமாக வந்தாள். குருவிற்கு கோபம் வந்தது. இறுதியாக அவள் வந்தடைந்த போது 'நீ என்னிடம் நம்பிக்கை வை;ததிருந்தால் ஆறு ஒரு வித ஆபத்துமின்றி அதனைக் கடந்து செல்ல வழிவிட்டிருக்கும். நம்பிக்கை இல்லாத காரணத்தினாலேயே இந்த காலதாமதம்' என்று அந்தப் பெண்ணை வைதார். பெண் அதிசயப்பட்டாள். குருவிடம் முழு நம்பிக்கை வைக்கத் தீர்மானம் எடுத்தாள். அடுத்த முறை பெரும் மழைகாரணமாக ஆற்றுநீர் சீற்றத்துடன் பாய்ந்தது. அவள் குருவை நினைத்து தியானித்தாள், நம்பிக்கையுடன் ஆற்றுக்குக் குறுக்காக நடந்தாள். ஆறு வழிவிட்டது.

குருவிற்கு அந்த பெண்ணைக் கண்டதும் ஆச்சரியமாகி விட்டது. 'இந்த சீரற்ற காலநிலையில் எவ்வாறு வந்தாய்' என்று குரு வினவினார். 'உங்களை வணங்கினேன்' உங்களில் நம்பிக்கை கொண்டேன். நான் ஆற்றைக் கடந்தேன் இதோ உங்கள் முன் நிற்கின்றேன்' என்றாள். குருவிற்கு அளவுகடந்த மகிழ்ச்சி. அவர் ஆறு;றங்கரைக்குச் சென்று பால்காரிக்கு வழிவிட்டதற்கு ஆற்றிற்க நன்றி செலுத்தினார். அந்தப் பெண்ணைப் போன்று கடப்பதற்கு ஆற்றில் இறங்கினார். ஆறு அவரை அடித்துச் சென்றது. அங்கு குரு முக்கியத்துவமல்ல. ஆனால் அந்தப் பெண் கொண்டிருந்த நம்பிக்கையே முக்கியமானது. இக்கதை நம்பிக்கை எம்முள் கொண்டுள்ள சக்தியை விளக்குகின்றது. அந்தப் பெண்ணிற்கு புறம்பாயிருந்த குரு அல்ல முக்கியமானவர். அந்தப் பெண்ணின் மனதினுள் நடைபெற்ற மாற்றமே அங்கு முக்கியமானது. அதனால் கணவர் முக்கியமல்ல. மனைவி கொண்டுள்ள நம்பிக்கையே முக்கியமானது.

பண்டைக் காலத்தின் கற்புக்கரசிகள் தங்கள் கணவன்மார்களில் எத்தகைய குறைபாடுகள் இருந்த போதிலும் அவர்களின் மேல் கொண்டுள்ள நம்பிக்கை அவர்களுக்குத் தங்களை அர்ப்பணிக்கும் மாட்சியே, அப்பெண்களை புறக்கணிக்க முடியாத, பெரும் சக்தி வாய்ந்தவர்களாக்கியது. காலம் மாறிவிட்டது. மனிதனுள் திருப்பதியடையும் தன்மை தொலைந்துவிட்டது. சமூகத்தில் ஒற்றுமை, குடும்பத்தின் நலன் என்பவற்றின் பரந்துபட்ட தோற்றப்பாடு அவரவரின் விருப்பத்திற்கேற்றவாறு எடுத்துக் கொள்ளப்படுகின்றது. கடமையின் சிறப்பு பற்றி ஒருவருக்கும் ஞாபகமில்லை. இந்தக் குடும்பங்கள் சமுதாயத்தின் வெளிப்புற சமுதாய அந்தஸ்துகளே முக்கியமாகிவிட்டது. ஒருவரது வாழ்க்கையை ஒருவர் பூரணப்படுத்தும் ஆண், பெண் பேதம் இப்பொழுது ஆண், பெண் சமத்துவத்தில் வந்து நிற்கின்றது. மேற்கத்தேய சமுதாயங்களில் பெண்கள் எழுப்பும் எதிர்ப்புக்களும் புரட்சிகளும் குடும்ப ஒன்றுகூடல்களில் பெண்களைத் துணையாக கருதாது, பாவித்து பின்னர் தூக்கி எறியும் தனிப்பட்ட சொத்தாகக் கருதும் மேற்கத்திய நாடுகளில் குறிப்பிட்ட சமூகத் தேவைப்பாடாக அமைகின்றது.

வாழ்வு பற்றி மேற்கத்திய, இந்திய கோட்பாடுகள் அடிப்படையில் வித்தியாசமானவை. பண்டைய கலாச்சாரத்தில் ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்தில் தொழிற்பட்டு அலகாக கருதப்பட்டான். ஆனால் இன்று கடந்த ஐந்து நூற்றாண்டுகளாக நிதர்சனமானவற்றுடன் ஈடுபடும் மேற்கத்திய மனங்கள் வேறுவிதமாக சிந்தித்தன. கேள்வி கேட்பதும் பதிலளிப்பதுமே அந்த விஞ்ஞான மூளைகளின் சின்னங்களாகும். பிரம்ம ஞானத்தின் முன்னணி பேச்சாளரும் அழகிய ஆன்மீக விழுமியங்களையுமுடைய பெரும் பெண்மணியுமான அனி பெஸன்ட் ஒருமுறை 'நான் 'என்ற அகங்காரமேமனதில் பிரதான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இந்த கீழ் நிலையிலுள்ள மனமே எல்லா இடமும் பேதங்களைக் காண்கின்றது. இந்த சிந்தனை அதிகரிக்க, 'நான் நானே' என்று தனிப்பட்ட பிரித்துப் பார்க்கும் உணர்வு அதிகரித்துப் 'நான் நானே', 'நீ நீயே', 'இது என்னுடையது', 'அது உன்னுடையது' - என்ற சுய சிந்தனை கிளைவிட்டு வளர்ந்தது. இந்த மனநிலை மேற்கத்திய ஆர்வமான சிந்தiனாயளர்களை 'நான்', 'என்னுடைய' என்ற உணர்வே மேன்மையானது என்று நினைக்க வைத்தது. தனிமையின் கொள்i, சுதந்திர மனிதன், தன்நம்பிக்கையுடைய தனிப்பட்ட மனிதன், தனது நன்மைக்காக அனைத்து சக்திகளையும் பிரயோகிக்கும் உரிமையுடைய தன்னந்தனியனாக நிற்கும் சுதந்திரமான ஒற்றை மனிதனாகும்.

ஜூன் ஜேகஸ் ரொசியு அவரது உடன்படிக்கையில் இந்த மனிதக் கொள்கையை உரிமைகளினால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் சுதந்திர மனிதன் என உருவகப்படுத்தியுள்ளார். மனிதன் தளைகளற்றுப் பிறந்தவன். கீழ்ப்படிதலுக்கு அவனுக்கும் எந்தத் தேவைப்பாடும் இல்லை. ஒருவனின் விருப்பின்றி எவரும் அவனை கட்டளை இட முடியாது. இந்தக் கருத்துக்களையே ரொசியு தனது சமுதாய உடன்படிக்கைக் கொள்கையில் முன்வைத்துள்ளார். அதனால், அவனது பெரும்பாண்மையான உரிமைகளுக்காக தனது இயற்கையான ஒரு சில உரிமைகளை சமூகத்தில் பாதுகாப்பிற்காக விட்டுக் கொடுத்துள்ளான்.

இந்த ஆண், பெண் தனித்துவம் இருபாலருக்குமிடையிலான சமத்துவம். பெண் விடுதலைக் கொள்கைகள் என்பன முன்நிலை வகிக்கின்றன. சந்தேகமே இல்லை! இஸ்லாமிய மற்றும் மேற்கத்திய கலாச்சாரங்கள் இந்து கலாச்சாரத்துடன் கலந்த போதே உள்ளுர் வாழ்க்கை முறையி;ல் வெளியூர் சமூக விழிப்புத் தோற்றத்தை உருவாக்கியது. அர்த்தநாரீஸ்வரர் என்ற கருத்தினால் சமத்துவமான இருவரில் பூரணப்படுத்தும் அலகாக உருவகப்படுத்தப்பட்ட பெண், அடிமை மற்றும் காமப் பொருள் என்ற நிலைக்குத் தாழ்த்தப்பட்டாள்.

உண்மையில் பண்டைக் காலத்தில் இந்திய சமுதாயத்தில் பெண் ஓர் உன்னத நிலையைப் பெற்றிருந்தாள். அவள் பாதுகாக்கப்பட்டாள். அன்பு செலுத்தப்பட்டாள், மதிக்கப்பட்டாள் காரணம் அவள் அடுத்த பரம்பரையைப் பெற்றெடுத்தாள். என்னை பிழையாக கருதாவிட்டால், என்னை ஒரு விடயத்தைக் கூற அனுமதியுங்கள். யாழ்ப்பாணக் குடாநாட்டில் சில வருடங்களுக்கு முன்னர், தற்போது அங்கு வதியும் தெற்கின் ஆமியினர் மீள கைப்பற்று முன்னர் யாழ்நகர் வீதிகளில் சூரிய அஸ்தமனத்தின் பின்னரும் தன் விலை உயர்ந்த நகைகளை அணிந்த வண்ணம் ஓர் இளம் பெண் தன்னந்தனியே ஒருவித துன்புறுத்தலோ அல்லது துஷ்பிரயோகத்திற்கோ உட்படாது நடந்து செல்லாம் என்று பார்தட்டிக் கொண்டனர். எமது முன்னோர்களின் விழுமியங்களையும் கோட்பாடுகளையும் தமிழ் இளைஞர்கள் விளங்கிக் கொண்டுள்ளனர் என்பது தெட்டத் தெளிவாகின்றது. பெண்களை மதிக்கும் ஒரு சமுதாயம், சமுதாய நலன் மற்றும் ஒருமைப்பாட்டில் மிக உயர்;ந்த நிலையை அடையும் என்பது திண்ணம். எமது இந்துமத பாரம்பரியம் பெண்களின் முக்கியத்துவத்தையும் அவர்களது நலன்களைப் பற்றியும் வலியுறுத்துகின்றது.

திருமதி சிவானந்தி துரைசாமி அவர்களை உங்களிற்கு அறிமுகப்படுத்துவது எனது இனிய கடமையாகும். அவரைப் பற்றி என்னை விட நீங்கள் கூடுதலாக அறிந்திருப்பீர்கள். அவரது சமூக, கல்விசார் மற்றும் கலாசார நடவடிக்கைகள் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். அதனால் அவரைப் பற்றி நீங்கள் எல்லோரும் அறிந்திராத விடயங்கள் பற்றிக் கூறுகின்றேன்.

இந்த சமகாலத்து தெளிவான இலங்கைத் தமிழ் பெண்மணி கலை, நுண்கலை இரண்டிலும் பூரணமானவர். அவர் லண்டன் பல்கலைக்கழகத்தின் கலைப்பட்டதாரி; அவர் பியானோ, வீணை இரண்டையும் மிகவும் அழகாக வாசிப்பார். பீஜிஸ், மணிலா, கொழும்பு ஆகிய இடங்களில் தனது சித்திரக் கண்காட்சிகள் பலவற்றை நடாத்தியுள்ளார். இராமகிருஷ்ண மிஷன் கலாச்சார ஆதரவுடன் கல்கத்தா அரும்பொருட் காட்சியகத்தின் பணிப்பாளரின் வழிநடத்திலின் கீழ் இந்துக் கலையில் ஆராய்ச்சிக் கல்வியை மேற்கொண்டு சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலைகளைகற்றத் தேர்ந்துள்ளார்.

அவர் “Remembering Hindu Traditions”, “The creative touches of the chisel- Hindu sculpture and architecture” மற்றும் “The Foot falls on Time- A story of our saints and sages” அடங்கலான பல பத்தகங்களின் ஆசிரியராவார். அவர் தற்போது பல கல்வி, சமய, கலாச்சார, சமூக நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்திவரும் சைவ மங்கையர் கழகத்தின் தலைவராகவும், இலங்கை இந்து மன்றத்தின் தலைவராகவும் உள்ளார்.

அவரது எண்ணிலடங்கா சமூக, இலக்கிய, கல்விசார் சேவைகளுக்கு 'சொன்டா' சர்வதேச விருது, கொழும்பு கம்பன் கழக விருது, நீதி அமைச்சின் சமாதான விருதி போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். பல பாலமாக சமாதான முன்னெடுப்புக்களில் ஈடுபட்டிருந்தவரும் தூதரகராக தொழில் புரிந்த அவரது மறைந்த கணவருடன் பல இடங்களுக்கு அவர் சென்று வந்துள்ளார். அவர் கொழும்பிலும் வெளிநாடுகளிலும், வேறு பொதுக் கூட்டங்களில் இந்து மதத்தின் நோக்கங்கள் பற்றி பல ஆராய்ச்சி கட்டுரைகளை முன்வைத்துள்ளார். திருமதி சிவானந்தி துரைச்சாமியாரின் தம்பியும் நானும் றோயல் கல்லூரியில் ஒரே வகுப்பில் கல்வி கற்ற காரணத்தினால் என்னைவிட வயதில் மூத்தவர் என்று கூறும், ஆனால் தோற்றத்தில் என்னைவிட குறைந்தது பதினைந்து வருடங்களாவது இளமையாகத் தோற்றமளிக்கும் அவர், நிச்சயமாக மாறிவரும் உலகத்தில் பெண்ணிற்கு இந்து மதம் அளிக்கும் பதிலுரை பற்றி விரிவாக கூறுவார்.

'மாறும் உலகில் பெண் - இந்து மதத்தின் பதில் உரை' உன்ற தலைப்பில் இந்த வருட நாமகல் காசிப்பிள்ளை ஞாபகார்த்த உரையை வழங்க அவரை அன்புடன் அழைக்கின்றேன்.

கடந்த காலங்களின் தனித்துவமான இந்துப் பெண்மணியான சொல்வி நாகம்மாள் காசிப்பிள்ளையை நினைவுகூறும் இந்த விழாவில் நானும் பங்குகொள்ள சந்தர்ப்பம் வழங்கிய காசிப்பிள்ளை குடும்பத்தாருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

[வெள்ளவத்தை, சைவ மங்கையர் கழக அதிபர் அமரர் செல்வி நாஹம்மாள் காசிப்பிள்ளை ஞாபகார்த்த மூன்றாவது உரை நிகழ்வு, ஜனவரி 16, 2008 அன்று கழகத்தின் சிவானந்த நிலைய மண்டபத்தில் இடம் பெற்றது]

February 04, 2008

'நெஞ்சு பொறுக்குதில்லையே'

இரத்மலானை இந்துக் கல்லூரியின் முத்தமிழ் விழா 2008 நிகழ்வு கடந்த 28-01-2008 அன்று மாலை 4 மணிக்கு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை இங்கு தொகுத்துத் தரப்படுகின்றது:

மீண்டும் உங்கள் கல்லூரி விழாவொன்றில் பங்குபற்றுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அதுவும் முத்தமிழ் விழா என்பதால் உங்கள் இயல், இசை நாடகத் திறமைகளைக் காணும், இரசிக்கும் ஒரு வாய்ப்பைப் பெற்றுள்ளேன். 

எப்பொழுதுமே ஒரு காலகட்டத்திக் இயல், இசை நாடக இலக்கியப் படைப்புக்கள், அக் காலகட்டத்தின் சமகால அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளை, சிந்தனைகளை, எதிர்பார்ப்புக்களை வெளிக்கொண்டு வருவனவாக, சித்தரிப்பவையாக, பிரதிபலிப்பனவாக அமைவன நீங்களும் அதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல என்பதை உங்கள் படைப்புக்கள் எடுத்துக் காட்டுகின்றன.

நான் றோயல் கல்லூரியில் ஐம்பத்தேழு வருடங்களுக்கு முன் படித்த காலத்தில் பிரித்தானியரின் குடிநாடாக இருந்த இலங்கை அப்பொழுதுதான் அடிமைத்தலை நீங்கிச் சுதந்திர நாடாக மாறியிருந்தது. அந்தக் காலகட்டத்தில் சிங்களவரும் தமிழரும் திருமணமாகி இளந்தம்பதியர் தமது இல்லற வாழ்வு எப்படி அமைய வேண்டும் என்று கனவு கண்டிருப்பார்களோ அதே மாதிரியான ஒரு மனோநிலையில் தான் இருந்தனர். மாணவர்களாகிய நாங்கள் சுதந்திர இலங்கையின் வருங்காலம் எப்படி இருக்கும். எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் கனவு கண்டோம், ஆங்கில மோகம் மாற வேண்டும். தமிழ், சிங்கள மொழிப் பாண்டித்தியம் பரவ வேண்டும், பொருளாதார விருத்தி பெற்ற நாடாக இலங்கை மலர வேண்டும் என்று விழாக்களில் கூறியது மட்டுமன்றி ஆங்கில மோகத்தில் வளர்ந்த, ஊயிறிருந்த மக்களையும் மக்கட் தலைவர்களையும், நையாண்டி செய்து எங்கள் இலக்கிய விழாக்களை நடத்தினோம். உள்ளே காற்சட்டை அணிந்து அதன் பிறகு சாரம் அணிந்து மேல்கோட் அணிந்து தலையில் சீப்பு வைத்து வலம் வந்த அப்புஹாமிகளைப் பற்றி விமர்சித்தோம். பரிகசித்தோம். விகடகவிகள் எழுதினோம். அதே நேரந் தலையில் நன்றாக நல்லெண்ணை தேய்த்து, சுருட்டுப் பற்றவைத்து முருங்கைக்காய்க் கட்டுகளைச் சுமந்து வந்த அப்புச்சாமிகளையும் அரட்டைக்குள்ளாக்கினோம். இவற்றைச் சிங்களத் தமிழ் மாணவர்கள் சேர்ந்தே செய்தனர். ஆங்கில மொழி அப்பொழுது எங்களைப் பிணைத்து வைத்திருந்தது.

ஆனால், திருமணமான எட்டு ஆண்டுகளுக்குள்ளேயே மண வாழ்க்கை கசக்கத் தொடங்கியது. ~~சிங்களம் மட்டும் சட்டத்தைப் பெரும்பான்மையினத்தவர்கள் ஆங்கிலேயரால் ஒன்றிணைக்கப்பட்ட இலங்கையின் பாராளுமன்ற ஜனநாயக பலத்தைப் பாவித்து நடைமுறைக்குக் கொண்டு வந்தார்கள். அன்றிலிருந்து இன்றுவரை இலங்கைத் தமிழர்களின் அந்த இல்லற வாழ்வு இன்னல் வாழ்க்கையாகவே இருந்து வந்துள்ளது. கணவன் அடிக்கின்றான், துன்புறுத்துகின்றான் என்று அடுத்த வீட்டுக்காரனிடம் முறையிட்டால், ~~வருகிறாயா எனக்கமைவாக அடிமை வாழ்க்கை வாழ?|| என்று கேட்கிறான். ~~என்னடி பத்தினி வேஷம் போடுகிறாய்|| என்று இலங்கைத் தமிழரை இம்சைப்படுத்தப் பார்த்த அடுத்த வீட்டுக்காரனை அடித்து உதைத்ததால் அங்கு போகவும் முடியாதுள்ளது. விவாகரத்துப் பெறலாம் என்றால் அதற்கு அயலவர்கள் எவரும் சம்மதிக்க மாட்டார்கள் போலத் தெரிகிறது. புருஷனிடம் அடிபட்டு உதைப்பட்டு அல்லல்பட்டுத்தான் வாழ்க்கையை நடத்த வேண்டுமா என்ற ஒரு கட்டத்திற்குத் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இவ்வளவுக்கும் இலங்கைத் தமிழன்னையின் இன்னொரு அங்கலாய்ப்பு அவளின் மக்களின் ஒற்றுமையின்மை, ஒருத்தரை ஒருத்தர் காட்டிக் கொடுக்கின்றார்கள். தம்பியை அடிக்க அண்ணன்மார், துப்பாக்கி எடுத்துக் கொடுக்கின்றார்கள். அதுவும் பதவி மோகத்தில், பகை காட்டுவோருக்குப் பணிந்து பணிவிடை செய்கின்றார்கள். இப்படி ஒரு அவல வாழ்க்கை வாழும் இலங்கைத் தமிழ் மக்களின் மத்தியில் எங்கள் இலக்கிய நாயக, நாயகிகள் இன்று உயிர் பெற்றுத் திரும்பி வந்தால் எங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் கற்பனை பண்ணத் தொடங்கியுள்ளார்கள் எங்கள் மாணவ மாணவிகள். அவர்கள் பார்வையில் இருந்து தெரியவருவது என்னவென்றால், இன்றைய கள நிலை கவலைக்குரியதாக இருக்கின்றது என்பதே பெரியவர்களாகிய நாங்கள் செய்த தவறுகள் தான் இளம் நெஞ்கங்களைக் குமுற வைக்கின்றனவோ என்று எண்ண வேண்டியுள்ளது.

என்றாலும் தமிழர் வாழ்க்கையில் இவையெல்லாம் சகஜம் என்று கூறுமாப்போல் அன்றும் இன்றும் எங்களை வழி நடத்தும் ஒரு சுந்தரத் தமிழ் மகன், சுந்தரத் தமிழ் நெஞ்சன், எமக்கு ஒரு விதத்தில் ஆறுதல் கூறுமாப் போல் பாக்களை யாத்துத் தந்துதவிச் சென்றுள்ளான். எத்தனையோ பாரதிகள் வாழ்ந்த தமிழ் நாட்டில் ~~பாரதியார்|| என்ற பெயருக்குப் பொருந்திய பாத்திரமாகக் கணிக்கப்பட்டவர் தான் அந்தத் தமிழ் மகன் சுப்பிரமணிய பாரதியார்.

அரை நூற்றாண்டுக்கு முன்னரும் எங்கள் முத்தமிழ் விழாக்களில் அவன் பாடல்கள் ஒலித்தன. இன்றும் அதே நிலைதான். சமகால சமுதாயத்தைப் பார்த்து, அதன் அடிமைத்தனத்தைப் பார்த்து அதன் அவலத்தைப் பார்த்து, அதன் அழுகையைப் பார்த்து மனம் பதைபதைத்துச் செந்தமிழ்ப் பாக்களினால் தனது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தியவன் பாரதி. அவனின் அன்றைய உள்ளக் குழுறல்கள் வேறுபட்ட, மாறுபட்ட இன்றைய சூழலிலும் பொருந்துகின்றன என்றால் அதுதான் அவனின் இலக்கியப் படைப்;புக்களுக்குப் பெருமையையும் பெறுமதியையும் வாங்கித் தருகின்றது. அதேநேரம் தமிழர் குணங்கள் அன்றும் மாறவில்லை இன்றும் மாறவில்லை என்று எண்ணத் தோன்றுகின்றது.

நெஞ்சு பொறுக்குதில்லையே என்று அன்று அவன் கூறியது இன்றும் எமக்குப் பொருந்துகின்றது. நிலைகெட்ட இன்றைய இலங்கைத் தமிழ் சமுதாயத்தைப் பார்த்துத்தான் பாரதி கவிதை யாத்தானோ என்று மலைக்க வேண்டியுள்ளது அவனின் அந்தப் பாடலில் ஒரு செய்யுட் பகுதி பின்வருமாறு அமைகிறது.

சிப்பாயைக் கண்டு அஞ்சுவர் ஊர்ச்

சேவகன் வருதல் கண்டு மனம் பதைப்பார்

துப்பாக்கி கொண்டு ஒருவன் - வெகு

தூரத்தில் வரக் கண்டு வீட்டில் ஒளிப்பார்||

இதுதானே இன்று தமிழ்ப் பிரதேசங்களில் காணப்படும் நிலை!

1988-89 அளவில் ஒரு நண்பர் யாழ்ப்பாணத்தில் இருந்த குடும்ப சமேதரராய் வந்து என்னைக் கொழும்பில் கண்டார். திடீரென்று அவரின் ஆறு வயது மகன் நடுங்கி Settee பின் ஒளிந்து கொண்டான். ஏன் என்று கேட்டதில் ஹெலி! ஹெலி!! என்று கத்தினான். வானூர்தி ஒன்றின் சப்தம் கேட்டதும் அவன் தாம் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றோம் என்ற எண்ணத்தில் பதைபதைத்துப் போனான். அன்றைய நிலை இன்னமும் மாறவில்லை.

அதே பாடலில் இன்னொரு இடம் பின்வருமாறு அமைகிறது

நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த

நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்

கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு

கோடி என்றால் அது பெரிதாமோ

ஐந்து தலைப் பாம்பென்பான் அப்பன்

ஆறதலை யென்று மகன் சொல்லி விட்டால்

நெஞ்சு பிரிந்திடுவார் பின்பு

நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்

இப்படித்தானே எங்கள் பகைமைகள் எமது சமுதாயத்தை இன்றும் சீரழித்து வருகின்றன.

மாணவ மாணவியரின் இன்றைய படைப்புக்கள் அவர்களின் உள்ளக் குமுறல்களை வெளிக்காட்டுகின்றன என்று கொள்ளலாம். சிரிப்பு மூட்டினாலும், சில படைப்புக்கள் சிந்தனையைக் கிளறிவிடுவதாக அமைந்துள்ளன. ஆழச் சிந்திக்கவும் வைத்துள்ளன. 

பலவித தடங்கல்கள், தடைகள் என்பவற்றையும் தாண்டியே மாணவ மாணவிகள் இந்த முத்தமிழ் விழாவினை அரங்கேற்றுகிறார்கள் என்பதை நாம் அறிவோம். அவர்களின் குறைகளைக் கருதாமல் நிறைகளை மட்டும் மனதில் எடுத்து அவர்களைப் பாராட்டுவோமாக!

இன்றைய மாணவ உள்ளங்கள் தான் நாளைய மாமனித உள்ளங்கள், அவர்கள் பார்வையில் இன்றைய காலகட்டம் எவ்வாறு அவர் கண்களுக்குப் புலப்படுகின்றது என்பதை அவதானிக்கும் போது அவர்கள் காலத்தில் அவர்கள் எங்கள் பிழைகளைத் திருத்தி நல்வாழ்வுக்கான அத்திவாரத்தை சகவாழ்வுக்கான அடித்தளத்தை அமைக்கத் தம்மால் இயன்ற சகலதையும் செய்வார்கள். செய்ய வேண்டும் என்று எண்ணத் தோன்றுகின்றது. உங்கள் அனைவருக்கும் இறைவன் அருள் கிட்டுவதாக என்று பிரார்த்தித்து இந்தச் சிற்றுரையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். 

[சுப்பிரமணிய பாரதியார்:யாழ் நல்லூரில் சிலை-படப்பிடிப்பு: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை]